உணவே மருந்து : நோய் தீர்க்கும் நார்த்தங்காய்!

உணவே மருந்து : நோய் தீர்க்கும் நார்த்தங்காய்!

நார்த்தங்காய் :

நார்த்தங்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வர ரத்தம் சுத்தம் அடையும். வயிற்றுப்போக்கு, வாதம் நீங்கும். இதன் சாற்றை தண்ணீர், உப்பு அல்லது சர்க்கரை கலந்து பருக பித்த வாந்தி குணமாகும். உடல் சூட்டை தணிக்க கூடிய மிகச்சிறந்த மருத்துவ குணம் மிக்க இந்த நார்த்தங்காயை உணவில் அடிக்கடி பயன்படுத்தி வருவது நல்லது. மூட்டு வலிக்கு சிறந்தது.

இதனை நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நான்கு நாட்கள் ஊற விட்டு வெயிலில் காய வைத்தோ அல்லது அப்படியே உணவில் சேர்த்து வந்தால், சிறந்த வகையில் பசியை தூண்டக்கூடியது.

நாக்கில் ஏற்படும் அருசியை போக்கவல்லது. சிலருக்கு சாப்பிட உட்கார்ந்தாலே பிடிக்காது. உணவின் மீது ஒரு வெறுப்பு ஏற்படும். இப்படி இருப்பவர்கள் தயிர் சாதத்தில் உப்பு, பெருங்காயத்தூள், சிறிது சுக்கு பொடியும் கலந்து அதற்கு தொட்டுக்கொள்ள இந்த நார்த்தங்காயை பயன்படுத்த நல்ல பசி எடுக்கும். ஜீரணம் ஆகும். சாப்பிடும் ஆவலைத் தூண்டும்.

இதன் சாற்றை பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து பருகி வர உடல் வலுப்பெறும்.

நார்த்தங்காயை கொண்டு, கலந்த சாதம் செய்யலாம். கொத்சு செய்யலாம். இதன் இலைகளைக் கொண்டு வேப்பிலை கட்டி தயார் செய்து தயிர் சாதத்துடன் சாப்பிட பித்தம் பசியின்மையையும் போக்கும்.

நார்த்தங்காய் சாதம் :

எலுமிச்சை சாதம் போல் இதற்கும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிது சேர்த்து தாளித்து உதிர் உதிராக வடித்த சாதம், உப்பு, மஞ்சள் தூள், தேவையான அளவுக்கு நார்த்தங்காய் சாறு சேர்த்து கலக்க சுவையான, வாய்க்கு ருசியான நார்த்தங்காய் சாதம் ரெடி.

வேப்பிலை கட்டி :

இளம் நார்த்த இலை ‌- 2 கைப்பிடி

இளம் எலுமிச்சை இலை - 1 கைப்பிடி

கல் உப்பு - தேவையான அளவு

ஓமம் - ஒரு ஸ்பூன்

மிளகாய் வற்றல் - 6

இலைகளின் நடுநரம்பை கிழித்து எடுத்து விட்டு இலைகளை அலம்பி ஈரம் போக துடைத்து வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாயை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும் . இப்பொழுது ஈரம் இல்லாத நார்த்தை இலைகளுடன் தேவையான அளவு கல் உப்பு, வறுத்த மிளகாய், ஓமம் ஒரு ஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக நீர் சேர்க்காமல் அரைத்தெடுக்கவும். கையோடு இந்த வேப்பிலை கட்டிகளை சிறுசிறு உருண்டைகளாக அழுத்தி பிடித்து ஜாடியிலோ அல்லது பிளாஸ்டிக் கண்டெய்னர்லையோ பத்திரப்படுத்த ஈரப்பதம் போகாமல் அதாவது காய்ந்து விடாமல் இந்த வேப்பிலை கட்டி இரண்டு மாதமானாலும் கெடாமல் இருக்கும். இதனை தயிர் சாதத்துடன் தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.

நார்த்தங்காய் கொத்சு :

நார்த்தங்காய் - ஒன்று

உப்பு

மஞ்சள் தூள்

பச்சை மிளகாய் - 4

புளி - எலுமிச்சை அளவு

வெல்லம் - சிறிய கட்டி

நார்த்தங்காயை கொட்டைகளை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நல்லெண்ணெய் விட்டு கடுகு, பச்சை மிளகாய் சேர்த்து கடுகு வெடித்ததும் நறுக்கி வைத்துள்ள நார்த்தங்காய் சேர்த்து தேவையான அளவுக்கு உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும். புளியை நீர்க்க கரைத்து வதங்கி கொண்டிருக்கும் நார்த்தங்காயில் விட்டு புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும். கடைசியாக ஒரு துண்டு வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு இறக்க சூப்பரான நார்த்தங்காய் கொத்சு ரெடி. இதனை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பொங்கல், இட்லி, தோசை எல்லாவற்றிற்கும் பொருத்தமான சைடிஷ் ஆக இருக்கும். பயன்படுத்திப்பாருங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com