மீரா நாகராஜன்
மீரா நாகராஜன்

கல்யாண மாலை.. கொண்டாடும் வேளை!

பேட்டி; கோமதி, லண்டன்.

திருமணம் என்றவுடன் நம் அனைவரின் நினைவிலும் வருவது  - ஞாயிறு தோறும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கல்யாணமாலை நிகழ்ச்சி. இருபது வருடங்களுக்கு மேலாக இந்தத் திருமண சேவையில் ஒரு நிறுவனம் தொடர்ந்து கோலோச்சி இருப்பது சாதாரண செயலல்ல. இவர்களின் இந்த வெற்றிக்குக் காரணம் சிறப்பான நிர்வாகம், திறமையான தலைமை, மக்களிடம் எடுத்துச் செல்லும் யுக்தி இப்படி பலவற்றை அடுக்கினாலும், இந்த நிறுவனம் தமிழின் மீதும், சமூகத்தின் மீதும் காட்டும் அக்கறையும் மிக முக்கிய காரணம் என்றே கூறலாம்.

கல்யாணமாலையின் நிர்வாகியான திருமதி. மீரா நாகராஜன் அவர்களை சந்திக்க நேர்ந்த பொழுது மேலே கூறிய அனைத்தும் எவ்வளவு உண்மை என உணர முடிந்தது. முதன்முறையாக பிரிட்டனில் கல்யாண மாலை அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

"United Associates of Tamil" (UKAT) என்னும் ஐக்கிய தமிழ் சங்கத்தின் சார்பில் ஆக்ஸ்போர்ட மற்றும் மான்செஸ்டர் ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற கல்யாணமாலை மாபெரும் வெற்றி கண்டது என்றே கூறலாம். திருமதி. மீரா மற்றும் கல்யாணமாலை மோகன் இருவரும் இரு தூண்களாக செயல்பட்டு இந்த வெற்றி வாகை சூட்டியுள்ளனர்.

"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்"

- என்ற குறளின் இலக்கணமாக விளங்கும் திருமதி. மீரா நாகராஜன் பெண் தொழிலதிபர்கள் வரிசையில் தமிழகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றார். மலர்ந்த முகத்துடன் புன்சிரிப்போடும், இனிமையான பேச்சோடும் அவர் கல்கி ஆன்லைனுக்கு அளித்த  பேட்டி உங்கள் பார்வைக்கு.

கல்யாணமாலை என்னும் மிகப்பெரிய நிறுவனம் அமைவதற்கு மிக முக்கிய காரணமாக விளங்கும் தங்களது கல்விப் பின்னணி பற்றி ?

நான் கல்வி பயின்றது சென்னையில் அமைந்துள்ள சாராதா வித்யாலயா. என்னுடைய செயல்பாடுகளுக்கு பள்ளிக்கூடமே எனக்கு அடித்தளமாக அமைந்தது என்று கூறலாம். அவர்கள் படிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி இப்படி பல போட்டிகளுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அது மட்டுமல்ல  Moral Instruction என்று கூறும் தார்மீக அறிவுரை, நமது பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த சிந்தனையைத் தூண்டும் விதமாக அமைந்த MI வகுப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர். எனவே எனக்கு அறத்தின் மீதும்,  சமூகத்தின் மீதும் ஈடுபாடு என்பது தானாக ஏற்பட்டது.

பள்ளியில் இதற்கான சூழல் அமைந்தது, குடும்பத்திலும் அந்த  சூழலே நிலவியது. என்னுடைய பாட்டி அந்த காலத்தில் தமிழ் பண்டிட் பயின்றவர். அப்பொழுது எட்டாம் வகுப்பு வரை பயின்று, நேரடியாக தமிழ் பண்டிட் பயின்று பின் ஆசிரியர் ஆகலாம். குடும்பச் சூழல் காரணமாக அவர் ஆசிரியராக வேலைக்கு செல்லவில்லை என்றாலும் கூட அவர்களிடம் தமிழ் மிகுந்திருந்தது. அதை எனக்கு ஊட்டினார்கள்.

