மலாவியை மிரட்டும் மீளாப் பெருந்துயர் ஃப்ரெடி புயல்!

மலாவியை மிரட்டும் மீளாப் பெருந்துயர் ஃப்ரெடி புயல்!

மலாவி... அதிகாரப்பூர்வமாகக் கூறுவதென்றால் மலாவி குடியரசு, தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடு, இது முன்னர் நயாசலாந்து என்று அறியப்பட்டது. இது மேற்கில் ஜாம்பியா, வடக்கு மற்றும் வடகிழக்கில் தான்சானியா மற்றும் கிழக்கு, தெற்கு மற்றும் தென்மேற்கில் மொசாம்பிக் நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது.

45,747 சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ள மலாவியின் மக்கள் தொகை 1,94,31,566 (ஜனவரி 2021 நிலவரப்படி)

மலாவி உலகில் மிகக் குன்றிய வளர்ச்சி கொண்ட நாடுகளில் ஒன்றாகும். பொருளாதாரம் பெரிதும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது, மேலும் இது பெரும்பாலும் கிராமப்புற மற்றும் வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. நாடு அதன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள பெரும்பாலும் அண்டை நாடுகள் மற்றும் ஐநாவின் உதவியைச் சார்ந்துள்ளது.

மலாவியின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் லிலாங்வே என்கிறார்கள். அதன் இரண்டாவது பெரிய நகரமென Blantyre ஐக் கூறுகிறார்கள், அதன் மூன்றாவது பெரிய நகரம் Mzuzu மற்றும் அதன் நான்காவது பெரிய நகரம் அதன் முன்னாள் தலைநகரான Zomba என்கிறார்கள்.

இந்நாட்டிற்கு மலாவி என்ற பெயர் மராவி என்னும் சொல்லில் இருந்து கிளைத்து வந்திருக்கிறது, மராவி என்பது இப்பகுதியில் வசிக்கும் சேவா மக்களின் பழைய பெயர் என்கிறார்கள். அந்நாட்டு மக்கள் பிற தேசத்தவர்களிடம் காட்டும் நட்புறவு காரணமாக "ஆப்பிரிக்காவின் வெதுவெதுப்பான இதயம்" என்று செல்லப்பெயர் இந்நாட்டிற்கு உண்டு.

ஆப்பிரிக்காவின் வெதுவெதுப்பான இதயம்!

மொத்தத்தில் அது ஒரு குட்டி நாடு. அதன் மொத்த மக்கள் தொகையே 2 கோடியைத் தொடவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த வெதுவெதுப்பான இதயம் கொண்ட குட்டி தேசத்தைத் தான் இன்றைக்கு சைக்ளோன் ஃப்ரெடி புரட்டிப் போட்டிருக்கிறது. இன்னும் அதன் ஆட்டம் அடங்கவில்லை என்கிறார்கள். விட்டால் மொத்த தேசத்தையும் சுருட்டி எடுத்துக் கொண்டு போய் எங்கேனும் பாலைவனத்தில் சொருகி விடும் போலிருக்கிறது அதன் பேயாட்டம்.

இது வரை 5,00,000 பேர் கடும் பாதிப்பு, இறப்பு எண்ணிக்கை 500!

ஃப்ரெடி சூறாவளி மலாவியில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது, இது ஒரு சாதனைப் பேரழிவிற்குப் பிறகு இந்த வாரம் சற்று மட்டுப்பட்டிருப்பதாகத் தகவல்.

மலாவியை மிரட்டும் இந்த ஃப்ரெடி புயல் குறித்து சற்று விரிவாக அறிந்து கொள்வோம்.

19 மார்ச் 2023 அன்று அல் ஜசீரா வெளியிட்ட அறிக்கையின்படி, கொடிய சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 522 ஆக உயர்ந்துள்ளது.

இந்தப் புயலானது தெற்கு மலாவியில் ஆறு நாட்களில் ஆறு மாத மதிப்புள்ள மழையை கொட்டியது, நாட்டின் உள்கட்டமைப்பை கடுமையாக சேதப்படுத்தியதோடு விவசாய நிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது.

இந்தக் கடுமையான புயலால் "5,00,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) ஒரு அறிக்கையில் கூறியது,மேலும் 1,83,100 க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா, "காலப்போக்கில் அதிகமான பகுதிகள் அணுகப்படுவதால், சேதம் மற்றும் இறப்புகளால் இங்கு காட்சிகள் இன்னும் மோசமடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

"ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் ஏற்கனவே அதிக அளவில் நிறைந்திருந்த போது மழைக்காலத்தின் முடிவில் இந்த மோசமான வானிலை அமைப்பு மலாவியைத் தாக்கியது" என்று OCHA கூறியது.

