குழந்தைகளின் ஆரோக்கியம் அத்தியாவசியமன்றோ?

குழந்தைகளின் ஆரோக்கியம் அத்தியாவசியமன்றோ?

பெற்றோரே,

ற்காலத்தில் காலை நேரத்து அவசரம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். குழந்தைகளைப் பொறுத்தவரை 'காலை நேரம்' ஒரு தலைவலிதான். ஏன் என்றால் படுக்கையை விட்டு எழுந்திருப்பதிலிருந்து இரவு படுக்கும்வரை சந்திப்பது கட்டளைகள், உத்தரவுகள்தானே. பல்துலக்கு, குளி, காலைக் கடன் கழி. இப்படிப் பல.

இதெல்லாம் முடிந்து 'மணியைப் பார்த்தால் நேரம் ஓடியே இருக்கும். பின்னர் கடைசி கட்டம் சாப்பாடு. 'சீக்கிரம் சாப்பிடு' என அவசரப்படுத்துவார்கள். அல்லது பெற்றோரே பலவந்தமாக ஊட்டி விடுவார்கள். அப்படிச் சாப்பிடப் பிடிக்காத நாளில் அவை ஒன்று சேர்ந்து வாந்தி எடுக்கும்.

பல மாதிரியான பள்ளிகளின் நேரம் அவை அழைத்துச் செல்லும் பஸ்களின் நேரம் இப்படிப் பல சூழ்நிலையில் இந்த அவதி. பள்ளிகள் காலை பத்து மணி முதல் நாலு மணி வரை என வைத்தால் குடியா முழுகிவிடும்?

"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்'' என்பது நமக்குத் தெரியாதது அல்ல. குழந்தைகளின் ஆரோக்கியம் அத்தியாவசியமன்றோ? பல பள்ளிகளில் பெற்றோர்களின் சங்கம் இருக்கிறது. இதை ஆசிரியர்களுக்கு இவர்கள் எடுத்துச் சொல்லலாமே? இந்த ஒன்பது மணி அவசரத்தால் குழந்தைகள் எத்தனை விஷயங்களை 'மிஸ்' பண்ண வேண்டியது இருக்கிறது தெரியுமா?

குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு அவசியம் பால் எல்லாவித சத்தும் மிகுந்தது. ஆனால், அதை எங்கு தர முடிகிறது? பலருக்கு வசதி குறைவு காரணமாகக் கொடுக்க முடிவதில்லை. ஆனால், வசதி படைத்தோர் மட்டும் என்ன கொடுத்துக் கிழித்தோம்? பால் சாப்பிட்டால் சாப்பாடு சாப்பிடாது என்ற நிலையில் பால் நிறுத்தப்பட்டு விடுகிறது. சாப்பிடும் அந்த உணவையாவது மென்று தின்ன நேரம் உண்டா? கிடையாது. மிக வற்புறுத்தினாலோ 'போதும்' வயிற்றை வலிக்கிறது என்பது குழந்தைகளின் பதில்.

கீரைகள், பச்சைக் காய்கறிகள். இவைகளின் மகத்துவத்தை டாக்டர்களும், பத்திரிகைகளும் புகழ்பாடுவதென்னவோ உண்மை. ஆனால் நம் அன்றாட உணவில் அவைகளுக்கு இடம் இல்லை. விலை மலிவு. சத்து மிகுந்தது. என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் கீரையை ஆய்ந்து செய்வதற்கு நேரமில்லை என்பதுதான் உண்மை. சீக்கிரத்தில் அரிந்து விடலாம் என்ற வகையில் சமையற்கட்டில் முதல் இடத்தைப் பிடிப்பவை கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வாழைக்காய் இவைதான்.

இன்னும் சொல்லப் போனால், நேரத்தை மிச்சப்படுத்த வற்றல், அப்பளம், ஜாம், போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகிறோம். இதனால் சாப்பாட்டின் தரமும் குறைவதைப் பார்க்கலாம்.

நாம் பல அல்லல்பட்டு சம்பாதிப்பதன் நோக்கம் என்ன? நம் குழந்தைகளின் நல்ல வளர்ச்சிக்காகத்தானே தவிர வேறு எதற்கு? ஆனால் அன்றாட வாழ்க்கையில் நடப்பதென்னவோ தலைகீழாகத்தான்.

குழந்தைகளுக்காகத்தான் பள்ளிகளே தவிர பள்ளிகளுக்காகக் குழந்தைகள் அல்ல. வீட்டிலும், பள்ளியிலும். ஆட்டுவிக்கப்பட்ட குழந்தைகள் வீடு வந்து சேரும்போது அசதி, எரிச்சல் இவைதான் மிஞ்சுகிறது. விளையாடும் ஈடுபாட்டின் காரணமாக ஏதோ பேருக்குக் கொறித்துவிட்டுப் போய் விடுகிறது. பள்ளிப் பாடம்., ஹோம் ஒர்க் இப்படிப் பலவற்றைச் செய்து முடித்துத் தூக்கம் கண்களைச் சுழற்றச் சாப்பிடக்கூடத் தோன்றாமல் தூங்கிவிடுகிறது. தாய்க்கோ நாள் முழுவதும் அனைவரின் அவசரத்திற்கும் அரக்கப்பரக்க வேலை செய்த களைப்பு. ஒரு பக்கம். குழந்தை சாப்பிடவில்லையே என்ற கஷ்டம். இதர பிரச்னைகள் எல்லாம் சேர்ந்து 'டென்ஷன்' இதனால் அவளுக்குப் பலவித கோளாறுகள். இப்படித்தான் பெரும்பாலான வீடுகள் காலை முதல் இரவு வரை நடக்கிறது. இதற்கெல்லாம் மாற்றுதான் என்ன?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com