அவர்கள் கதை கூறும் பொழுது, "தீதும் நன்றும் பிறர் தர வாரா", "யாதும் ஊரே யாவரும் கேளிர்", "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" போன்ற மேற்கோள்களோடு தான் ஆரம்பிப்பார். அது ஒரு பழமொழியாகவோ, புறநானூற்றின் வாரியாக அல்லது அவ்வையின் கூற்றாகவே இருக்கும். எனவே தமிழின் மீது ஈடுபாடு எனக்கு தானாகவே அமைந்த ஒன்றாகிவிட்டது. பேச்சுப்போட்டி என்றவுடன் நான் உடனே சென்று பெயர் கொடுத்துவிடுவேன். பாட்டி என் பின்னால் இருக்கிறார்கள் என்ற தைரியம் தான் அதற்குக் காரணம்.

கல்லூரி படிப்பில் நான் தமிழ் கற்கவில்லை. ஹிந்தி இரண்டாவது மொழியாக எடுத்திருந்தேன். எனவே பெரிய அளவில் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள இயலவில்லை. திருமணத்திற்குப் பின் நான் வந்து சேர்ந்த குடும்பமும் சினிமா பின்னணி கொண்டதாக அமைந்தது.

பிரமிட் நடராஜன் அவர்கள் திரைத்துறையைச் சார்ந்தவர். நான் இங்கு வந்தவுடன் தான் நாமும் ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணிய பொழுது உருவானது தான் கல்யாண மாலை. ஒரு காபி சாப்பிடும் தருணத்தில் தான் இதனை முடிவு செய்தோம். கருத்து என்னுடையதாக இருந்தாலும் இதற்கு உருவம் கொடுத்தவர்கள் என்னுடைய குடும்பத்தினரே.

திரு.மோகன் சார் , என்னுடைய கணவர் திரு. நாகராஜன் , திரு. நடராஜன் - பெரியவர் இவர்கள் அனைவரும் இதற்கு உருவம் கொடுத்தனர் என்றே கூறலாம். நான் பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றதும் இதற்கு உறுதுணையாக இருந்தது.

கல்யாணமாலை உருவானது எப்படி?!

எந்தவிதமான ஒரு திட்டமிடலும் இல்லாமல் தான் இவை அனைத்தும் உருவானது. ஸ்வாட் அனாலிசிஸ் என ஆங்கிலத்தில் இப்போது பெரிதாக பேசப்படும் பகுப்பாய்வு அன்று நடத்தப்படவில்லை. சின்னத்திரையில் ஒரு நல்ல நிகழ்ச்சி பண்ண வேண்டும் என்பதே எங்களின்  நோக்கமாக இருந்தது.

பெண்களை மையமாகக் கொண்டு ஒரு இதழ் துவங்க வேண்டும் என்று ஒருவர் என்னிடம் கேட்டார். அப்பொழுதே நான் தயாரிப்பு துறைக்கு வந்திருந்தேன். எங்கள் குடும்பத்தில் இருந்து சின்னத்திரைக்கு பல நிகழ்ச்சிகள் செய்துகொண்டிருந்தோம். கல்யாணமான ஒரு வருடத்திலேயே அந்நிகழ்ச்சி சார்ந்த தயாரிப்பு துறையில் நான் பணியாற்றி வந்தேன். அப்பொழுது பெண்கள் சார்ந்த காட்சி இதழ் (visual magazine)பண்ணலாமா என்று கேட்டார்கள்.

