பள பள சருமம் பெற பளிச் டிப்ஸ் 12!

பள பள சருமம் பெற பளிச் டிப்ஸ் 12!

- சக்தி பாரதி

''சருமத்தில் ஏதேனும் திடீர் மாற்றம் ஏற்பட்டால் மருந்துக் கடைகளுக்குச் சென்று, அவர்கள் கொடுக்கும் ஏதோ ஒரு க்ரீமினை வாங்கிப் பயன்படுத்தும் பழக்கம் நம்மிடையே அதிகமாக இருக்கிறது. தானாகவே கண்ட க்ரீம்களைத் தடவிக்கொள்ளாமல் மருத்துவர்களின் உதவியை நாட வேண்டும்” என்று சற்று கடுமையாகவே பேசும் சரும நோய் மருத்துவர்கள் சரும பராமரிப்புக்காகப் பட்டியலிடும் சில பளிச் குறிப்புகள்:

1. தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும். அதிகபட்சம் மூன்றரை லிட்டர் வரை குடிக்கலாம். இதனால் சருமத்தின் சுருக்கங்கள் குறையும். மினுமினுப்புக் கூடும். வயதானாலும் இளமையாக உணரலாம்.

2. நிச்சயமாக ஒவ்வொரு பெண்ணும் தினமும் ஒரு பழமாவது சாப்பிட வேண்டும். பழங்களில் இருக்கும் ஆண்டிஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் ஈ மற்றும் ஏ, சருமத்தை என்றும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

3. இரும்புச்சத்தும் சருமத்துக்குப் போஷாக்கு அளிக்கும். இரும்புச்சத்து அதிகம் கொண்ட உலர் திராட்சை, பாதாம், முந்திரி, பேரிச்சம்பழம், தேன், கருப்பட்டிச் சர்க்கரை, கீரை மற்றும் பசுமை நிறமுள்ள காய்கறிகளை முடிந்தபோதெல்லாம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

4. மன உளைச்சல் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். யோகா, மெடிடேஷன், இசை கேட்பது, ஏதாவது ஒரு கலையில் ஈடுபாட்டுடன் இருப்பது போன்ற செயல்களால் கவலைகளை மறக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

5. எண்ணெயைத் தலையில் வைத்துக்கொண்டு, தலையில் தண்ணீர் ஊற்றிக் குளித்துவிட்டு, எண்ணெய்ப் பசை நீக்காமல் அப்படியே துவட்டிக்கொள்ளும் பழக்கம் நல்லதல்ல. அப்படிச் செய்தால் பொடுகுத் தொல்லை எளிதில் ஏற்படும்.

6.தினமும் நான்கைந்து முறை ஃபேஸ் வாஷ் செய்துகொள்வது நல்லது. சுடுநீரில் முகம் கழுவுவது கூடாது. சருமத்தில் சுருக்கம் ஏற்படும். வெது வெதுப்பான நீரில் கழுவலாம்.

7. ஸ்டீராய்டு க்ரீம்கள் கருப்பு நிறத்தை வெண்மையாக மாற்றும் என்றாலும், நாளடைவில் நிறைய ஆரோக்கியக் கேடுகளை விளைவிக்கும்.

8. ஈர உடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல வியர்வை படிந்த உடைகளையும் உடனுக்குடன் களைந்து உடலைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். இல்லை என்றால் பூஞ்சைத் தொற்றுக்கள் சட்டென வரும். பெண்களுக்கு அக்குள்களிலும், மார்பகங்களுக்கு இடையிலும் வரும் பூஞ்சைத் தொற்றுக்கு இதுவே காரணம். தவிர, நாள்பட்ட பூஞ்சைத் தொற்று இருக்குமானால் அது சர்க்கரை நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம். பூஞ்சைத் தொற்றை நிரந்தரமாகக் குணமாக்கத் தொடர்ச்சியாக 3 மாதங்கள் சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.

9. வாரம் ஒருமுறையாவது உடல் முழுவதும் எண்ணெய் பூசி, பொறுமையாக மசாஜ் செய்துகொள்வது போலத் தடவிக்கொண்டு,  அதன்பிறகு குளிக்க வேண்டும். ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது சிறப்பான பலன் கொடுக்கும்.

10. டீன் ஏஜ் காலத்தில் பருக்கள் வருவது சகஜம், அதைக் கிள்ளிவிடும் பழக்கம் கூடாது. பருவம் கடந்ததும் பருக்களும் மறைந்து விடும். கிள்ளிவிடுவதால் சருமத்தில் நிரந்தரமாகக் கருப்பு நிறம் வந்து விடும்.

11. அழகு சாதனங்கள் உபயோகப்படுத்தும் சமயங்களில் எரிச்சலோ, வலியோ ஏற்படுமானால் அதன்பிறகு அந்தப் பொருளை உபயோகிக்கவே கூடாது. அது உங்கள் சருமத்துக்கு அலர்ஜி எனப் புரிந்துகொண்டு விலக்கிவிட வேண்டும்.

12. காஸ்மெடிக் பொருட்கள் வாங்கும்போது கட்டாயமாக அதன் பேக்கிங் மீது 'டெர்மடாலஜிகலி டெஸ்டட்' என்ற வார்த்தைகள் இருக்கின்றனவா எனக் கவனித்து வாங்கவும். ஒரு நாளானாலும் கூட, காலாவதி ஆன காஸ்மெடிக் பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com