டோமேடோ கோகனட் பாத்!

டோமேடோ கோகனட் பாத்!

தேவையான பொருட்கள் :

புலாவ் அரிசி (பாசுமதி அரிசி) – 2 தம்ளர்,  நன்கு பழுத்த தக்காளிப் பழம் –  ¼ கிலோ, முற்றின தேங்காய் - 1 மூடி, பெல்லாரி வெங்காயம் - 4 பெரியது, பூண்டு - 3 பெரியது, இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் - 10 (எண்ணிக்கை), முந்திரிப் பருப்பு - 15' (எண்ணிக்கை), பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளிப்புப் போட சிறிது அளவு, நெய் - 1 தேக்கரண்டி,  எண்ணெய் - 2 தேக்கரண்டி. மல்லி தழை, புதினா - பொடியாக நறுக்கியது (அலங்கரிக்க), உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

முதலில் தக்காளிப் பழங்களை நன்கு கழுவி விட்டு பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவிட்டு அதில் பழங்களைப் போடவும். இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். பின் பழங்களைத் தனியே எடுத்து ஆற விடவும். பின் மேல் தோலை உரிக்க சரியாய் வரும். உரித்த பின் தக்காளிப் பழங்களை மிக்ஸியில் போட்டு கூழ் பதத்தில் அரைத்து எடுக்கவும். இந்தக் கூழ் இரண்டு தம்ளர் வரும். அதை எடுத்து வைக்கவும். பின் தேங்காயைத் துருவி மிக்ஸியில் போட்டு அரைத்து, பாலை வடிகட்டிக் கொள்ளவும். இதுவும் இரண்டு தம்ளர் திட்டமாக எடுத்துக்கொள்ளவும்.

பின் வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக அரிந்துகொள்ளவும். அதை நான்கு பாகங்களாக பிரித்துகொள்ளவும். பின் பூண்டு தோல் உரித்துக் கொண்டு, இஞ்சியைத் தோல் எடுத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். பிறகு 1 பாகம் அரிந்த வெங்காயம், 5 பூண்டு பற்கள், இஞ்சித் துண்டுகள் அனைத்தும், இரண்டு பச்சை மிளகாய்த் துண்டுகள், (இவற்றைக் கொஞ்சம் எண்ணெய்யில் லேசாக வதக்கிக்கொண்டு) 5 முந்திரி பருப்புக்களை பச்சையாக (வறுக்காமல்) அப்படியே போட்டு மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இந்த விழுதை எடுத்துவைக்கவும்.

பின், 2 தம்ளர் புலவு அரிசியைச் சுத்தம் செய்து, நன்கு கழுவி, கழுவின தண்ணீரைச் சுத்தமாக இறுத்துவிட்டு, குக்கரில் சாதம் வைக்கும் பாத்திரத்தில் போடவும். அதில் 2 டம்ளர் தக்காளிப் பழக்கூழ், 2 டம்ளர் தேங்காய்ப் பால் இவற்றை ஊற்றவும். இந்த இரண்டு விதமான தேங்காய்ப் பால், தக்காளிக் கூழ் இவற்றிலேயே சாதம் வேகும்படி (2+2) 4 தம்ளர் ஆக ஊற்ற வேண்டும். பின் மிக்ஸியில் அரைத்த விழுதை அதில் ஊற்ற வேண்டும்.

பின் மீதி உள்ள 3 பங்கு வெங்காயத்தில், 2 பங்கு எடுத்துக்கொண்டு, அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை இவற்றைப் போட்டு வெடிக்க விட்டு, பின் 2 பங்கு அரிந்த வெங்காயம், மீதி உள்ள பச்சை மிளகாய் அனைத்தும், போட்டு நன்றாக வதக்கி அரிசியில் கொட்டவும். உப்பு திட்டமாக போட்டுக் கலக்கவும். பின் குக்கரில் சாதம் வேகும் நேரம் வைத்துப் பின் இறக்கி திறந்து வேறு பாத்திரத்தில் மாற்றி, அதில் மீதி உள்ள முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து எடுத்துக் கொண்டு, பின் மீதி உள்ள வெங்காயத்தை நெய்யில் நன்கு சிவக்கும் அளவு வதக்கி சாதத்தில் கொட்டி ஜல்லி கரண்டியால் லேசாகக் கிளறி பரிமாறும் பதத்தில் எடுத்து வைக்கவும். அதன் மேல் வறுத்த முந்திரிப் பருப்புக்களை அழகாக அடுக்கி வைக்கவும், கொத்தமல்லித் தழை, புதினா இவற்றை அழகாகத் தூவி விடவும்.

இதுவே டோமேடோ கோகனட்பாத், இதற்குத் தொட்டுக் கொள்ள வெங்காயத் தயிர் பச்சடி செய்யலாம்.

- யசோதா கிருஷ்ணமூர்த்தி, வரக்கால்பட்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com