உடனடியாக "நாம் என் ஒரு மேட்ரிமோனி ஆரம்பிக்க கூடாது?" என்று கேட்டேன். பெண்கள் இதழ் என்றால் எல்லோரும் சமையல், அழகுக் குறிப்பு என்று தான் யோசிப்போம். ஏன் நாம் சற்று வித்தியாசமாக செய்யக்கூடாது என்று கேட்டேன்.  இதை என் குடும்பத்தாரிடம் பகிர்ந்த பொழுது உடனே நடராஜன் சார் "இது மிகவும் நன்றாக இருக்கிறதே! நாமே ஏன்  இதை ஒரு நிகழ்ச்சியாக ஆரம்பிக்க கூடாது " என்று ஊக்கமளித்தார். 

அவர் கூறியவுடன் தான் எங்களுக்கு தைரியம் வந்தது, உடனே சன் தொலைக்காட்சியை அணுகினோம். அதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் இந்நிகழ்ச்சிக்கு மக்கள் கொடுத்த ஆதரவும் தான் இதை எங்களால்  அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிந்தது . பத்திரிக்கை மற்றும் வலைத்தளம் ஆரம்பித்தோம். இப்படி சின்னத்திரைக்கு நிகழ்ச்சிகள் தயாரித்ததில் இருந்து  எங்களுடைய அடையாளம் இந்த மேட்ரிமோனி - திருமணம் சார்ந்ததாக மாறியது.

கல்யாணமாலையில் பட்டிமன்றம் இணைய வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு உதித்தது ?

முதலில் திருமண வரன்களை அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாக  மட்டுமே ஆரம்பித்தோம். ஆனால் ஓரிரு வாரங்களில் இது மட்டும் போதாது என தெரிந்து விட்டது. அப்பொழுது கணவன் - மனைவியை மையமாக வைத்து "எதிர்பார்ப்புகளும் சமாளிப்புகளும் " என்ற தலைப்பில் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியை துவங்கினோம். ஆனால் அதுவும் வெற்றி பெறப் போவதில்லை என்று என்னுடைய உள்ளுணர்வு கூறியது.

அடுத்ததாக கணவன் மனையை வைத்து "சூப்பர் ஜோடி" பட்டிமன்றம் நடத்தினால் எப்படி இருக்கும் என யோசித்து ஒரு புது நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினோம். ஆனால் அதிலும் சில சவால்கள்  இருந்தன. மனைவி பேசினால் கணவன் பேசுவதில்லை, கணவன் பேசினால் மனைவி பேசுவதில்லை. எனவே அதிலிருந்து தான் ஒவ்வொன்றாக பரிணாம வளர்ச்சி அடைந்து இன்றைய கல்யாண மாலை பட்டிமன்றம் உருவானது.

இந்த பட்டிமன்றத்தை மையமாக கொண்ட "விவாத மேடை" என்ற நிகழ்ச்சி  நான்கைந்து வாரங்களிலேயே கல்யாண மாலையில் அறிமுகபடுத்தப் பட்டது. இதனால் மட்டுமே நேயர்களை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்க்க வைக்க இயலும் என நாங்கள் எண்ணினோம்.

கல்யாண மாலை பட்டிமன்ற தலைப்புகள் பல துறைகள் சார்ந்ததாகவும் சமூக அக்கறையோடும்  இருக்கிறது. இது தங்களுக்கு எத்தகைய மனநிறைவை அளிக்கிறது?

கண்டிப்பாக மிகுந்த திருப்தியும் மன நிறைவும் அளிப்பதாகக் கருதுகிறேன். தொழில்நுட்பம் முதல் மருத்துவம், ஆயுர்வேதம் என பல துறைககளை நாங்கள் தொட்டுள்ளோம். டாக்டர். சிவராமன் எழுதிய "ஆறாம் திணை" என்னும் நூலை அறிமுகப்படுத்தியது மட்டும் அல்ல, அதனை மக்களிடம் கொண்டு செல்லும் தளமாகவும் கல்யாண மாலை அமைந்தது.பல துறைகளைச் சார்ந்த பேச்சாளர்களை  நாங்கள் அறிமுகம்  செய்துள்ளோம். கணிப்பொறி, சினிமா, மருத்துவத்துறை என பலதரப்பட்டவர்களின் மறுபக்கம் நமக்கு இதன் மூலம் வெளிப்பட்டது. எனவே தலைப்புகள் தேர்ந்தெடுப்பதில் நான் தீவிர கவனம் செலுத்துவேன்.

