இன்று தயிர் உலகம் முழுவதும் கிடைக்கும் ஒரு பொதுவான உணவாகும். இது ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல் நலத்தை பேணும் நலன்கள் கொண்ட உணவாகவும் காணப்படுகின்றது. புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், வைட்டமின் பி 6 மற்றும் வைட்டமின் பி 12 போன்ற ஊட்டச்சத்துகள் கொண்டதாகவும் திகழ்கிறது.
“பசுவின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் தயிர்தான் மிகவும் சிறந்தது. நம் குடலுக்குத் தேவையான எண்ணெய்ப் பசையைத் தந்து வயிற்றுள்ள வாயுவைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்றில் புளிப்பை ஏற்படுத்தாது. எருமையின் தயிர் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். எளிதில் செரிக்காது. அதிகம் சாப்பிட சளித்தொல்லை ஏற்படுத்தும். வயிற்றில் செரிக்காமல் கிடந்தால் புளித்துப் போய் ரத்தத்தைக் கெடுத்துவிடும்.
புளிப்பு தலைகாட்டத் தொடங்கிய நிலையில் தயிரைச் சாப்பிட்டால் பசியைறத் தூண்டும். பசி மிகவும் குறைவாக உள்ளவர்களுக்கும் இது நல்லது. ஆனால், தயிர் மிக அதிகமாகப் புளித்துவிட்டால் ரத்தக் கொதிப்பு, பித்த வாயு, வயிற்றுக் கோளாறுகள் உள்ளவர்கள் சாப்பிட ஏற்றதல்ல. மேலும் நன்றாகப் புளித்த தயிர் பற்களில் கூச்சம், குரல் கம்முதல், உடல் எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.
தயிரை மெல்லிய துணியில் கட்டித் தொங்கவிட்டு அதிலுள்ள நீர் முழுவதும் வடித்த பிறகு, துணியிலுள்ள உள்ள கெட்டியான பகுதியுடன் சர்க்கரை, ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் சேர்த்து குளிர வைத்துத் தயாரிப்பதற்கு ஸ்ரீகண்ட் என்று பெயர். ருசியான சத்துள்ள உணவு இது. உடல் புஷ்டி, பருமன் தரக்கூடியது. உடலின் உஷ்ண வறட்சியைக் குறைக்கும். அதிகம் சாப்பிட்டால் சளித் தொல்லை ஏற்படலாம். பசும் பாலிலிருந்து கிடைக்கும் தயிரைவிட எருமை தயிரே இதற்கு ஏற்றது.
தயிரைச் சுட வைத்து சூடாகச் சாப்பிடக் கூடாது. இரவில் தொடர்ந்து அதிக அளவில் சாப்பிட கூடாது. சிலர் சூடான சாதத்தில் தயிர் கலந்து கடுகு தாளித்து உப்பு சேர்த்து சாப்பிடுகின்றனர். இது உடலுக்கு நல்லதல்ல. மண் சட்டியிலிட்டு தோய்த்துத் தயாரிக்கப்படும் தயிர் மிகவும் சிறந்தது. பாலைக் கடைந்து வெண்ணெய் நீக்கிய பிறகு பாலைக் காய்ச்சி, தயிர் தயாரித்து சாப்பிடுவது பசியின்மையும் வயிற்றுப் போக்கும் உள்ளவர்களுக்கு நல்லது.
தோய்ந்து நிற்கும் தயிரின் அடிப்பகுதியில் தெளிவான தண்ணீர் உள்ளதைப் பார்த்திருக்கலாம் அந்தத் தண்ணீர் புளிப்பும், இனிப்பும், துவர்ப்பும் கலந்த ஒரு மிகச் சிறந்த பானம். அந்தத் தண்ணீரை மட்டும் சுமார் கால் கப் முதல் அரை கப்வரை காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, தொண்டை எரிச்சல், குமட்டல், உடற்சூடு, களைப்பு இவற்றுக்கு ஏற்றது.
பாலில் புரை குத்திய பின் நன்கு உறையாமல், பால் நிலைக்கும் தயிர் நிலைக்கும் இடையே இருக்கும் தயிரை சாப்பிடக் கூடாது. அது வயிற்றில் வேகமாக புளிக்கத் தொடங்கி பசியைக் குறைத்து நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம்,வாய்ப்புண் முதலியவற்றை உண்டாக்கும்.
தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன், வெல்லம் சேர்த்து சாப்பிட நல்ல உடல் புஷ்டியைத் தரும். ஆண்களுக்கு விந்துவை அதிகப்படுத்தி போக சக்தியை உண்டாக்கும். அதிக அளவு சாப்பிட்டால் பசி மந்தமாகிவிடும்.
பகலில் ஓடி ஆடி வேலை செய்வதால் உடலிலுள்ள இறுக்கமான தன்மையில், தயிரைச் சாப்பிட்டால் அதன் பிசுபிசுப்புத் தன்மையால் தளர்ந்த கபத்துடன் சேர்த்து நுரையீரலில் இறுகி, சீரணக் குறைவு தோன்றக்கூடும். அதனால்தான் தயிரை இரவில் தவிர்க்க வேண்டும். இரவில் தொடர்ந்து தயிர் சாப்பிடும்போது சோகை, காமாலை, சரும நோய், ரத்தக் கொதிப்பு போன்றவை உண்டாகக்கூடும். இரவு தயிர் மட்டும் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், சிறிது தேன் கலந்து சாப்பிடலாம்.