வையகம் போற்றிடும் வைகாசி விவாகம்!

வையகம் போற்றிடும் வைகாசி விவாகம்!

மாதங்களில் மார்கழியாய் இருக்கும் மாதவனின் மனம் கவர்ந்த மாதம் வைகாசி.  வைகாசி மாதத்துக்கு, ‘மாதவ மாதம்‘ என்றொரு பெயரும் உண்டு. யுகங்களில் க்ருத யுகத்துக்கு தனிச் சிறப்பு உண்டு. புனிதத் தீர்த்தங்களில், கங்கைக்கு தனியொரு ஏற்றம் உண்டு. தானங்களில்  நீர் தானம் மிகச் சிறப்பானது. ‘மாதங்களில் வைகாசி மாதமே மிகச் சிறந்த மாதம்‘ என்று கூறுகிறது ஸ்கந்த புராணம். நாரத முனிவர் அம்பரீஷரிடம் பெருமாளுக்கு மிகவும் பிடித்த மாதம் வைகாசிதான் என்று சொல்லி இருப்பதாகப் புராணக் குறிப்புகள் எடுத்துரைக்கின்றன. பகவானுக்கு உகந்ததாக வைகாசி மாதம் இருப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருப்பதால்தானோ என்னவோ, திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள், பத்மாவதி தாயாரை நாராயண வனத்தில் மணம் புரிந்து கொண்டது இந்த வைகாசி மாதத்தில்தான்.

வைகாசி மாத சுக்ல பட்ச  தசமி நன்னாளில்தான் அகிலாண்டகோடி ப்ரும்மாண்ட நாயகனான அந்த ஏழுமலையானுக்கும், பத்மத்தில் உதித்து, ஆகாசராஜனால் வளர்க்கப்பட்ட அந்த பத்மாவதி தாயாருக்கும் நாராயண வனத்தில் திருமணம் நடந்தது. திருச்சானூர் பத்மாவதி தாயாரின் பிறந்த ஊர், அதாவது தாய் வீடு நாராயண வனம்தான்.

ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் பற்றி சற்றே அறிந்து கொள்வோமா? ஒரு முறை ரிஷிகள் எல்லோருமாக ஒன்று கூடி ஒரு பெரிய யாகத்தை நடத்தினர். அப்படி அவர்கள் யாகம் செய்து கொண்டிருக்கும் போது, அவ்வழியே வந்த நாரதர், ‘இந்த யாகத்தின் ஹவிர் பாகத்தை யாருக்குத் தரப்போகிறீர்கள்?‘ என்று அவர்களிடம் கேட்டார். ‘சத்வ குணம் கொண்ட ஒரு தேவதைக்குதான் இந்த ஹவிசை கொடுக்க வேண்டும்‘ என்று முடிவெடுத்த ரிஷிகள், அவ்வழியே வந்த பிருகு முனிவரிடம், ‘முனிவரே, இந்த யாகத்தின் ஹவிசை சத்வ குணம்  நிறைந்த தேவதையிடம் நாங்கள் கொண்டுசேர்க்க  நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும். யார் சத்வ குணம் கொண்ட தேவதை என்று கண்டுபிடித்து கொடுக்க வேண்டும். இதைத் தாங்கள் செய்ய முடியுமா?‘ என்று கேட்க, அவரும் சந்தோஷமாக அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மூவுலகுக்கும் செல்ல ஆரம்பித்தார்.

முதலில் கயிலாச பர்வதத்துக்குச் சென்றார். அங்கே பரமசிவனும், பார்வதி தேவியும் ஆனந்தமாக நடனமாடிக்கொண்டு, முனிவர் வந்ததையே பார்க்காமல் இருந்து விட்டார்கள். முனிவருக்கு அவர்களின் செயல் கோபத்தை வரவழைக்க, பரமசிவனுக்கு சாபத்தை கொடுத்து விட்டு, பிரம்மா இருக்கும் சத்ய லோகத்துக்கு சென்றார் பிருகு முனிவர். அங்கேயோ சரஸ்வதி தேவியும், பிரம்மாவும் ஏதோ பேசிக் கொண்டு இருந்தார்களே தவிர, பிருகு முனிவரை கவனிக்காமலேயே இருந்து விட்டனர்.  அதனால், மேலும் கோபம் அடைந்த பிருகு முனிவர், பிரம்மாவையும் சபித்து விட்டு, வைகுண்ட லோகத்தை நோக்கி விறு விறுவென பயணிக்க ஆரம்பித்தார். அங்கே ஸ்ரீ மந்நாராயணன் பாற்கடலில் யோக நித்திரையில் இருந்தார். பிருகு முனிவரை வரவேற்கவில்லை. கோபம் பொங்க பிருகு முனிவர், எம்பெருமானின் திருமார்பில் எட்டி உதைத்தார். பதறி அடித்து எழுந்த பெருமான் சட்டென்று பிருகு முனிவரின் காலை பிடித்து, ‘உங்கள் பாதம் வலிக்குமே‘ என்று சொல்லியபடியே முனிவரின் பாதத்தை மிருதுவாகத் தடவி தந்தார். அடடா, சத்வ குணம் பொருந்திய தேவதை சாட்சாத் இந்த பெருமாள்தான். ரிஷிகளிடம் இதை உடனடியாகச் சொல்ல வேண்டும் என குதூகலித்தவாறு பிருகு முனிவர் ஒருபுறம் செல்ல, பகவானின் செயலால் கோபம் கொண்ட மகாலட்சுமி, பகவானின் திருமார்பிலிருந்து இறங்கி வேறுபுறம் செல்ல ஆரம்பித்தாள்.