கணவனா மனைவியா, ஆண்களா பெண்களா என்கிற தலைப்புகளுக்கள் செல்லக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தேன். இதற்கான ஆதரவும் எனக்கு கிடைத்தது.

திரு.மோகன் அவர்கள், இந்தத்  தலைப்பு வெற்றிபெறாது என ஒருபோதும் கூறியதில்லை. அது மட்டுமல்ல, கல்யாண மாலை நடுவர்கள் மற்றும் பெரிய பெரிய பேச்சாளர்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதனால் தான் பல பெரிய விஷயங்களையும் எங்களால் தொட முடிந்தது "அகிம்சையும் சாத்தியமும் இன்று சாத்தியமா" என குஜராத்தில் அகமதாபாத் சபர்மதி ஆசிரமம் வாயிலில் விவாதித்தோம்.

லண்டனில் இப்பொழுது "யாதும் ஊரே யாவரும் கேளிர் - சாத்தியமா " என்ற தலைப்பில் பட்டிமன்றம் நிகழ்ந்தது. இத்தகைய வரிகளை நாங்கள் மறுக்கவில்லை, இன்றைய சூழலில் இது சாத்தியமா என்பதை மட்டுமே நாங்கள் பேசி இருக்கிறோம். ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு நிகழ்ச்சிகள் வழங்குவது ஒரு தரம். ஆனால் கல்யாணமாலை, ரசிகர்களில் ரசனையின் தரத்தை உயர்த்தும் வகையில் தான் பட்டிமன்றங்கள் நிகழ்த்தி கொண்டிருக்கிறது.

கல்யாண மாலையின் வெற்றிக்கு தங்களின் குடும்பம் எத்தகையதொரு உறுதுணையாக இருந்தது?

குடும்பத்தில் பிரச்சனை இல்லை என்றால் தான் தொழிலில் நாம் நிம்மதியாக கவனம் செலுத்த இயலும். என்னுடைய குடும்பம் எனக்கு எல்லாவிதத்திலும் அதற்கு உறுதுணையாக இருந்தது என்று ஆணித்தரமாகக் கூற முடியும். எங்களுடையது ஒரு கூட்டுக்குடும்பம். மோகன் சார் என்னுடைய கணவரின் சகோதரர். அவரது குடும்பம் மற்றும் எங்களுடைய குடும்பமும் ஒன்றாகத்  தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்  . அப்பொழுது என்னுடைய பெண் குழந்தைகளை வளர்ப்பதாக இருக்கட்டும், எந்த ஒரு உதவி என்றாலும் இந்தக் கூட்டு குடும்ப அமைப்பு மிகவும் உறுதுணையாக இருந்தது. இன்று எங்களுடைய குழந்தைகள் படித்து வெளிநாடுகளில் இருந்தாலும் கூட எனக்கு என் குடும்பம் மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

அது மட்டுமல்ல, உங்களுக்கு வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும். ஒரு துறையில் நாம் சாதிக்கின்றோம் என்றால் அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதற்கு ஒரு குடும்பம் வேண்டும். நிறைய இடங்களில் அவ்வாறு இருப்பதில்லை. ஒரு சாதனை செய்து வரும் பொழுது, அந்தக் கோப்பையை வைத்துவிட்டு தேநீர் போட்டு அவர்களே அருந்தவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் என் அம்மா வீட்டிலும் சரி, இங்கும் ஒரு நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியவுடன் - என்ன தலைப்பில் பேசினோம், நிகழ்ச்சிக்கு எவ்வளவு ரசிகர்கள் வந்திருந்தனர், வெளிநாடுகளுக்கு சென்றால் அங்கு நன்றாக கவனித்தார்களா  என அனைத்தும் விசாரிப்பார்கள். என் கணவர் பல இடங்களுக்கு வர இயலாத போது தொலைபேசியில் விசாரிப்பார்.இப்படி அக்கறையுடன் கேட்கும் பொழுது எனக்கு மிகுந்த பலமாகவும், தன்னம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும்.

