முருங்கைக்காய் ஊறுகாய் இப்படி செய்து பாருங்க!
ஊறுகாய் என்றாலே நம்மில் பலருக்கு பிடிக்கும். பலருக்கு எந்த உணவாக இருந்தாலும் அதற்கு சைடு டிஷ் ஆக ஊறுகாய் கிடைத்தால் ஒரு பிடி பிடித்து விடுவார்கள். ஊறுகாயில் மாங்காய், கருவாடு, மீன், இறால், எலுமிச்சை, பூண்டு, தக்காளி, பாகற்காய் என பலவகை இருந்தாலும், அந்த வரிசையில் இன்று சுவையான முருங்கைக்காய் ஊறுகாய் எப்படி செய்யலாம் எனத் தெரிந்து கொள்ளலாம். இந்த ஊறுகாயை நீங்கள் ஒருமுறை செய்து, சுமார் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். இது உங்கள் வீட்டில் இருந்தால் சைட் டிஷ் பிரச்சனையே இருக்காது.
இதற்குத் தேவையான பொருட்கள்,
புளி - 100 கிராம்
முருங்கைக்காய் - 10
கடுகு - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
வினிகர் - சிறிதளவு
நல்லெண்ணெய் - 150 ml
வெந்தயம் - 1 டீஸ்பூன்
செய்முறை: முதலில் முருங்கைக்காயை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் குக்கரில் வைத்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
100 கிராம் புளியை தண்ணீரில் நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு வானொலியில் 100 மில்லி நல்லெண்ணையை ஊற்றி கடுகு சேர்த்து முருங்கைக்காயின் சதைப்பகுதியை தனியாக கீறி எடுத்து அதில் சேர்த்து கிளற வேண்டும்.
பிறகு அந்தக் கலவையில் கரைத்து வைத்த புளியை சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவும். அடுத்ததாக அதில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைக்கவும்.
இந்த சமயத்தில் மற்றொரு வானொலியில், கொஞ்சம் கடுகு வெந்தயம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை ஆஃப் செய்து விட்டு இந்தக் கலவையுடன் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கிளற வேண்டும். பின்னர் அதை மிக்ஸியில் நன்கு மாவாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக அடுப்பில் இன்னொரு பாத்திரம் வைத்து 50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து, நன்கு காய்ந்ததும் அரைத்த பொடியை அதில் சேர்த்து கொதிக்க விடவும். இறுதியாக அதை முருங்கைக்காய் கலவையில் சேர்த்து நன்கு கிளறி, சிறிதளவு வினிகர் சேர்த்து இறக்கினால் முருங்கைக்காய் ஊறுகாய் தயார்.