செம்பருத்தி தோசை செய்யலாம் வாங்க!

SEMBARUTHI DHOSAI
SEMBARUTHI DHOSAI

காலை உணவை சற்று வித்தியாசமாகவும் ஆரோக்கியமாகவும் சாப்பிட விரும்புபவர்கள் இந்த செம்பருத்தி தோசையை செய்து சாப்பிடுங்கள். இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

பொதுவாகவே நம்முடைய காலை உணவு என்பது ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில் நாம் காலையில் சாப்பிடும் உணவுதான் அன்றைய நாள் பொழுதில் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். ஆனால் பெரும்பாலானவர்கள் காலை உணவை அவசர அவசரமாகவே சாப்பிடுகின்றனர். அதில் ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது கேள்விக்குறியாகவே உள்ளது. 

வேலைக்கு செல்லும் அவசரத்தில் சமைக்கக்கூட நேரமின்றி, இருக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு செல்பவர்களாகவே பலர் இருக்கின்றனர். ஆனால் குறைந்த நேரத்தில் சுலபமாக செய்யக்கூடிய ஒரு காலை உணவைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். பல காலமாக ஆயுர்வேத மருத்துவத்தில் செம்பருத்திச் செடியின் இலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இந்த இலைகளைப் பயன்படுத்தி சுடப்படும் தோசையால், உடல் சூடு குறைந்து வயிற்றுக்கு குளுமை தரும். இதனால் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்றவையும் தவிர்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

  • ஒரு கப் அரிசி.

  • ஒரு ஸ்பூன் வெந்தயம்.

  • செம்பருத்தி இலைகள் 5.

  • உப்பு தேவையான அளவு.

இந்த தோசை செய்வதற்கு சாதாரணமாக நாம் சமைத்து சாப்பிடும் அரிசியை விட, பிரவுன் அரிசி ஆரோக்கிய மானது. உங்களுக்கு விருப்பம் இருப்பின் எந்த பாரம்பரிய அரிசியை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். 

செய்முறை: 

முதலில் வெந்தயம் மற்றும் அரிசியை நன்கு கழுவிய பின்னர் தண்ணீரில் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். 

பின்னர் 3 மணி நேரம் கழித்து, ஊற வைத்த அரிசி, வெந்தயத்தில் செம்பருத்தி இலைகளை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். 

இந்த மாவை குறைந்தது 6 முதல் 7 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். 

பின்னர் மாவு புளித்ததும், நாம் சாதாரணமாக தோசை சுடுவது போல மெல்லிய தோசையாக ஊற்றி, இருபுறமும் நன்கு வெந்த பிறகு சாம்பார் அல்லது சட்னி வைத்து சாப்பிடலாம். 

அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியம் நிறைந்த செம்பருத்தி தோசை தயார். இதை செய்வதும் சுலபம் அத்துடன் உடலுக்குத் தேவையான ஆரோக்கிய நன்மைகளும் இதிலிருந்து கிடைத்துவிடும். எனவே இதை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். சுவை நன்றாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com