இவை அனைத்தும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்வது ஒரு பெரிய விஷயமல்ல. இன்றும் நிகழ்கிறது என்பது மிகவும் ஒரு பெரிய விஷயம். நான் மோகன் சாருடன் வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது குடும்பத்திலிருந்து ஒருவர் வருவதால் எந்தக் கவலையும் இருக்காது. நம்மை பார்த்துக் கொள்ள ஒருவர் இருக்கிறார் என்பது மிகுந்த தைரியம் அளிக்கும்.

மோகன் சார் பற்றி கூறும் பொழுது உங்களுக்கும் அவருக்கும் தொழிலில் இருக்கும் எந்த பந்தம் ( bonding) பற்றி ?

முதலில் இந்த நிகழ்ச்சி தொடங்க வேண்டும் என்கிற பொழுது மோகன் சார் தான் தொகுத்து வழங்க வேண்டும் என்றோ நான் இயக்க வேண்டும் என்றோ யோசிக்கவில்லை. எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கமே இருந்தது. எனவே மக்களிடம் மிகவும் பிரபலமான ஒருவரை வைத்து நடத்த வேண்டும் என்று தான் திட்டமிட்டிருந்தோம். பல நபர்களை சந்தித்தோம்.

மோகன் - சுபாஷ்கரன்
மோகன் - சுபாஷ்கரன்

அந்த வரிசையில் அன்றைய காலகட்டத்தில் மிகவும் புகழுடன் விளங்கிய  ஒரு  நடிகர் இயகிக்குனரை இந்நிகழ்ச்சிக்காக அணுகினோம். ஆனால் அது ஒத்து வரவில்லை. அப்பொழுது அந்த இயக்குனர் வீட்டு மாடிப்படியிலிருந்து வரும் பொழுது மோகன் சாரிடம் ‘நீங்களே இந்த நிகழ்ச்சியை நடத்துங்கள்.. இதன் மூலம் உங்கள் பெயர் இந்நிகழ்ச்சியோடு இணைந்து விடும்’’ என்றும் கூறினேன். ஆனால் அதற்கு அவர் சற்று தயங்கினார். கேமராவைப்  பார்த்தால் எனக்கு பேச்சே வராது என்று பதிலளித்தார். நான் அதற்கு "நாம் சில வாரங்கள் முயற்சி செய்து பாப்போம். நன்றாக வரவில்லை என்றால் பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்றேன்.

எங்களுக்கு அப்பொழுது எந்த பயமும் இல்லை. இந்த நிகழ்ச்சி வெற்றி பெறவில்லை என்றாலும் நாங்கள் எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்று விடலாம் என்று யோசித்தோம்.  அதே போன்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு  செய்திருந்த இயக்குனர் ஒத்துவராததால் மோகன் சார், "நாமே பாத்துக்கலாம்மா, உங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை வைத்து இயக்குங்கள்" என்றார்.இப்படி ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நம்பிக்கையோடு, நான் நீ என்ற எந்த ஒரு எண்ணம் இல்லாமலும் செயல்பட்டதால் வெற்றி காண முடிந்தது. எந்த ஒரு கருத்து வேறுபாடு வந்தாலும் அதை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம், அதை அடுத்த கட்டத்திற்கு செல்ல விடமாட்டோம். அவரும் மிக மென்மையாக எங்கள் அனைவரையும் வழி நடத்துகிறார்.

