
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் நமது வாழ்க்கை முறை, பழக்கம், உடை, உணவு என அனைத்தும் மாற்றம் கண்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய் எனப் பல்வேறு நோய்கள். இத்தகைய வாழ்விற்கான ஒரே தீர்வு இயற்கை உணவு முறையைப் பின்பற்றுவதே.
சரியான நேரத்தில் சரியான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். காலை எழுந்தவுடன் நல்ல உடற்பயிற்சி பின்னர் பழைய நீத்து தண்ணீர், இளநீர் என இயற்கையான நீராகாரம் உடலுக்கு நன்மை பயக்கும். காலை எழுந்தவுடன் தேநீர், காபி என குடிக்கும் பழக்கம் பெருகிவிட்டது. இதனைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். பின்னர் எண்ணெயில் பொரித்த பூரி, கிழங்கு, வடை, மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து இட்லி, இடியாப்பம், பால், பழங்கள், கூழ் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இடைப்பட்ட வேளையில் சூட்டைத் தணிக்கும் வகையில் நல்ல பழச்சாறு மதியம் அவியல், துவையல், காய்கறி சாதம், தினம் ஒரு கீரை எனப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். சரியான அளவில் உப்பு, காரம், புளிப்பு என பின்பற்றினால் வாதம், பித்தம், கபம் மூன்றும் சமநிலையில் இருக்கும். இதனால் நமது உடலும் தன்னிலை மாறாமல் இருக்கும்.
மாலையில் காய்கறி சூப், பயறு வகைகள், முளைகட்டிய தானியங்கள் நமக்கு சுறுசுறுப்பை கொடுக்கும் . இரவில் உணவின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். அசைவ மற்றும் துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது. சப்பாத்தி, இடியாப்பம், இட்லி என அளவோடு சாப்பிட வேண்டும். பின்னர் உறங்கும் முன்னர் சுடுதண்ணீர் குடிப்பதால் செரிமான உறுப்புகள் சரிவர இயங்கும். இவ்வாறு தினமும் பழங்கள், பால், தானியங்கள், சத்தான காய்கறிகள் என எடுத்துக் கொண்டால் நோயில்லா குறைவற்ற வாழ்வை வாழ முடியும்.