UN உலக உணவுத் திட்டத்தின் (WFP) தேசிய இயக்குனர் பால் டர்ன்புல் வெள்ளிக்கிழமை கூறுகையில், "நாட்டிற்கு குறிப்பிடத்தக்க ஆதரவு தேவைப்படும்" என்பது தெளிவாகிறது. நாட்டின் பல பகுதிகள் அணுக முடியாத அளவுக்கு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் "மதிப்பீடு மற்றும் மனிதாபிமான குழுக்கள்” உயிர்காக்கும் பொருட்களின் தேவை மற்றும் இயக்கத்தை கட்டுப்படுத்தி உரியவர்களுக்கு விரைவில் உதவி சென்று சேருமாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன,

இந்தக் கடினமான சூழ்நிலையில் சேதங்களில் இருந்து மீள எங்களால் முடிந்தவரை விரைவாக முன்னேறுகிறோம்," என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மேலும் , இந்த சோகமான" சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சுமார் 1,30,000 மக்களுக்கு உதவுவதாகவும் அவர் உறுதியளித்தார்.

புயலால் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 1,83,000!

அத்துடன், அரசாங்கக் கணக்கீட்டின்படி, இந்தக் கொடும்புயலால் இதுவரை இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை 1,83,000 க்கும் அதிகமானதாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது, எனவே மனிதாபிமான தேவைகளைச் சமாளிக்க உலகளாவிய உதவிக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறோம் என்றும் சக்வேரா கூறினார்.

உயிர் பிழைத்தவர்கள் தங்க 300 அவசர முகாம்கள்…

உயிர் பிழைத்தவர்களுக்காக 300 க்கும் மேற்பட்ட அவசர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன, அதே வேளையில் இராணுவமும் போலிஸாரும் சடலங்களைத் தேடி வருகின்றனர்.

காலராவின் தாக்கத்தில் இருந்த மலாவியைத் துடைத்து ஒழித்த மீளாப் பெருந்துயர் ஃப்ரெடி!

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மலாவி அதன் கொடிய காலரா வெடிப்பின் பிடியில் இருந்தபோது இந்தப் புயல் தாக்கியது.

இதன் காரணமாகத் "தற்போதைய காலரா வெடிப்பு மேலும் மோசமடையக்கூடிய ஆபத்து உள்ளது, இந்த நெருக்கடி நிலையில் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள்" என்று UNICEF செய்தித் தொடர்பாளர் Fungma Fudong செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

ஃப்ரெடி சூறாவளி மலாவியில் சுமார் 2,80,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளை அவசர நெருக்கடித் துயருக்கு பலிகடாவாக்கி விட்டுச் சென்றுள்ளதாக யுனிசெஃப் குறிப்பிட்டது, அவர்களுக்கெல்லாம் உடனடியாக அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது.

'வீடு இல்லை, உணவு இல்லை'

வணிக மையமான Blantyre ல் இருந்து கிழக்கே 120 km (75 மைல்) தொலைவில் அமைந்துள்ள மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான Phalombe ஐச் சேர்ந்த 29 வயதான மூன்று குழந்தைகளின் தாயான Mervis Soko, புயல் தனது குடும்பத்தை வறுமையில் ஆழ்த்தியதாகக் கூறினார்.

"நாங்கள் ஆதரவற்றவர்கள், எங்களிடம் எதுவும் இல்லை. நாங்கள் வெறும் மக்கள். எங்கள் பயிர்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சேதமடைந்த மற்றொரு பகுதியில் இருந்த மகலாவும் அவரது கணவரும் தங்கள் வீட்டில் இருந்த இடிபாடுகளில் இருந்து இரும்புத் தகடுகளையும் செங்கற்களையும் எடுத்தனர்.

வருடாந்திர அறுவடைக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், "நாங்கள் விதைத்துப் பாடுபட்டு வளர்த்து வைத்த உருளைக்கிழங்கு, மக்காச்சோளம் என அனைத்தும் போய்விட்டது" என்று மகலா வருத்தப்படுகிறா.

"வீடு இல்லாமல், உணவு இல்லாமல் இந்த வருடத்தை எப்படிக் கடப்போம் என்று என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை" என்று கூறும் மகாலா நான்கு குழந்தைகளின் தாய்.

ஜாம்பியா நீட்டிய உதவிக்கரம்…

அண்டை நாடான ஜாம்பியா நூற்றுக்கணக்கான கூடாரங்கள், போர்வைகள், கொசு வலைகள், மக்காச்சோளம் மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்க முன்வந்துள்ளது என்று அதன் பாதுகாப்பு அமைச்சர் ஆம்ப்ரோஸ் லுஃபுமா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி பிற்பகுதியில் தென்னாப்பிரிக்காவை முதன்முதலில் சூறாவளி தாக்கிய போது, மடகாஸ்கர் மற்றும் மொசாம்பிக் பகுதிகள் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகின, மலாவி பாதிக்கப்படவில்லை.

பின்னர் அந்தப் புயலானது இந்தியப் பெருங்கடலில் மீண்டும் நகர்ந்தது, அங்கு அது சூடான நீரில் இருந்து அதிக சக்தியை ஈர்த்துக் கொண்டது, அதற்கு முன் இரண்டாவது முறையாக நிலப்பரப்பில் மோதுவதற்கு ஒரு அரிய பாதையை மாற்றியது.

புதன் கிழமை முதல் மழை குறைந்துள்ளது, ஆனால் ஃப்ரெடி இன்னும் உலகின் மிக நீளமான வெப்பமண்டல புயல்களில் ஒன்றாக மாறுவதற்கான பாதையில் உள்ளது.

- என அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் அச்சத்துடன் எச்சரித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com