கலாச்சார வேறுபாடுகள் என நாம் பலவற்றை அடுக்கி கொண்டிருக்கிறோம். திருமண அமைப்பில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா?

ஏதாவது மாற்றம் அல்ல. அனைத்தும் மாறி இருக்கிறது.  முன்பெல்லாம் ஒரு முப்பது வருடங்களுக்குப் பின் தான் தலைமுறை இடைவெளி என்று கூறுவோம். ஆனால் இப்பொழுது எல்லாம் ஒரு பத்து வருடங்கள் கழிந்தாலே தலைமுறை இடைவெளி என்று கூறலாம். அந்த அளவு பெரிய மாற்றங்கள் இருக்கின்றன. எனவே நம்மை நாம் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். எனவே இன்றைய தலைமுறைக்கு என்ன தேவையோ அதை நாங்கள் ஓரளவு புரிந்து கொண்டு செயல்படுகிறோம் என நான் நினைக்கிறேன்.

இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் முன்பெல்லாம் அம்மா அப்பா முடிவு செய்த பின்பு  பெண்ணும் பையனும் ஒரு முறை பேசுவார்கள் பிறகு திருமணம். இப்பொழுது அவ்வாறு அல்ல. இரு குடும்பத்தினரையும் நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைக்கிறோம். பெற்றோர்கள் முடிவு செய்த பின்னர் பெண்ணும் பையனும் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை பேசிப் பழகிய பின் தான் முடிவு செய்கிறார்கள். வேண்டாம் என்று கூறிவிட்டால் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

மோகன் சார் தலைமையில் பிரத்யேகமான மேட்ரிமோனி சேவை என்பது இதன் அடிப்படையில் தான் செயல்படுகிறது.இன்று சாதி,தொழில் மற்றும் படிப்பு இவற்றை தாண்டி பொழுதுபோக்கு, ஆர்வம் இவற்றையும் பார்க்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம், எத்தகைய கருத்துகளுக்கு ஆதரவு தருகிறார்கள் இப்படி  பல கோணங்களில் பரிசீலனை செய்கிறார்கள். அதற்கான நேரம் தேவைப்படும் பொழுது அது வரை நாம் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். இதுவே  இன்றைய சூழலாக இருக்கிறது.

கல்யாணமாலையின் மைல்கல்கள் என்றால் எவற்றை குறிப்பிடுவீர்கள் ?

எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்பதே ஒரு சாதாரண செயலல்ல. மக்களை நாங்கள் எந்த அளவு இந்த  மேட்ரிமோனி சேவையில் திருப்தி அடையச் செய்திருக்கிறோம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

சினிமா தொடர்பான நிகழ்ச்சிகள், பல பெரிய நடிகர்கள் பிரபலங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் கூட ஒரு இடைவெளி விட்டு சீசன் 1, 2 என நடத்துகிறார்கள். ஆனால் மக்களிடம் ரசனை மாறாமல் ஞாயிறு காலை 8 மணி என்றால் கல்யாணமாலை என எதிர்நோக்குகிறார்கள் என்றால் அதற்கான அங்கீகாரம் கிடைத்து விட்டது என்பது பெரிய விஷயம். ஆயிரமாவது வாரத்தை கடக்கும் பொழுது எங்களுக்குள் எழுந்த உணர்வு அது.

அதே போன்று சின்னத் திரை தயாரிப்பிலிருந்து இந்த மேட்ரிமோனி சேவைக்கு வந்ததும் ஒரு குறிப்பிடத்தக்க ஒன்று. எங்கள் மைல்கல் என்றும் கூறலாம்.

நல்லதொரு நிகழ்ச்சி கொடுக்க வேண்டும் என்று தான் நினைத்தோமே அன்றி இப்படி ஒரு தனி அமைப்பை ஆரம்பிப்போம் என்று எண்ணவில்லை. அதோடு கூட,வெளிநாடுகளுக்குச்  சென்று முதன் முதலாக படப்பிடிப்பு நிகழ்த்திய நிகழ்ச்சி கல்யாண மாலை என்று கூட சொல்லலாம்.

