சுற்றுச்சூழல் மற்றும் நோய்க்கு மருந்தாகும் தேன்கனி மரம்!

சுற்றுச்சூழல் மற்றும் நோய்க்கு மருந்தாகும் தேன்கனி மரம்!

மெக்சிகோ நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட தேன்கனி மரங்கள், கேரளாவில் மகோகனி என்றழைக்கப்படுகிறது. தேன் கனி அல்லது தேன் காய் எனப்படும் இந்த மரங்கள் 120 அடியில் வளர்ந்து அதன் பழங்கள் 20 சென்டி மீட்டர் அளவில் உள்ளது. இதற்குள் 50 60 வெள்ளரி விதைகள் போன்ற அமைப்பில் ஒரு சிறு அளவில் காணப்படுகிறது. இந்த மரம் வளர்வதற்கு சுமார் பத்து வருடங்கள் ஆகும் என்பதால் இதை வளர்க்க பலர் ஆர்வம் காண்பிப்பது இல்லை. ஆனால் கேரளாவில் இந்த மரங்கள் அதிக அளவில் உள்ளது. ஏனெனில் அங்கு உள்ள மலைத் தோட்டங்களுக்கு நிழல் தரும் மரங்களாக இந்த மரங்களை வளர்க்கிறார்கள். ஏறக்குறைய புங்கமரம் விதைகள் போன்று இந்த மரத்தின் விதைகள் உள்ளன.

இயற்கை அழிந்து செயற்கை பெருகப் பெருக, அழிந்து போனதில் இதுபோன்ற மூலிகை மருந்துகளும் அடக்கம் எனலாம். ஆனால் தற்போது இயற்கை மீதான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது எனலாம். சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு எனப்படும் உடல் நல பாதிப்பு அதிக அளவில் நம்மை பாதித்து வருகிறது. இதற்கான தீர்வாக ஆங்கில மருந்துகள் மற்றும் நாட்டு மருந்துகளில் இயற்கை வைத்தியம் என பல முறைகள் உள்ளன. அதில் வரப்பிரசாதமாக கருதப்படும் தேன்பழம் அல்லது தேன் கனி எனப்படும் ஒருவித காயில் உள்ள மருத்துவ குணம் கொண்ட வேதிப்பொருள் சர்க்கரை நோய்க்கு மட்டுமின்றி பல நோய்களுக்கும் தீர்வாக சொல்லப்படுகிறது.

இந்த மரத்தின் இலை மற்றும் விதைகள் மருத்துவ குணம் கொண்டவை என்பதால் பலரும் இதை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது ஆன்லைன் ஸ்டோர்களிலும் நாட்டு மருந்து கடைகளிலும் இதன் காய்கள், விதைகள் கிடைத்து வருகின்றன. ஆனால், இதனைத் தகுந்த முறையில் நாட்டு மருத்துவர் கண்காணிப்பில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். இதிலுள்ள சபோநின் எனும் வேதிப்பொருளால் நாள்பட்ட நீரிழிவு நோய் கட்டுப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வாகவும், காய்ச்சல், புற்று நோய்க்கான எதிர்ப்பு சக்தி, பெண்களுக்கான வயிற்றுவலி, மாதவிடாய், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கும் இந்த விதை பெரிதும் உதவி புரிவதாக இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஓங்கி உயர்ந்த இந்த மரங்கள் பெரிய பெரிய வீடுகள் போன்ற மரக்கட்டுமானங்களுக்கும் உதவுகின்றன. ‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் இயற்கையை காப்போம்’ என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் மருத்துவ குணம் உள்ள இந்த மரத்தின் கன்றுகளை நமது வீட்டுத் தோட்டத்திலும் வைக்கலாம். வருடங்கள் தாமதம் ஆனாலும் இதன் பலன் அதிகம் என்பதால் பிற்காலத்தில் இந்த மண்ணுக்கு நாம் விட்டுச் செல்லும் ஒரு சொத்தாக இந்த மரங்கள் இருக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com