
ஸ்ரீகிருஷ்ணனை கொண்டாடும் ‘ஸ்ரீமத் பாகவதம்’ கிருஷ்ணரின் கதையை மட்டும் சொல்லாமல், அப்பெருமானிடம் நாம் எப்படி உண்மையான பக்தி செலுத்த வேண்டும் என்றும் சொல்லித் தருகிறது. குந்தி தேவியும், பீஷ்மரும் தம்மோடு இருப்பவன் சாட்சாத் அந்த பெருமாள்தாம் என்பதை உணர்ந்து எம்பெருமானிடம் கேட்ட வரங்கள், அவர்கள் பெருமாளிடம் வைத்திருக்கும் உயர்வான பக்தியை எடுத்துக்காட்டுகிறது.
”கிருஷ்ணா, உன்னை வணங்குகிறேன். நெடுங்காலம் சிறையிலிருந்து உனது தாய் தேவகி, உன்னால் விடுவிக்கப்பட்டாள். அதேபோன்று நானும் என் புத்திரர்களும் அடுக்கடுக்காக வந்த ஆபத்துகளிலிருந்தும் உன்னால்தான் விடுவிக்கப்பட்டோம். கிருஷ்ணா, மீண்டும் மீண்டும் எங்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படட்டும். ஏனென்றால், ஆபத்துக்கள் ஏற்பட்டால்தான் உன்னை மறவாமலிருந்து உனது தரிசனத்தைப் பெற முடியும். உனது தரிசனமே பிறப்பற்ற நிலைக்கு வழிகாட்டும்.
உயர் குலம், பெருஞ்செல்வம், அதிகாரம், கல்வி முதலியவற்றால் மதம் கொண்ட மனிதர்களால் உனது நாமத்தைக்கூடச் சொல்ல முடியாது. ஏனென்றால், இது எதுவுமில்லாதவர்களால்தான் உன்னை அடைய முடிகிறது. யார் எப்போது உனது திருவிளையாடல்களைக் கேட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும் நினைத்துக்கொண்டும் ஆனந்தத்தில் திளைக்கிறார்களோ அவர்களால் மட்டுமே உனது பாதக்கமலங்களை அடைய முடியும். கிருஷ்ணா, எனக்கு நான் பிறந்த விருஷ்ணி குலத்தின் மீதும், புகுந்த பாண்டவ குலத்தின் மீதும், உறவினர்களிடத்திலும் பற்று இருக்கிறது. அதை நீயே நீக்க வேண்டும். கடலையே நாடிப்போகும் கங்கையைப் போல, என் புத்தியும் வேறு விஷயங்களில் நாட்டமற்று எப்போதும் உன்னிடமே நிலைத்திருக்க வேண்டும். பகவானே, உனக்கு நமஸ்காரம்” என்றாள் குந்தி தேவி. குந்தி தேவியின் இந்த உருக்கமான சொற்களைக்கேட்டு, “அப்படியே ஆகட்டும்” என்றார் கிருஷ்ணர்.
பீஷ்மர் அம்புப்படுக்கையில் படுத்துக்கொண்டிருந்தபோது, அவரைக் காண்பதற்காக பாண்டவர்களும், வியாசர், தெளம்யர் போன்ற ரிஷிகளும் மற்றும் கிருஷ்ணரும் அர்ஜுனனும் நேரில் சென்றார்கள். பீஷ்மரை அனைவரும் வணங்கி நின்றார்கள். தன்னை வணங்கும் கிருஷ்ணர் சாட்சாத் பகவான் என்பதை பீஷ்மர் நன்கு அறிவார். அவரைத் தமது உள்ளத்தில் வைத்துப் பூஜிப்பவர் அல்லவா பீஷ்மர்? இப்போது எதிரில் வந்து நிற்பவரை பூஜித்தார்.
பிறகு, பீஷ்மர் கிருஷ்ணரைப் பற்றி அறிந்தும் அறியாமலிருந்தவர்களாக இருக்கும் பாண்டவர்களைத் தெளிவிக்க வேண்டும் என்று நினைத்து, “இந்த கிருஷ்ணர் சாட்சாத் பகவான்தான். தன்னை மறைத்துக்கொண்டு யாதவர்களிடையே வாழ்கிறான். உயிரை விடப்போகும் எனக்கு தரிசனம் கொடுக்க வேண்டும் என்ற ஒரே கரிசனத்தில் இதோ இங்கே வந்திருக்கிறான்” என்று கூறிய பீஷ்மர், “சுருண்ட முடியும் மூவுலகையும் கவரும் அழகும் கொண்ட அர்ஜுன நண்பனிடத்தில், நிஷ்களங்கமான பக்தி எனக்கு இருக்கட்டும். நண்பனுடைய வார்த்தையைக் கேட்டு, இரு படைகளுக்குமிடையே தேரைக்கொண்டு போய் நிறுத்தி, எதிரிப்படையைப் பார்த்து, தம் பார்வையாலேயே அவர்களின் ஆயுளை அபகரித்தவராகிய பார்த்தசாரதியிடத்தில் பக்தி எனக்கு இருக்கட்டும். கையில் சாட்டையையும், குதிரைக் கடிவாளத்தையும் பிடித்திருந்த இவரது அழகையன்றோ கண்கள் காண வேண்டும். மரணத் தருவாயில் உள்ள எனக்கு இவரிடத்தில் பக்தி இருக்கட்டும்” என கிருஷ்ண பக்தி வேண்டும் என்ற வரத்தை மட்டுமே பிரார்த்தித்துக்கொண்டு பீஷ்மர் கிருஷ்ணரிடத்திலேயே தனது மனம், வாக்குகளை நிறுத்தி, அவரையே பார்த்தபடி மூச்சை நிறுத்தினார்.
மனதால் நாமும் கிருஷ்ண பக்தியை மட்டுமே அந்த கிருஷ்ணரிடம் வேண்டி நிற்போம், வேண்டி பெறுவோம்.