பசும் வயலை பொன் வயலாய் மாற்றிய பரிமுகன்!

பசும் வயலை பொன் வயலாய் மாற்றிய பரிமுகன்!

வணி திருவோணம் - கல்விக் கடவுள், வாக்குகளின் கடவுளான ஹயக்ரீவர் தோன்றிய திருநாள். வேதத்தைக் காப்பாற்றுவதற்காக திருமால் எடுத்த அவதாரமே ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம். ‘ஞானம், ஆனந்தம் இவற்றின் வடிவமாய் மாசற்ற ஸ்படிகமணி போன்ற திருமேனி உடையவனாய், எல்லா கலைகளுக்கும் உறைவிடமாய், குதிரை போன்ற திருக்கழுத்தை உடையவனான எம்பெருமானை வழிபடுகின்றோம்’ என்று தம் முதல் ஸ்லோகத்தில் துவங்கி 32 ஸ்லோகங்களில் பரிமுக பெருமானின் பெருமையை பாடி இருக்கிறார் ஸ்வாமி நிகமாந்த மஹா தேசிகன், தமது ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்லோகத்தில்.

ஸ்வாமி தேசிகனுக்கு மிகவும் பிரியமான தெய்வம் ஹயக்ரீவர்தான். ஒரு தாய் எப்படி தம் கை குழந்தையை பத்திரமாகத் தான் போகும் இடத்துக்கெல்லாம் சர்வ ஜாக்கிரதையாகக் கூட்டிச் செல்வாளோ, அப்படித்தான் தனது ஆதார தெய்வமான, ஆராதனை தெய்வமான ஸ்ரீ ஹயக்ரீவ பெருமானின் மூர்த்தியையும் ஸ்வாமி தேசிகர் தம்மோடு கூட்டிக்கொண்டு வெவ்வேறு ஊர்களுக்கும் செல்வார்.

ரு முறை ஸ்வாமி தேசிகன் பொன்விளைந்த களத்தூரில் ஒரு இரவு வேளையில் தங்க நேரிட்டது. இரவு நேரத்தில் தன்னோடு இருக்கும் அந்த ஹயக்ரீவ மூர்த்திக்கு ஏதாவது உணவை நெய்வேத்யம் செய்துவிட்டு அதை உட்கொள்ளும் பழக்கத்தை கொண்டிருந்தார் ஸ்வாமி தேசிகன். அன்றிரவு அவர் கைவசம் எந்த உணவோ, பழமோ இல்லை. எனவே, அந்த கிராமத்தை சேர்ந்த மக்களிடம் தம் பெருமாளுக்கு கொடுப்பதற்காக ஏதாவது உணவு கொடுக்கும்படி கேட்டார். எல்லோருமே எதுவுமே இல்லை என்று சொல்லி கைவிரித்து விட்டார்கள். நம் பெருமாள் இன்று இரவு பட்டினியோடு இருப்பாரே என்ற கவலையில் அப்படியே கண்ணயர்ந்து விட்டார் ஸ்வாமி தேசிகன்.

விடியற்காலையில் அவ்வூர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஏதோ அச்சத்தோடு பேசிக்கொண்டு ஸ்வாமி தேசிகனிடம் வந்தனர். “ஐயா நீங்க பெரிய மந்திரவாதியோ? நேத்து உங்க ஸ்வாமிக்கு கொடுக்கணும்னு சொல்லி எங்ககிட்ட வந்து ஏதாவது உணவு இல்லாட்டா பழமோ கொடுக்க சொல்லி கேட்டீங்க. நாங்க யாருமே எங்ககிட்ட எதுவும் இல்லைன்னு சொல்லி அனுப்பிச்சிட்டோம். நடுராத்திரிக்கு மேல பார்த்தீங்கன்னா ஒரு வெள்ளை குதிரை வந்து இதோ எங்க வயலை எல்லாம் மேஞ்சுட்டு தானியத்தை சாப்பிட்டு போயிருக்குங்க சாமி. அந்த குதிரை நடந்த வழித் தடம் எல்லாம் அப்படியே தங்கமா மாறி போயிருக்கு. இது ஏதோ மந்திரம் மாயம் மாதிரிதான் இருக்கு” என்று பதற்றமும் ஆச்சரியமும் விலகாமல் கிராம மக்கள் பேசியதும் ஸ்வாமி தேசிகனுக்கு சட்டென புரிந்து விட்டது, வெள்ளை குதிரை வடிவில் வந்தது சாட்சாத் ஹயக்ரீவன்தான் என்பது.

ஹயக்ரீவர் பாதம் பட்ட இடமெல்லாம் பொன் விளைந்ததால் அன்றோ அவ்வூர் அன்று முதல் பொன்விளைந்த களத்தூர் என்றே பெயர் பெற்றது? ஹயக்ரீவரின் அருட்கடாக்ஷம் என்பது ஒருவர் மீது பட்டு விட்டால் கல்வி, செல்வம், வாக்கு வன்மை எனும் செல்வம், அபார ஞாபக சக்தி எனும் செல்வம் என்று உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் தானாகவே போட்டி போட்டுக் கொண்டு வந்து சேர்ந்து விடும். இதற்கு சாட்சியாய் இன்றும் நிற்கிறது பொன்விளைந்த களத்தூர்!

ஆவணி திருவோண நன்னாளான இன்று கலைமகளுக்கே கடவுளான ஹயக்ரீவரை நாமும் மனதில் நிறுத்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com