தொக்கோ தொக்கு!

தொக்கோ தொக்கு!

கொத்துமல்லி தொக்கு

ண்டு நீண்டு இல்லாத இளசு கொத்துமல்லி கட்டு 10, மிளகாய் வற்றல் 15, கடுகு 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் சுண்டைக்காய் அளவு, புளி ஒரு நார்த்தங்காய் அளவு, உப்பு தேவையான அளவு.

கொத்துமல்லிக் கட்டைப் பிரித்து, புல்களை ஆய்ந்து தண்ணீரில் நன்கு அலசி வடியப் போடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, மிளகாய் வற்றல், கடுகு, காயம், உளுத்தம் பருப்பை வறுக்கவும். எண்ணெய் விடாமல் வறட்டு வாணலியில், உப்பை வறுக்கவும் (படபடவென்று பொரியும், நீர்ப் பசை நீங்கும்) புளியையும் திருப்பித் திருப்பி காந்தாமல் வதக்கவும் (ஐந்து நிமிடம்) ஈரம் இல்லாமல் கல்லுரலைத் துடைத்து, முதலில் புளி, மிள, வற்றல், உப்பு கொத்துமல்லியை இரும்புலக்கையால் இடிக்கவும். மசிந்ததும், காயம், உளுத்தம் பருப்பு கடுகு சேர்த்து, இரண்டு இடி இடித்துக் கெட்டியாக எடுத்து வைக்கவும். கெட்டியாக இடித்து இருப்பதால், கொஞ்சமாய் நீர் விட்டுக் கல்லுரலை அலம்பி, பச்சடி போல் எடுத்து வைக்கலாம். (மோர் சாதம், தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம்.) உடனே, பச்சடியைச் செலவழிக்கவும். இந்தத் தொக்கு மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

மலைக் களாக்காய் தொக்கு

லைக் களக்காய் 1 கிலோ, மிளகாய் வற்றல் 50 கிராம், உப்பு தேவைக்கு, காயம் 5 கிராம், கடுகு 1 ஸ்பூன், நல்லெண்ணெய் 100 கிராம், மலைக் களாக்காய்களைப் பால் பிசுக்குப் போகத் தேய்த்து அலம்பி, இரண்டாக நறுக்கவும். குடைக் கம்பி  அல்லது தென்னங்குச்சியால் விதைகளை தோண்டி எடுத்துவிடவும். மிளகாய் வற்றலை வறுத்து, உப்பு சேர்த்து இறக்கவும். நல்லெண்ணெய விட்டு, கடுகு, காயம் தாளித்து, களாக்காயை வதக்கவும். வதங்கியதும் மஞ்சள் பொடி, வெந்தயப் பொடி 1 ஸ்பூன் போட்டு தேவையான மிளகாய்ப் பொடி போட்டு சுருள வதக்கி இறக்கவும். மிகவும் அருமை.

கிடாரங்காய் தொக்கு

கிடாரங்காய் தொக்கு மிகவும் அருமையாக இருக்கும். ஸீஸனில் செய்து வைத்தால் வருடம் முழுக்க மஜாதான்.

கிடாரங்காய் 4, மிளகாய் வற்றல் 100 கிராம், கடுகு, காயம், வெந்தியம், மஞ்சள் பொடி, உப்பு.

கிடாரங்காயை சுருளாய் வெட்டி, விதைகளை நீக்கித் துண்டுகளாய் நறுக்கி உப்பு போட்டு, பத்து நாள் வெயிலில் (மேலே  தூசி, பூச்சி விழாமல் துணி வேடு கட்டி) வைக்கவும். மிளகாயை வறுத்துப் பொடி செய்யவும். நொந்து போயிருக்கும் கிடாரங்காய்த் துண்டுகளை மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டினால், கூழாகிவிடும்.. வாணலியில் (கல்கத்தா இலுப்பச் சட்டி) நல்லெண்ணெய் விட்டு கடுகு, காயம் தாளித்து, கிடாரங்காய் கூழைப் போட்டு மிளகாய்ப் போடி, வெந்தய மஞ்சள் பொடி சேர்த்துச் சுருள வதக்கி இறக்கி வைக்கவும். மிகவும் ருசியாக இருக்கும்.

நார்த்தங்காய்த் தொக்கு

நார்த்தங்காயைச் சுருள் அரிந்து, ஆவியில் வேக வைக்கவும். மிளகாய் வற்றலை இடித்துப் பொடி தயாரிக்கவும். வேகவைத்த  நார்த்தங்காயை நைஸாய் (மிக்ஸி அல்லது ஆட்டுரலில்) அரைக்கவும். கடுகு, காயம் தாளித்துச் சுருள வதக்கவும். வெந்தயம், மஞ்சள் பொடி சேர்க்கவும். இதில் சாதம் பிசைந்தும் சாப்பிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com