நாவூறும் சீஸ் மஸ்ரூம் தவா ஃப்ரை எப்படி செய்யலாம்?

நாவூறும் சீஸ் மஸ்ரூம் தவா ஃப்ரை எப்படி செய்யலாம்?

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களான நாங்கள் எங்கள் வீடுகளில் விசேஷங்கள் என்றால் கடைகளில் ஆர்டர் செய்வதைக் காட்டிலும் நாங்களே வீட்டில் சமைத்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அதில் ஒரு சந்தோஷம் என்பதோடு மனத் திருப்தியும் கூட!

புது வீட்டு கிரஹப்பிரவேஷம், குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா, பிறந்த நாட்கள், பெற்றோர்களின் திருமண விழாக்கள், வார இறுதி விடுமுறைக் கொண்டாட்டங்கள் என அனைத்துமே அதிக பட்சம் 30 அல்லது 40 பேர்களுடன் முடிவடைந்து விடும் என்பதால் நாங்களே தான் சமைப்பது. இப்படி சமைக்கத் தொடங்கிய பிறகு நான் நம் நாட்டில் இருந்த நாட்களைக்காட்டிலும் இங்கு வந்த பிறகு சைவம், அசைவம் என இரண்டிலுமாக முன்பை விட அதிகமான புதுப்புது ஐட்டங்களை சமைக்கக் கற்றுக் கொண்டேன் எனலாம்.

கடந்த வாரத்தில் என் மகன் பிறந்த நாள் விழா வந்தது. செலிபரேஷன் இல்லாமலா?!

வீட்டிலேயே மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் டிரம்ஸ்டிக், மட்டன் கோலா, அரிசி சாதம், முருங்கைக்காய், முள்ளங்கி சாம்பார், சப்பாத்தி, பனீர் பட்டர் மசாலா, காரசாரமான மைசூர் ரசம், அப்பளம் என்று கமகமவென சமைத்து இறக்கி விட்டோம். குழுவாகச் சொல்கிறேனே என்று பார்க்கிறீர்களா? ஆம், இங்கு சமையலில் நண்பர்களும் கணிசமாக உதவுவார்கள்.

சமைக்கும் போதே தோன்றிக் கொண்டிருந்தது.

அசைவத்தில் தான் நிறைய வெரைட்டிகள் இருப்பதாகத் தெரிகிறது. சைவத்தில் பனீர் மட்டும் தானா? வேறு ஏதாவது புதிதாக முயற்சித்தால் என்ன என்று? அப்படி திடீரென்று ஐடியாவில் சிக்கியது தான் இந்த சீஸி மஸ்ரூம் தவா ஃப்ரை.

தேவையான பொருட்கள்:

· மஸ்ரூம்: இரண்டு பாக்ஸ்கள் சுமார் 400 முதல் 500 கிராம்

· பூண்டுத்தூள்: 1 டீஸ்பூன்

· மசாலாத்தூள்: 1/2 டீஸ்பூன்

· மிளகுத் தூள்: 1/2 டீஸ்பூன்

· மல்லித்தூள்- 1/4 டீஸ்பூன்

· சீஸ்: அனைத்து மஸ்ரூமுக்குள் ஸ்டஃப் செய்யப் போதுமான அளவு

· உப்பு: தேவையான அளவு

· ஆலிவ் ஆயில்: 1/4 டீஸ்பூன்

· பொரிப்பதற்கான எண்ணெய்: 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

மஸ்ரூம்களை ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாகத் தண்ணீரில் கழுவி விட்டு உலர விடவும். முதல் நாள் இரவே உலர வைத்து எடுத்து வைத்து விட்டால் மசாலா கலக்கும் போது அது தண்ணீர் விடாமலிருக்கும். மஸ்ரூம் சிறிது நீர் விடும் என்பதால் தனியாகத் தண்ணீர் சேர்க்கத் தேவை இல்லை. முதலில் மஸ்ரூம்களில் இருந்துஅவற்றின் தண்டுப்பகுதிகளை மென்மையாக தனித்துப் பிரித்தெடுக்க வேண்டும். பிறகு மஸ்ரூம்களின் மீது அதி மென்மையாக மசாலாக்களைத் தூவி பூப்போல பிசிறி விட வேண்டும். மஸ்ரூம்களில் இருந்து தண்டுகளை நீக்குவதால் கிடைக்கும் கிண்ணம் போன்ற பகுதியில் ஒரு சின்ன நெல்லிக்காயளவு உருண்டையாக சீஸைத் திணித்து மேலே லைட்டாக சில்லி ஃப்ளேக்ஸ் தூவி தவாவில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டுப் பரவலாக ஏழெட்டு மஸ்ரூம்களை அதில் உட்கார வைத்து ஸ்டவ்வை லோ ஃப்ளேமில் வைத்துப் பொறுமையாகப் பொரித்தெடுக்கவும்.

அப்புறம் என்ன? அவ்வளவு தான் சீஸி மஸ்ரூம் தவா ஃப்ரை ரெடி!

இந்த முறை அசைவத்தை விட இதற்குத்தான் வரவேற்பு அதிகமாக இருந்தது. எல்லோருமே மிகவும் விரும்பிச் சாப்பிட்டார்கள்.

கடைசியாக ஐஸ்க்ரீம், சின்னமன் ஃப்ரூட் சாலட் பரிமாறி விருந்தை முடித்தோம்.

நீங்களும் இதைச் சமைத்துப் பாருங்களேன்.

தொகுப்பு: கார்த்திகா வாசுதேவன்

ரெஸிப்பி அனுப்பியவர்: சாந்தி கார்த்திகேயன், டொராண்டோ, கனடா

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com