
கல் கருடன் பற்றி கேள்விப்பட்டிருப்போம். கல்யாண கருடன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கர்னாடக மாநிலம், மாண்டியாவுக்கு பக்கத்தில் இருக்கிறது பிண்டிகா நவிலீ (Bindiganavile) என்கிற ஒரு சிறிய ஊர். அந்த ஊருக்குள் நுழைந்து கருடன் கோயிலை நோக்கி சென்றபோது மாலை நேரம். அர்ச்சகர் வந்து கோயிலின் கதவை திறந்ததுமே சந்தன மணம் நம்மை வரவேற்றது. எங்கிருந்து வருகிறது இந்த சந்தன மணம் என்று மனம் ஆராய, சென்ன கேசவ பெருமாள் சன்னிதிக்கு பக்கத்தில் தனி சன்னிதியில் சந்தன மணம் கமழ அழகாய் காட்சி தருகிறார் சந்தன மரத்தால் ஆன கருடாழ்வார்.
அந்த கருடாழ்வாருக்கு பக்கத்திலேயே அதே சன்னிதியில், ‘சிறிய திருவடி’ என்று அழைக்கப்படும் ஹனுமனும் இருக்கிறார். பெரிய திருவடியான கருடாழ்வாரையும் சிறிய திருவடியான ஹனுமனையும் ஒரே இடத்தில் தரிசித்ததே ஆச்சரியமாக இருக்க, உத்ஸவ கருடாழ்வார் தம் இரு மனைவியரோடு கல்யாண கருடராக அருள்பாலித்தபடி மெய்சிலிர்க்க வைத்தார். ருத்ரா, சுகீர்த்தி என்பவர்கள் கருடாழ்வாரின் மனைவியர். அப்படி இரு மனைவியரோடு இருக்கும் கருடாழ்வாரை ஸ்வாமி ஸ்ரீ தேசிகன் கூட தமது கருட தண்டகம் எனும் ஸ்தோத்திரத்தில், ‘கதி ப்ரீத ருத்ரா ஸுகீர்த்தி’ என்று அருளி இருக்கிறார். கருடாழ்வாருக்கென்று கல்யாண உத்ஸவம் ப்ரத்யேகமாக நடைபெறுவதும் இத்திருக்கோயில் மட்டும்தான் என்பதே இக்கோயிலின் தனி சிறப்பு. உயர்ந்த ரக சந்தன எண்ணெயை மட்டுமே இக்கோயில் மூலவர் கருட பகவானுக்கு பூசுகிறார்கள். மற்றபடி தனியாக மூலவருக்கு அபிஷேகம் என்பது இங்கே கிடையாது.
இந்த சந்தன கருடன் இங்கே எப்படி வந்தார் என்பதே வியக்க வைக்கும் நிகழ்வாக இருக்கிறது. பேளூரில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக ஒரு முறை அக்கோயில் நிர்வாகத்தினர், மரத்தால் செய்யப்பட்ட கருட வாகனத்தை காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு சிற்பியிடம் செய்யச் சொல்ல, அந்த சிற்பியும் அதன்படியே கருட விக்ரஹத்தை தயார் செய்து விட்டார். காஞ்சியிலிருந்து பேளூருக்கு ஒரு வண்டியில் அந்த கருட வாகனத்தை எடுத்துக் கொண்டு வரும் வழியில் இரவு நேரம் சற்று ஓய்வெடுக்க எண்ணி பிண்டிகானவிலியில் வண்டியை நிறுத்தி விட்டு ஓய்வெடுத்து கொண்டனர் வண்டியில் வந்தவர்கள். அன்று இரவு அந்த வண்டி ஓட்டுனரின் கனவில் தோன்றிய கருட பகவான், ‘என் கேசவ பெருமாளை நான் இங்கேயே கண்டு விட்டேன். நான் இந்த இடத்திலேயே இருந்து அவருக்கு சேவை செய்யவே ஆசைப்படுகிறேன். எனவே, என்னை இங்கேயே விட்டு விடுங்கள்’ என்று தெரிவித்தார்.
அந்தக் கனவை ஓட்டுனர் பெரிதுபடுத்தி கொள்ளாமல், மறு நாள் காலை கருட வாகனத்தை வண்டியில் ஏற்ற முற்பட்ட போது, கருடனின் சிலையை அந்த இடத்தை விட்டு நகர்த்தவே முடியவில்லை. அதேசமயம் அந்த கிராமத்து தலைவரின் கனவிலும் அதேபோல தோன்றிய கருட பகவான் தமது விருப்பத்தைத் தெரியப்படுத்தி இருக்க, அந்த கிராமத்து தலைவர், கருடாழ்வாருக்கு தனியொரு சன்னிதி அமைத்து பூஜைகள் செய்ய ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்து விட்டார்.
இது நடந்து பல வருடங்கள் கழித்து சரியான பராமரிப்பின்றி கருடாழ்வாரின் விக்ரஹம் எறும்புகளாலும், கரையான்களாலும் மூடப்பட்டு பாம்புகளின் இருப்பிடமாக மாறி போயிருந்தது. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராவ் பகதூர் கருடாச்சார் என்ற வணிகரின் கனவில் தோன்றிய கருட பகவான், தாம் கரையான் புற்றுக்குக் கீழே மறைந்திருப்பதை அவரின் கனவின் வழி வந்து தெரிவித்தார். அதோடு, தமக்கு ஒரு புது விக்ரஹம் தந்து ஒரு சன்னிதி அமைக்கும்படியும் தெரிவிக்க, ராவ் பகதூர் உயர் ரக சந்தன கட்டை மற்றும் மிக சிறந்த சிற்பி ஒருவரை கையோடு கூட்டிகொண்டு பிண்டின்கா நவீலிக்கு வந்தார். சிற்பி கருட பகவானின் ரூபத்தை எப்படி சந்தன கட்டையில் உருவாக்குவது என்று தெரியாமல் குழம்பினார். அப்போது அந்த சிற்பியின் கனவில் தோன்றிய கருட பகவான், ‘காலையில் பார் உனக்கு தானாகவே உருவத்தை கொண்டு வர முடியும்’ என்று உரைத்தார்.
காலையில் எழுந்து அந்த சந்தனக் கட்டையை பார்த்த சிற்பிக்கு அதிசயம் காத்திருந்தது. ஆம், கருட பகவானின் உருவத்தை எப்படி வடிக்க வேண்டும் என்பதை பற்றிய அடையாள வரைவு அந்த சந்தன கட்டையில் பதிவாகி இருந்தது. அதைக் கொண்டு உருவாக்கப்பட்ட அந்த கருடனைத்தான் பக்தர்கள் மனம் குளிர இன்றளவும் தரிசனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
திருமணத் தடை நீக்கம், குழந்தை பாக்கியம் அருளல், கல்வியில் மேன்மை, வாக்கு வன்மை, மன தைரியம் ஊட்டல் என அனைத்தையும் அனைவருக்கும் அருளக் காத்திருக்கும் இந்த சந்தன கருடனையும் அவர் தம் உத்ஸவ மூர்த்தியான கல்யாண கருட பகவானையும் ஒரு முறை சென்று தரிசனம் செய்து விட்டு வாருங்களேன்.