
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் தன் கைப்பட எழுதிய விளம்பரம் ஒன்று 1.44 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் எங்கும் ஆப்பிள் நிறுவனம் தனக்கென ஒரு அடையாளத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி வைத்துள்ளது. அவர்களின் முதல் தலைமுறை ஐபோன், ஐபாட் போன்றவற்றை எலத்தில் விடும்போது அவை கோடிக்கணக்கான தொகையைப் பெறுவதைப் பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸ் கையால் எழுதிய விளம்பரம் ஒன்று கோடியில் ஏலம் போனது அரிதாகப் பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் கம்ப்யூட்டர் 1-ன் வெளியீட்டின்போது, அதை சந்தைப்படுத்துவதற்கான விளம்பரத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களே தான் கைப்பட எழுதியுள்ளார். அவர் எழுதிய அந்த விளம்பரத்தில் ஆப்பிள் 1 கணினியின் முழு விவரங்களும் அதன் சிறப்பம்சங்களும் இருக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தது.
அவர் எழுதிய விளம்பரத்தில் "போர்டுஒன்லி + மேனுவல், 75 டாலர், எ ரியல் டீல்' என்று மக்களைக் கவரும் வகையில் குறிப்பிட்டுள்ளார். அந்த விளம்பரத்தாளில் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் கையொப்பமும் இடம் பெற்றுள்ளது. மேலும் அப்போது ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையிடமாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் பெற்றோரின் முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அற்புதமான விளம்பரப் பதாகையை RR என்ற தனியார் நிறுவனம் ஏலத்திற்கு விட்டது. ஏலத்தில் இந்த விளம்பரம் 1,75,759 டாலர்களுக்கு விற்கப்பட்டது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு 1.44 கோடியாகும். இந்நிலையில் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் எழுதிய விளம்பரம் இவ்வளவு ரூபாய்க்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இன்றளவும் மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் ஆதரவை இது பிரதிபலிக்கிறது.