
கடந்த சில நாட்களாகவே பகல் பொழுதில் அதிகப்படியான வெயிலும், மாலை நேரத்தில் மழையும் பெய்து வருகிறது. இத்தகைய பருவநிலை மாற்றம் காரணமாக, தொற்று நோய்கள் அதிகம் பரவுகிறது. பொதுவாகவே, மழைக்காலங்களில் நோய் தொற்றுகளின் பரவல் அதிகம் இருப்பதால், இத்தகைய பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு பாதிப்புகள் மக்களுக்கு அதிகரித்து வருகிறது.
சென்னையில் வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு பலரும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வைரஸ் காய்ச்சல் மட்டுமின்றி, விஷக்காய்ச்சலும் அதிகமாகப் பரவுவதால், சாதாரணமாக வந்து செல்லும் காய்ச்சலும் ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது. விஷக்காய்ச்சல் பரவலால் முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இது உடலின் பல பாகங்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் வந்தவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
ஒரு வாரத்துக்கு மேலாக தொடர்ந்து உடல் வலி, சளி, காய்ச்சல், இருமல் போன்றவை இருந்தால், மருத்துவரிடம் சென்று ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வைரஸ் காய்ச்சலைப் பொறுத்தவரை, அது எது போன்ற பாக்டீரியா? என்ன வகை காய்ச்சல்? தண்ணீரால் பரவியதா? எப்படி வந்தது? போன்றவற்றை உடனடியாகக் கண்டுபிடித்து, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.
பருவநிலை மாற்ற தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ள சில எளிய வழிகள்:
பாதுகாப்பான குடிநீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
காய்ச்சி ஆற வைத்த நீரை குடிப்பது நல்லது.
வீட்டைச் சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
முகக் கவசம் அணிந்து வெளியே செல்லுங்கள்.
தெருவில் விற்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டாம்.
வீட்டை சுத்தமாக வைத்திருக்கவும்.
ஒவ்வொரு வருடமும் காய்ச்சலுக்கான தடுப்பூசி போடுவது அவசியம்.
வயதானவர்கள் அதிகம் வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.
பருவ கால காய்ச்சல் மற்றும் வைரஸ் நோய் தொற்றுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள, ஒவ்வொரு ஆண்டும் நிமோனியா தடுப்பூசியை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு எடுத்துக்கொள்வது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதன் விலை 700 முதல் 1000 ரூபாய் வரைதான் இருக்கும். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளும், வயதானவர்களும், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களும் இதை போட்டுக்கொள்வது நல்லது. நோய்த்தொற்று பரவலால் ஏற்படும் பக்கவாதம், மாரடைப்பு போன்ற கடுமையான பாதிப்புகளை இந்த வகை தடுப்பூசிகள் தவிர்க்கின்றன.