ஊட்டி வர்க்கி வீட்டிலேயே செய்யலாம்!
நாம் அனைவருக்குமே ஒருமுறையாவது ஊட்டிக்கு சென்றுவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். சினிமாக்களில் ஊட்டியை காண்பித்தால் போதும், சுற்றிலும் பசுமையான இடங்கள், எப்போதும் குளிர் நிறைந்திருக்கும் இந்த இடத்தை நாம் ஏன் இன்னும் சென்று பார்க்கவில்லை என்ற கேள்வி எழும்பும்.
எப்படியாவது ஒரு முறை ஊட்டிக்கு சென்று விட்டால் போதும், வாழ்நாள் முழுவதும் அதன் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்காது. அதேபோல ஊட்டிக்கு செல்பவர்கள் அங்கிருக்கும் சாக்லேட்டையும், ஊட்டி வர்க்கியையும் சுவைக்காமல் வருவது கிடையாது. உடல் நடுங்கும் குளிரில், சுடச்சுட தேநீர் குடித்துக்கொண்டே கையில் ஒரு வர்க்கியை எடுத்து அதில் தொட்டு சாப்பிட்டால் அந்த சுவையை வார்த்தையால் விவரிக்க முடியாது.
ஊட்டி மட்டுமின்றி கூடலூர், கோத்தகிரி, குன்னூர் போன்ற பகுதிகளிலும் இன்றளவும் மாலை நேர சிறந்த சிற்றுண்டி எது என்றால் டீயும் ஊட்டி வர்க்கியும்தான். ஊட்டி மக்களின் வீட்டுக்கு சென்றால், அவர்கள் ஊட்டி வர்க்கியை வைத்து தான் உபசரிப்பே செய்வார்கள். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் மாலை நேரங்களில் பிஸ்கட் சாப்பிடுவது வழக்கம். அதுவும் இனிப்பு, காரம், உப்பு கலந்த பிஸ்கட்களை அதிகம் விரும்பி சாப்பிட்டு வந்தனர்.
அப்போது ஆங்கிலேயர்களின் வீடுகளில் பல தமிழர்கள் சமையல் வேலைக்காக சேர்ந்தார்கள். இந்த தருணத்தில் அவர்களின் உணவுக் கலாச்சாரத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. ஆங்கிலேயர்களும் குளிர் பாங்கான சூழ்நிலையை அனுபவிக்க அடிக்கடி ஊட்டிக்கு சென்று தங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அப்போது ஆங்கிலேயர்கள் பிஸ்கட் சாப்பிடும்போது, அத்துடன் அவர்களுக்கு வர்க்கியும் வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது அதன் சுவை அவர்களுக்குப் பிடித்துப் போகவே, நெய்யில் வறுத்தெடுத்த வர்க்கியையும் ஒரு பிடி பிடித்துள்ளனர். இதனால்தான் ஊட்டி வர்க்கி மிகவும் பிரபலமானது.
நன்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட மைதாவில் குறிப்பிட்ட அளவு சர்க்கரை, நெய், டால்டா சேர்த்து அதை பரோட்டா மாவு பதத்திற்கு தயார் செய்வார்கள். இந்த மாவு நொதிப்பதற்காக ஈஸ்டை சேர்த்து குறைந்தது மூன்று முதல் நான்கு மணி நேரங்கள் ஊற வைப்பார்கள். பின்னர் மாவு நொதித்ததும் நெய்யில் வறுத்தெடுப்பார்கள். இதுதான் ஊட்டி வர்க்கியின் ரகசிய பார்முலா. இதன் சுவை தனித்துவம் வாய்ந்தது என்பதால் இதற்காக புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.
எல்லா ஊரிலுமே மைதா மாவு சர்க்கரை கிடைத்தாலும், ஒவ்வொரு ஊரின் நீருக்கென்று ஒரு தனித்துவமான ருசி இருக்கும். தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் தயாரிக்கப்படும் திருநெல்வேலி அல்வாவிற்கு எப்படி ஒரு தனி ருசி இருக்கிறதோ, அதேபோல ஊட்டி மலையிலிருந்து வரும் தண்ணீரில் தயாரிக்கப்படும் வர்க்கியிலும் ஒரு தனி சுவை நிறைந்திருக்கிறது.
என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும் இந்த காலத்திலும் ஊட்டி வர்க்கியின் சுவை மாறாமல் இருப்பது அவை முழுக்க முழுக்க மனிதர்களின் பங்களிப்பால் மட்டுமே செய்யப்படுகிறது என்பதுதான்.