சுவையான ரவா கிச்சடி இப்படி செஞ்சு பாருங்க!
உங்களுக்கு ரவா கிச்சடி ரொம்ப பிடிக்குமா? கரண்டியில் ஒட்டாமல், வாயில் போட்ட உடனே கரைந்து வயிற்றுக்குள் போகும் ரவா கிச்சடி செய்வது எப்படி என இந்தப் பதிவில் காணலாம்.
பெரும்பாலான நபர்களுக்கு உப்புமா என்றாலே முகம் 300 கோணலுக்கு போகும். வீட்டில் யாராவது காலை உணவு என்ன என்று கேட்டால், உப்புமா என்று சொல்லி அவர்களுடைய காலைப் பொழுதை போரிங் ஆக்க வேண்டாம். உப்புமாவில் கொஞ்சம் காய்கறிகள், நெய், முந்திரிப்பருப்பு சேர்த்து, கிச்சடி என்று கூறி சாப்பிடச் சொன்னால், ஆஹா என்ன சுவை என்று அனைவருமே விரும்பிச் சாப்பிடுவார்கள். நீங்கள் சாப்பிட கூப்பிடுவதற்கு முன்னரே அனைவரும் டைனிங் டேபிளில் இருக்கையை பிடிக்க சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
ரவையைப் பயன்படுத்தி செய்யப்படும் கிச்சடி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவாகும். ஒரு சில பொருட்களை தயார் நிலையில் வைத்திருந்தால் 10 நிமிடத்தில் இதை செய்து விடலாம். இந்த ரவா கிச்சடியை சாம்பார், தேங்காய் சட்னியுடன் பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும். ரவா கிச்சடி சரியான பதத்தில் வர தற்போது நான் கூறப்போகும் விஷயங்களை நன்கு பின்பற்றுங்கள். என்னடா ஒரு ஆண்மகன் சமைப்பது பற்றி பேசுகிறானே என நினைக்க வேண்டாம். சமைக்கிறதுல என்னங்க ஆண், பெண். "மனமிருந்தால் மார்க்கபந்து, சாரி மார்க்கமுண்டு".
முதலில் ரவையை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் நன்கு வறுத்து சரியான பக்குவத்தில் எடுத்துக்கொள்ளவும்.
ஒரு கப் ரவைக்கு மூன்று கப் தண்ணீர் பயன்படுத்த வேண்டும்.
இதற்கு அரிசி ரவைக்கு பதிலாக கோதுமை ரவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது. இதன் சுவையும் நன்றாக இருக்கும்.
இந்தக் கிச்சடி செய்வதற்கு நல்ல தரமான நெய் பயன்படுத்த வேண்டும்.
கிச்சடி செய்யும்போது கொதிக்கும் நீரையே ரவையில் சேர்க்க வேண்டும்.
தேவையான பொருட்கள்:
நெய் 1 ஸ்பூன்
வெங்காயம் 1
தக்காளி 1
இஞ்சி சிறிய துண்டு
பச்சை மிளகாய் 2
முந்திரி பருப்பு 10
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி சிறிதளவு
காய்கறி கலவை ஒரு கப்
உப்பு தேவையான அளவு
தண்ணீர் 3 கப்
ரவை 1 கப்
எண்ணெய் 1 ஸ்பூன்
பட்டை சிறிய துண்டு
கிராம்பு 2
சோம்பு 1 ஸ்பூன்.

செய்முறை:
முதலில் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை நறுக்கி, ஒரு கப் அளவுக்கு வைத்துக் கொள்ளவும்.
ஒரு அகண்ட வானலியில் நெய் மற்றும் எண்ணெய் சிறிதளவு ஊற்றி சூடானதும் அதில் சோம்பு, கறிவேப்பிலை, பட்டை, பிரியாணி இலை, முந்திரி போன்றவற்றைப் போட்டு தாளிக்கவும்.
அடுத்ததாக பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும். அதிகமாக தண்ணீர் சேர்த்தால் குழைந்து விடும்.
காய்கறிகள் ஓரளவுக்கு வெந்ததும் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் அதில் ரவை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
இந்தக் கலவை நன்றாக வறுபட்டதும், கொதிக்க வைத்த நீரை அதில் சேர்த்து கிளறிவிட்டு ஐந்து நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும்.
இறுதியில் சிறிது நெய், கொத்தமல்லி இலைகள் சேர்த்து கிளறிவிட்டு இறக்கி வைத்தால் கமகம நெய் மணக்கும் கிச்சடி தயார்.
இதை சாம்பார், சட்னியுடன் சாப்பிட்டால் வேற லெவலில் இருக்கும். இந்த சுவையான கிச்சடியை ஒருமுறையாவது உங்கள் வீட்டில் செய்து ருசித்துப் பாருங்கள்.