அரட்டை அரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் ஒரு சில நாடுகளுக்கு சென்றிருந்தாலும் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,சிங்கப்பூர்,நைரோபி, ஐரோப்பிய நாடுகள் என பல நாடுகளுக்கு சென்று நிகழ்ச்சி நடத்தி முதன் முதலில் சாதனை படைத்தது கல்யாண மாலை.

தற்பொழுது அடுத்தகட்டமாக நாங்கள் நடத்திய "Wedding and Beyond" என்பது சென்னையில் மிகப் பெரிய வெற்றி கண்டது என்றே கூற வேண்டும். அப்பொழுது மக்கள் வைத்திருக்கும் அபிமானம் மற்றும் பெரிய பெரிய நிறுவனங்கள் கல்யாண மாலையுடன் இணையும் பொழுது வெற்றி பெற முடியும் என்ற அவர்களது நம்பிக்கை இவற்றை கண்கூடாகக் கண்டோம்.

பல நாடுகளுக்கு சென்ற அனுபவத்தில் ஏதாவது ஒரு சுவாரசியமான நிகழ்வை பகிர்ந்து கொள்ள முடியுமா?

முதன் முதலில் வெளிநாட்டு படப்பிடிப்பிற்காக சிங்கப்பூர் சென்ற அனுபவம், மிகப் பெரிய அரங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கிட்டத்தட்ட பதினான்கு ஆயிரம்  பேர் நிரம்பிய அந்த அரங்கில் நாங்கள் நடத்திய நிகழ்ச்சி மறக்க முடியாத ஒன்று. அதே போன்று டெல்லியில் நாங்கள் நடத்திய நிகழ்ச்சி அனைத்துமே பெரிய பெரிய அரங்கில் நிகழ்த்தியவை. அமெரிக்காவில் ஆறு நிகழ்ச்சிகள் இரு வாரங்களில் நிகழ்த்தியது சவாலாக இருந்தது.

அமெரிக்காவை பொறுத்தவரை அங்கிருக்கும் நேர வேறுபாடு, பயணம் எவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அந்த நிகழ்ச்சிகளை  வெற்றிகரமாக நிறைவேற்றினோம். அடுத்தாக நைரோபியில் நாங்கள் நடத்திய நிகழ்ச்சி. அங்கு அத்துணை தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் என்பது அப்போது தான் தெரிய வந்தது. Mrs. கீதா சத்யமூர்த்தி அவர்கள் மூலமாக ஒரு மாதத்தில் நைரோபியில் கல்யாண மாலை  நடத்திக் காட்டினோம்.

கல்யாண மாலைக்கு இருக்கும் சவால்கள் என்றால்...?

தொழில் அல்லது வணிகம் சார்ந்த சவால்கள் இருக்கத்தான் செய்யும். அது மட்டும் அல்ல, இந்த மேட்ரிமோனி சேவையை நாங்கள் இணையதளம் மூலமாகவும் மற்றும் மக்களின் நேரடி தொடர்பின் மூலமும் செயல்படுத்துகிறோம். அப்பொழுது சில அச்சுறுத்தல்கள் நிகழ்நிலை வழியாக வரும். 

இந்த production அல்லது தயாரிப்பு துறையில் இருக்கும் சவால்கள் என்றால் குறிப்பாக வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது அங்கு இருக்கும் காலநிலைக்கு ஏற்றவாறு நம்முடைய குழுவை பார்த்துக்கொள்ள வேண்டும்.

இப்போது லண்டன் ஐயாவோடு வந்திருக்கிறோம் என்றால் இந்தக் குளிரில் பல ஊர்களுக்கு அவரையும் அழைத்துச் செல்ல வேண்டும், பயணிக்க வைப்பது என்பது மிகப் பெரிய சவாலே! அதே போன்று அங்கிருக்கும் மக்களின் ரசனைக்கேற்றவாறு நிகழ்ச்சி அமைகிறதா என்ற பயம் எப்போதுமே இருக்கும்.

