இருப்பதை வைத்துச் சிறப்புடன் வாழும் வழி!

இருப்பதை வைத்துச் சிறப்புடன் வாழும் வழி!

போட்டிகள் நிறைந்த நம் வாழ்வில் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டுக்கொள்வது இயல்பாகவே அமைந்துவிட்டது. தற்காலத்தில் அப்படி ஒப்பிடும் போது மற்றவரைக் காட்டிலும் தம்மைக் குறைவாகவே மதிப்பிடுகிறோம். இதன் காரணமாகப் பலர் வாழ்வில் பின்னடைவைச் சந்திக்கின்றார்கள். இப்படிப்பட்ட மக்களுக்காக வெ.இறையன்பு தனது ‘பத்தாயிரம் மைல் பயணம்’ நூலில் ஒரு அழகிய குட்டி கதை கூறுகிறார்.

ஒரு நாட்டை ஆட்சி செய்யும் மன்னன் எப்போதும் ஒரு அழகனாகவும் போர்த் திறன் மிக்கவனாகவும் இருப்பான். ஆனால், இந்த நாட்டின் மன்னன் அப்படி கிடையாது. அவனுக்கு வலது கண்ணும் வலது காலும் கிடையாது. தன் குறைகளை எண்ணிப் பல நேரங்கள் அவன் கவலையுடன் வாழ்ந்து இருக்கிறான். அப்படிப்பட்ட மன்னன் தன் மனஆறுதலுக்காக ஒரு போட்டி நடத்த முடிவு செய்தார். அது என்ன போட்டி என்றால் ஒரு ஓவியப் போட்டி. தன்னை அழகாக வரைபவருக்கு ஆயிரம் பொற்காசுகள் சன்மானம் என்றும், சரியாக வரையாதவர்களுக்குச் சிறைத் தண்டனை என்றும் கட்டளையிட்டார். இதனைக் கேட்ட பல ஓவியர்கள் போட்டியில் கலந்துகொள்ள அச்சப்பட்டார்கள். ஒரு சிலர் வந்து கலந்துகொண்டனர். முதலில் வந்த ஓவியர் மன்னன் எவ்வாறு இருந்தாரோ அப்படியே வரைந்து காட்டினார். அதாவது வலதுகண் அற்றும் வலதுகால் அற்றும் அந்த ஓவியத்தில் அப்படியே இருந்தது. மன்னன் அதனைப் பார்த்து வருத்தப்பட்டு அந்த ஓவியரைச் சிறைக்கு அனுப்பி விட்டார். மற்றொரு ஓவியர் அரண்மனைக்கு வந்தார். அவர் மன்னரின் இழந்த கண்ணையும் காலையும் இருப்பதாக வரைந்து காட்டினார். அவர் வரைந்த படமும் மன்னனின் மனதை மகிழ்ச்சியாக்கவில்லை. அதனால் அவனையும் சிறையில் அடைத்தார். இன்னொரு ஓவியர் அரண்மனைக்கு வந்தார். அவர் வரைந்த ஓவியத்தைப் பார்த்து மன்னன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். மற்ற இரு ஓவியர்கள் வரைந்ததைப் பார்த்து வருத்தப்பட்ட மன்னன், இவர் வரைந்ததை மட்டும் கண்டு மகிழ்ச்சி அடைந்தர்க்கு காரணம் என்ன?

மன்னன் குதிரையின் மேல் ஒரு பக்கமாக அமர்ந்து ஒரு புலியினை வேட்டையாடும் விதமாக இருந்தது. மன்னன் காலை இழந்த பக்கம் குதிரையின் மறுபுறம் இருந்தது. வில் அம்பு ஏந்தி, கண் இல்லாத வலது பக்கம் இலக்கினை குறி பார்க்கும் விதமாக மூடியிருந்தது. இதனை பார்த்து மன்னனும் அரண்மனையிலிருந்த மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் அளித்து அரச மரியாதையோடு வழி அனுப்பி வைத்தனர்.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்று மட்டுமே. நம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணி வாழ வேண்டியதில்லை. நம்மிடம் இருக்கும் குறையை வைத்து, மற்றவரிடம் இருக்கும் ஒன்று நம்மிடம் இல்லை என்று மனஅழுத்தத்திலும் வாழ வேண்டியதில்லை. ஒப்பிட்டுப் பார்ப்பதை விட்டுவிட்டு இருப்பதை வைத்து வாழ்வதே சிறப்பு!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com