
உணவின் சுவையை அதிகரிக்கவும் மற்றும் உணவுக்கு ஒரு நல்ல மணத்தைக் கொடுக்கவும் காலகாலமாக இஞ்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆரோக்கிய நன்மைகள் பல கொண்ட இஞ்சியை சரியான முறையில் பயன்படுத்தினால், அது நமக்கு பல நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கவல்லதாகும்.
உடல் சோர்வாக இருக்கிறதா? தலை பாரமாக உள்ளதா? மனச்சோர்வினால் கவலை கொள்கிறீர்களா? சூடாக ஒரு கப் இஞ்சி டீ குடித்தால், மேற்கூறிய அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் பறந்து போய்விடும். இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் உணவின் சுவையை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவல்லது.
இஞ்சியில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்:
காய்ச்சல், இருமல், நோய் தொற்றுகளிலிருந்து விடுபட இஞ்சி உதவுகிறது. பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய் தொற்றுகளுக்கு நல்ல மருந்தாக இஞ்சி விளங்குகிறது.
நீங்கள் நீண்ட காலமாக மூட்டு வலியால் அவதிப்படும் நபராக இருந்தால், இஞ்சி உட்கொள்ளும்போது அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும், வலியையும் குறைக்க உதவுகிறது.
பெண்கள் மாதவிடாய் சார்ந்த பிரச்னைகளிலிருந்து விடுபட இஞ்சியைப் பயன்படுத்தலாம். இஞ்சி அல்லது சுக்குப் பொடியை நீரில் கொதிக்க வைத்து அருந்தலாம்.
உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால் அதைக் கட்டுப்படுத்த பச்சை இஞ்சி சாப்பிடலாம். உடல் எடை குறைப்புக்கு இஞ்சி அதிகம் பலனளிக்கும். ரத்த சக்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவரவும் இஞ்சி உதவுகிறது.
இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சியை நீங்கள் துருவியோ அல்லது சுக்குப் பொடியை வெந்நீரில் கலந்தோ குடிக்கலாம். நீங்கள் விரும்பினால் அந்த நீரில் துளசி, கிராம்பு சேர்த்து கொதிக்க வைத்து கசாயம் போலவும் எடுத்துக் கொள்ளலாம். இது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்கு ஏராளமான நன்மைகளைத் தருகிறது. ஆனால், இத்தகைய இஞ்சியை அளவோடு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்னைகள் இருந்தால் தகுந்த ஆலோசனைகளின் பேரிலேயே இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.