திண்டுக்கல் வெஜ் குஸ்கா செய்வது ரொம்ப ஈசி!
திண்டுக்கல் ஸ்டைலில் சூப்பர் சுவையான வெஜ் குஸ்கா செய்யலாம் வாங்க. இதை ஒருமுறையாவது முயற்சித்துப் பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும்.
பிரியாணிக்கு தற்போது இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் ஏற்பட்டு விட்டார்கள். பத்து பேரிடம் சென்று உங்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என்றால் அதில் குறைந்தது 7 பேராவது பிரியாணி என்று சொல்லி விடுவார்கள். அதிலும் குறிப்பாக அசைவம் சேர்த்து சமைக்கும் பிரியாணிக்கு தான் ரசிகர்கள் அதிகம். ஆனால் தற்போது நான் சொல்லப்போகும் இந்த வெஜ் பிரியாணி ரெசிபியை ஒரு முறை சாப்பிட்டால், நீங்கள் வெஜிடேரியனாக மாறிவிடுவீர்கள்.
இந்த பிரியாணியின் சுவைக்கு முற்றிலும் புதிதாக அரைக்கப்படும் மசாலா தான் காரணம். இதை நீங்கள் விரும்பும்போது எப்போது வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். சுவை, மனம் என அனைத்துமே உங்களை சுண்டி இழுக்கும். இந்த குஸ்கா ரெசிபியை நீங்கள் செய்தால் உங்கள் குழந்தைகள் மிச்சம் வைக்காமல் அனைத்தையும் சாப்பிட்டு விடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் இரண்டு.
புதினா, கொத்தமல்லி இலை, இஞ்சி சிறிதளவு.
பூண்டு 5 பல்.
எண்ணெய் ஒரு டீஸ்பூன்.
நெய் இரண்டு டீஸ்பூன்.
வெங்காயம் 200 கிராம்.
தக்காளி 1.
பட்டை, கிராம்பு, ஏலக்காய், சிறிதளவு.
தயிர் ஒரு டீஸ்பூன்.
மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்.
உப்பு தேவையான அளவு.
அரிசி ஒரு கப்.
தண்ணீர் ஒன்றரை கப்.
செய்முறை:
முதலில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, தக்காளி, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் என அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதில் அதிகமாக கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்க்க வேண்டாம். மீறினால் அதன் மணம் மாறிவிடும்.
அரைத்த இந்த விழுதுடன் வெங்காயம் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி அரைத்த மசாலா மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இத்துடன் பிரியாணிக்கு தேவையான உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து இறுதியில் தயிர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். உங்களுக்குக் கூடுதலாக காரம் தேவை என்றால் இந்த சமயத்தில் மிளகாய்ப் பொடி சேர்க்கலாம்.
பின்னர் மசாலா நன்று வாங்கியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
அடுத்ததாக சீரக சம்பா அரிசியை நன்றாகக் கழுவி ஐந்து முதல் பத்து நிமிடம் வரை ஊற வைக்கவும்.
தண்ணீர் நன்றாக கொதித்ததும் ஊற வைத்துள்ள அரிசியை அதில் சேர்க்கவும். அடுத்ததாக மூன்று நிமிடங்கள் கழித்து குக்கரை மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
பத்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து, விசில் அடங்கிய பிறகு நெய் சேர்த்து கிளறினால், சுவையான நெய் மணக்கும் திண்டுக்கல் வெஜ் குஸ்கா தயார்.