நேந்திரம் பழ பனானா ஜாம்!

நேந்திரம் பழ பனானா ஜாம்!

ருசிக்காக சாப்பிடும் பண்டம் மட்டுமல்ல. அற்புதமான சத்து பொருளாகும். உடல் கட்டமைப்பை ஏற்படுத்துவ தோடு அறிவாற்றலையும் வளர்க்கும் இந்த நேந்திரம் பழ பனானா ஜாம். 

நேந்திரம் பழ ஜாம் செய்வதற்கு முன்னால் நேந்திரம் வாழைப்பழத்தை ஒரு பக்குவ நிலைக்கு கொண்டு வர வேண்டும். 

நேந்திரம் பழத்தில் 70 சதவிகிதம் நீர்ச்சத்து அடங்கியிருக்கிறது. இந்த நீரை வற்றச் செய்தால்தான் பனானா ஜாம் நீண்ட காலம் ருசியுடன் இருக்கும். இல்லாவிட்டால் விரைவில் கெட்டுப் போய்விடும். 

கீழ்காணும் முறைப்படி பழத்தின் நீரை வற்றச் செய்யலாம் .

நன்கு பழுத்த பழங்களாகப் பார்த்து முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் .தோசைக்கல் போன்று ஆனால் மிகவும் மெல்லிய தட்டையான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பழங்களை தட்டி லிட்டு நன்றாக வதக்க வேண்டும். அடுப்பில் வதங்கும் பழங்களின் தோலை தொட்டுப் பார்த்தால் மிகவும் மிருதுவாக தென்படும். அந்த சமயத்தில் பழங்களை தட்டில் இருந்து எடுத்து தோலை உரித்து அகற்ற வேண்டும். 

தோலை உரிக்கும்போது தோலுடன் ஒட்டிய நார் போன்ற பொருளையும் சேர்த்து அகற்றி விட வேண்டும். 

தோலுரிக்கப்பட்ட பழங்களை கல் உரலிலிட்டு  நன்றாக ஆட்டவோ, மிக்ஸியில் நன்றாக மசிக்கவோ செய்ய வேண்டும். 

பழங்கள் வெண்ணை போன்ற பக்குவ நிலைக்கு அரைக்கப்பட்டதும் மொத்தமாக திரட்டி சுத்தமான ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 

இப்பொழுது செய்யும் முறை பற்றி பார்ப்போம்:

தேவையான பொருட்கள்:

வாழைப்பழ விழுது -500 கிராம்

சர்க்கரை-150 கிராம்

ஜாதிக்காய் பொடி சிறிதளவு

செய்முறை:

ரண்டு தம்ளர் தண்ணீரில் சர்க்கரையை சேர்த்து அடுப்பில் ஏற்றி காய்ச்ச வேண்டும். பாகு தேன் பதத்திற்கு வந்ததும் அரைத்து வைத்திருக்கும் வாழைப்பழ விழுதைப் போட்டு நன்கு கிளறி விட வேண்டும். அதே நிலையில் கொஞ்ச நேரம் வேக விட்டால் வாழைப்பழத்தில் மிச்சம் இருக்கும் நீரும் வற்றி விடும்.

பக்குவத்திற்கு ஜாம் வந்ததும் ஜாதிக்காய் பொடி தூவி இறக்கி விட வேண்டும். இது ஜாம் நீண்ட நாள் கெடாமல் பாதுகாக்க உதவும். ( ஜாதிக்காய், 'ஜாதிபத்திரி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம், ஆகிய சரக்குகளில் ஏதாவது ஒன்றை பொடி செய்து ஜாமில் தூவி விடலாம்) 

ஜாம் மனமாக இருக்க சிறிது வாழைப்பழ எஸன்ஸும் மஞ்சள் கலர் பவுடரும் சேர்த்துக் கிளறிக் கொள்ளலாம். 

சர்க்கரை பாகின் அளவை அதிகப்படுத்தினால் ஜாம் சற்று அதிக காலம் கெடாமல் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com