காலட்சுமி கோபித்துக் கொண்டு பூலோகத்தில் கரவீரபுரம், அதாவது கோலாப்பூர் எனும் இடத்துக்கு வந்து சேர்ந்தாள். ஸ்ரீயை பிரிந்து ஸ்ரீனிவாசனால் எப்படி இருக்க முடியும்? தானும் வைகுண்டத்தை விட்டு உடனே பூலோகத்துக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணிய பெருமாள், மேலிருந்து கீழே பூமியை நோக்க அங்கே உயரமாய் அழகாய் இருந்த திருமலையான ஏழுமலை அவர் கண்களில் பட, ‘சரி அந்த திருமலைக்கே போய் திருமகளை குறித்து தவம் இருப்போம்‘ என எண்ணியவராய் திருமலைக்கு வந்தார் பெருமாள். வராஹ பெருமாளிடம் அனுமதி பெற்று புளிய மரமும், புற்றும் இருந்த இடத்திலே உட்கார்ந்து கொண்டு தவம் செய்ய ஆரம்பித்து விட்டார் ஸ்ரீமந் நாராயணன். புற்று மெல்ல வளர்ந்து பெருமானையே ஒரு கட்டத்தில் மூடி விடும் அளவுக்கு வளர்ந்தே விட்டது.

பெருமாள் இப்படி உண்ணாமல், உறங்காமல் தவம் புரிவதை பார்த்து கவலை கொண்ட பிரம்மாவும், சிவனும் கோலப்பூரில் உள்ள மகாலட்சுமியிடம் பெருமாளின் நிலையை எடுத்துச் சொல்ல, உடனே தாயார் தானே மாட்டுக்காரனாக வேடம் கொண்டு, பிரம்மாவையும், சிவனையும் பசு மாடாகவும், கன்று குட்டியாகவும் மாற்றி பெருமாள் தவம் இருக்கும் இடத்தின் அரசனிடம் அந்த மாட்டையும் கன்றுக்குட்டியையும் விற்றுவிட்டு வந்து விட்டாள். எல்லா மாடு, கன்றுகளையும் போல மேய்ச்சலுக்கு செல்லும் இந்த பசுவும், கன்றுக்குட்டியும் மேய்ச்சலுக்கு போய் விட்டு வரும்போது, பால் கரக்காமல் இருப்பது ஏன் என்று யோசித்த இடையன் (மாட்டுக்காரன்) ஒரு நாள் அந்த மாட்டையும் கன்றுக்குட்டியையும் பின் தொடர்ந்தான். பசு புற்றின் மீது சென்று தானாக பால் சுரந்து விட்டு வருவதை கவனித்தான் அவன்.

இதை இப்படியே விட்டு விடக்கூடாது என்று எண்ணிய அந்த இடையன், மறுநாள் கையில் கொம்போடும் கோடரியோடும் மாட்டின் பின் தொடர்ந்தான். அந்தப் பசு தானாகச் சென்று அந்தப் புற்றின் மீது பால் சொறிவதைப் பார்த்த இடையன், மாட்டை அடிக்க வேண்டும் என்று கொம்பை ஓங்க, புற்றிலிருந்த பகவானுக்கு இந்த விஷயம் தெரிந்து, அவரது தியானமும் தெளிந்து ஒரு ஜீவன் துன்பப்படுவதை தாங்க முடியாமல் புற்றிலிருந்து வெளிப்பட்டு, பசுவின் மீது படவிருந்த அடியை தானே வாங்கிக் கொண்டார். இடையன் கொம்பினால் அடித்தது, மாட்டின் மீது படாமல் பகவானின் தலையின் மீது பட்டு, அவர் தலையிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. அந்த ரத்தம், மாட்டின் மீதும்  இடையன் மீதும் பட்டு விட, இதைப் பார்த்து அந்த இடையன் மயங்கி விட்டான். தன் மீது ரத்தம் படிந்த கறையோடு மாடு நேராக ராஜாவிடம் சென்றது. இடையன் இல்லாமல் பசு மட்டும் தனியாக ரத்தக்கறையோடு வந்திருப்பதைப் பார்த்த ராஜா, உடனே மாட்டோடு சென்று அந்தப் புற்று இருக்கும் இடத்தை அடைந்து விட்டான்.

