கழுகுமலை வெட்டுவான் கோவில் தெரியுமா?

கழுகுமலை வெட்டுவான் கோவில் தெரியுமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியில் இருந்து 22 கி.மீ.தொலைவில் சங்கரன்கோவிலுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம்தான் கழுகுமலை. இந்தக் கழுகுமலையின் பழம்பெயர் அரைமலை என்றும் கூறுவர். இது ஒரு வரலாற்றுச் சிறப்புப் பெற்ற மிக முக்கியமான ஆன்மீக தலமாகும். நாம் பார்க்கப்போகும் வெட்டுவான் கோவில் தென் தமிழகத்தின் ‘எல்லோரா’ என்றழைக்கப்படுகிறது.

இந்த வெட்டுவான் கோவிலின் சிறப்பு என்னவென்றால், கழுகுமலையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கோவில் இது. இந்த கோவில் ஆனது கழுகுமலையின் ஒரு பகுதியிலிருந்து 7.50 மீட்டர் ஆழத்திற்கு வெட்டி எடுத்து அதன் நடுப்பகுதியைக் கோவிலாகச் செதுக்கி உள்ளனர் இதனால்தான் வெட்டுவான் கோயில் என்று பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது .

வெட்டுவான் கோயிலானது 8 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் செதுக்கப்பட்டது.

இந்தக் கோயில் ஆனது. சிவனை மூலவராகக் கொண்டுள்ளது. பிரம்மா, விஷ்ணு, தேவகன்னியர், பூதகணங்கள் போன்றவர்களைச் சிற்பமாகச் செதுக்கியுள்ளார்கள். ஆனால் இப்போது அங்குப் பிள்ளையாரையே மூலவராக வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

இங்குள்ள சிற்பங்கள் அனைத்தும் நுணுக்கமான முறைகள் வேலைப்பாடுகள் அமைந்து பார்ப்போரை வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இவை வெறும் சிற்பங்களா? அல்லது உயிருடன் இருந்தவர்கள் சிலையாக மாறியதா என்னும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சிற்பிகள் இவற்றை உயிரோட்டத்துடன் செதுக்கி உள்ளனர்.

இக்கோவிலில் கருவறையும், அர்த்தமண்டபம் தவிர, பாதி சிற்பங்களுக்கு மேல் வேலைப்பாடு முழுமை அடையாமல் இருக்கின்றது. இந்த கழுகுமலையில் வெட்டுவான் கோவிலுடன் சேர்த்து 3 நினைவுச் சின்னங்கள் உள்ளன.

1) சமணர் பள்ளி,

2) முருகன் கோவில்,

3) வெட்டுவான் கோவில்

இத்தகைய சிறப்புமிக்க வெட்டுவான் கோவிலை, தமிழகத் தொல்லியல் துறையினர் கலைசின்னமாகப் பாதுகாத்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் கழுகுமலை வெட்டுவான் கோயில் விளங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com