
தேவையான பொருட்கள்:
கம்பு - 200 கிராம் (அல்லது ரெடிமேட் கம்பு மாவு- 200 கி)
இட்லி அரிசி -100 கிராம்
உளுந்து - 50 கிராம்
சீரகம் - ஒரு ஸ்பூன்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
மிளகு - அரை ஸ்பூன்
இளசான முருங்கைக்கீரை- ஒரு கட்டு
பெரிய வெங்காயம் – இரண்டு
வர மிளகாய் - நாலு
இஞ்சி -சிறு துண்டு
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்
செய்முறை:
கம்பு, அரிசி, இரண்டையும் நன்றாக கழுவி விட்டு தனித்தனியாக நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்து ஒரு மணி நேரம் ஊறினால் போதும். பின்பு இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து வரமிளகாய், இஞ்சித்துண்டு, மிளகு, சீரகம், வெந்தயம், தேவையான அளவு கல் உப்பு, நீர் சேர்த்து கிரைண்டரிலோ, மிக்ஸியிலோ தோசை மாவு பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த மாவை ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும். இப்போது மாவு ரெடி! இதில் மஞ்சள் தூள், பெருங்காயத்தூளை சேர்த்துக் கொள்ளவும்.
முருங்கைக் கீரையை ஆய்ந்து நீரில் அலசவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். அடி கனமான தோசைக் கல்லை காயவைத்து ஒரு கரண்டி
மாவை எடுத்து சிறிது கெட்டியாக அடை போல வார்க்கவும். அதன் மேல் நறுக்கி வைத்த வெங்காயம், முருங்கை இலைகளை கொஞ்சம் தூவி எண்ணெய் ஊற்றி நன்றாக வேகவிட்டு திருப்பிப் போடவும், இப்போது முருங்கைக் கீரை கம்பு தோசை ரெடி! இதற்குக் காரமான வெங்காய சட்னி நல்ல காம்பினேஷன்.
இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்துகள் நிறைந்த அருமையான டிபன் இது. பூப்படைந்த சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் மிகவும் ஏற்றது. கம்பு, முருங்கைக்கீரை, இரண்டுமே ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும். மேலும் இவை ரத்தத்தை சுத்தம் செய்து, கெட்ட கொழுப்பையும் அகற்றுகிறது. வாரத்தில் ஒரு முறையாவது செய்து சாப்பிட வேண்டும்.