அங்கே இடையன் கீழே மயங்கி விழுந்திருப்பதையும், புற்றிலிருந்து நெடிய கறுத்த உருவம் (அது பகவான்) என்றே அறியாமல், “நீதான் இடையனை அடித்து விட்டாயா? குற்றம் புரிந்தவன் நீதான் உனக்கு சரியான தண்டனை தர வேண்டும்” என்று ராஜா பகவானை நெருங்க, பகவான் சீற்றம் கொண்டு, “என்ன நடந்தது என்று சரியாக அறிந்து கொள்ளாமல் தண்டனை கொடுக்க முற்படுகிறாயே இது நியாயமா? இனி நீ பிசாசாகப் பிறப்பாய்” என்று சாபம் கொடுத்து விட்டார் பெருமாள். நடுங்கி போய் விட்டான் ராஜா. ”அறியாமல் செய்து விட்டேன் அரியே. எனக்கு எப்போது சாப விமோசனம் கிடைக்கும்” என ராஜா கதற, கருணா சாகரனான பெருமாள், ”கவலைப் படாதே… அடுத்த பிறவியில் நீ ஆகாசராஜன் எனும் அரசனாகப் பிறப்பாய். உனக்கு மகளாக பத்மாவதி பிறப்பாள். அந்த பத்மாவதியை நான் திருமணம் செய்து கொள்வேன்” என்று வாக்களித்தார் பெருமாள்.

று பிறவி எடுத்து ஆகாசராஜனும் பத்மாவதியை அழகாய் வளர்த்து வர, தவம் செய்து கொண்டிருந்த பெருமாளை தாயின் பரிவோடு பார்த்துக்கொள்ள வந்தாள் வகுளமாதா. துவாபர யுகத்தில் யசோதையாக இருந்து கண்ணனின் திருமணத்தை கண்குளிரக் காண முடியவில்லையே என்று ஏங்கியவளின் ஏக்கத்தை தீர்க்க அவளை வகுளமாலிகையாக பிறக்க வைத்து, அவளைத் தாயாராக ஏற்றுக்கொண்டதும் பகவானின் திருவிளையாடல்தானே?

ஒரு நாள் வேட்டைக்காக குதிரை மீது ஏறி பகவான் செல்ல,  வழியில்  ஒரு தோட்டத்தில் தம் தோழிகளோடு பூப்பந்து ஆடிக் கொண்டிருந்தாள் பத்மாவதி. அந்தத் தோட்டத்துக்குள் பெருமாள்  நுழைந்து விட, அங்கிருந்த பெண்கள் அவரை வெளியே செல்லுமாறு சொல்ல, அவர் நேராக பத்மாவதியின் காதில் மட்டும் விழும்படி வேதவதி என்று அழைத்து விட்டுச் சென்றார். ( ராமாயண காலத்தில் வேதவதியாக இருந்தவள்தான் இந்த பத்மாவதி). சட்டென்று ஸ்ரீராமர்தான் இதோ ஸ்ரீனிவாசராக வந்திருக்கிறார் என்பதை உணர்ந்து, ஸ்ரீனிவாசரையே ஸ்மரிக்க ஆரம்பித்தாள் பத்மாவதி.

ஸ்ரீனிவாசர் தன் தாயான வகுளமாலிகாவிடம் தனக்காக ஆகாசராஜனிடம் சென்று பத்மாவதியை பெண் கேட்டு வருமாறு பணிவன்புடன் கேட்க, வகுளமாலிகாவும் தன் பிள்ளை மீது தான் கொண்ட பாசத்துக்காக பெண் கேட்கச் சென்றாள். தன் தாய் சென்று ஆகாசராஜனை சந்திப்பதற்கு முன்பே , பெருமாள் தான் ஒரு குறத்தி வேடம் பூண்டு ராஜாவின் அரண்மனையை சென்று சேர்ந்தார். ஆகாசராஜனின் மனைவியான தாரணி தேவி உடனிருக்க, பத்மாவதியின் கையை பார்த்து , ”மிக அற்புதமான மணமகன் வந்து உங்கள் பெண்ணின் கையை பிடிக்கப்போகிறான். இதோ இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு பெண்மணி இங்கே தன் மகனுக்காக பெண் கேட்டு வருவாள். அவளுக்கு மறுப்பேதும் சொல்லாமல் இருக்கவும்” என்று சொன்னாள் (ர்).

சற்று நேரத்துக்கெல்லாம் வகுளமாலிகாவும் வர, தாரணி தேவி தன் கணவரான ஆகாசராஜனிடம் நடந்தவற்றைக் கூறினாள். ஆகாசராஜனும் மனம் மகிழ்ந்து, தன் குருவை ஆலோசித்து திருமணத்துக்கு நாளும் குறித்து விட்டார். பெருமாளின் திருமணத்துக்கு இந்திரன் மேற்பார்வை பார்க்க, வாயு பகவான் பந்தல் போட, அக்னி பகவானோ சமையல் செய்யும் வேலையை ஏற்றுக்கொள்ள, ஸ்கந்த பெருமான் பத்திரிகையில் பெயர்களை எழுதி அனுப்ப வேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இப்படி கோலாகலமாக திருமணம் நடக்க பண உதவி செய்ய குபேரன் தயாராக இருந்தார். ஆக, பிரம்மாண்ட நாயகனின் திருமண வைபோகம் வைகாசி மாதத்தில் அமர்க்களமாக நடந்தேறியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com