
உடம்பு சரியில்லை என்றாலோ உடல் வலி, ஜுரம் இருந்தாலோ பருப்பு துவையல், ஜீரக ரசம் ஆகியவற்றை சூடான சாதத்துடன் சாப்பிட உடல் வலி, ஜூரம் ஜலதோஷம் ஆகியவை போய் உடம்பு கலகலப்பாகி விடும்.
பருப்பு துவையல்:
துவரம் பருப்பு அரை கப்
கல் உப்பு
மிளகு அரை ஸ்பூன் அல்லது மிளகாய் ஒன்று
துவரம் பருப்பை வெறும் வாணலியில் நன்கு சிவக்க வறுத்து தண்ணீர் விட்டு 15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு நீரை வடித்து விட்டு (அதனை ரசத்தில் சேர்க்கலாம்) கல் உப்பு மிளகு அல்லது ஒரு மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும் . பருப்பு துவையல் ரெடி.
**********************
சீரக ரசம்:
புளி எலுமிச்சை அளவு
உப்பு
பெருங்காயம் சிறிது
மிளகு அரை ஸ்பூன்
மிளகாய் 1
சீரகம் 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
வெல்லம் ஒரு துண்டு
தாளிக்க: நெய்,கடுகு, சீரகம்
கருவேப்பிலை
சிறிய எலுமிச்சை அளவு புளியை எடுத்து நிர்க்க கரைத்துக் கொள்ளவும். அதில் உப்பு பெருங்காய கட்டி அல்லது தூள் சிறிது சேர்த்து அடுப்பில் வைத்து புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும். வாணலியில் மிளகு, மிளகாய், சீரகம், சிறிது கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வெறும் வாணலியில் சூடு வர வறுத்து மிக்ஸியில் பொடி செய்து பின் தேவையான அளவுக்கு தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும். புளி வாசனை போனதும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு மொச்சு வரும் வரை அடுப்பில் வைத்து அணைக்கவும். கொதிக்க விட வேண்டாம். பிறகு வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை தாளித்துக் கொட்ட மணக்க மணக்க ஜீரக ரசம் தயார். இதற்கு தொட்டுக் கொள்ள பருப்புத் துவையல், சுட்ட அப்பளம் தோதாக இருக்கும்.