சென்னையில் கூறும் ஒரு நகைச்சுவை இங்கு  எடுபடாது, எனவே இங்கிருக்கும் மக்களின் ரசனைக்கேற்றவாறு நிகழ்ச்சி நடத்த வேண்டும். அதனால் தான் அந்தந்த ஊரில் இருக்கும் பேச்சாளர்களை நாங்கள் இணைத்துக் கொள்வோம்.இவை அனைத்தையும் தாண்டி இருக்கும் மிகப் பெரிய சவால் தொழில்நுட்பம்.

சன் தொலைக்காட்சியை பொறுத்தவரை அனைத்துமே தானியங்கி, ஏதாவது ஒரு சின்ன எதிரொலி இருந்தால் கூட அது நிராகரிக்கப்பட்டு விடும். இந்தியாவில் இதற்கு ஏற்றவாறு ஒலி அமைப்பு கிடைத்துவிடும். இப்படி இருக்கும்போது இந்த  நிகழ்ச்சி அனைத்து  உட்கூறுகளையும் தாண்டி ஒளிபரப்பு செய்யும் வரையில் ஒரு பதட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஒரு பெண் திருமண முடிந்து மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறும் வரையில் ஒரு பதை பதைப்பு இருக்குமே அதைப் போன்றது அது! ஒவ்வொரு முறையும் ஒரு பெரிய சவாலே.

கல்யாண மாலை இல்லை என்றால் மீரா மேடம் இன்று என்ன செய்து கொண்டிருப்பார் ?

சின்ன வயதில் என்னுடைய குறிக்கோள் - அதாவது குறிக்கோள் என்பது எந்த சூழலில் நாம் வாழ்கிறோமோ அதுவே நமது கனவாக இருக்கும். என்னுடைய தந்தை ரயில்வே துறையில் இருந்தார், பாட்டி ஆசிரியராக இருந்தார். இதைப் பார்த்து வளர்ந்த எனக்கு வங்கியில் பணிபுரிய வேண்டும் என்ற கனவு இருந்தது.

திருமணத்திற்கு பின் நிச்சயமாக என்னுடைய கனவு விரிவடைந்தது என்று தான் கூற வேண்டும். ஒரு முறை என்னுடைய சிறு வயதில் எம்.எஸ். அம்மாவின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது , அப்பொழுது என் பாட்டி  "இதெல்லாம் பரம்பரையாக வர வேண்டும் " என்று கூறினார். அப்பொழுது நான் "பரம்பரை என்பதை ஒருவர் தானே துவங்கி இருக்க வேண்டும், அந்த துவக்கமாக நான் இருக்கிறேன்" என்று பதிலளித்தேன். எனவே நிச்சயம் ஒரு நல்ல பணியில் ஒரு நல்ல மாற்றைத்தை ஏற்படுத்தி பணிபுரிந்து கொண்டிருந்திருப்பேன்.

இறுதியாக லண்டன் அனுபவம் பற்றி ?

பொன்னியின் செல்வன் படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா-வின் நிறுவனர் திரு.சுபாஷ்கரனை சந்தித்த அனுபவத்தை திருமதி .மீரா அவர்கள் காணொளி மூலம் பகிர்ந்து கொள்கிறார்.

குடும்பம், தமிழ், சமுதாயம், வணிகம் என பல்வேறு கருத்துகளை திருமதி.மீரா நாகராஜன் நம்மோடு பகிர்ந்து கொண்ட வகையில், ஒரு நெகிழ்வான நேர்காணலாக இது அமைந்தது என்றே கூற வேண்டும். குளிருக்கு இதமாக அவர் வழங்கிய சூடான தேநீர் அருந்திவிட்டு, அவரிடம் விடை பெற்றோம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com