இளைய தலைமுறை ஆண்கள் தாங்கள் அழகாக இருப்பதை விரும்புகிறார்களா? விரும்புவதில்லையா?

இளைய தலைமுறை ஆண்கள் தாங்கள் அழகாக இருப்பதை விரும்புகிறார்களா? விரும்புவதில்லையா?

அழகு என்று சொன்னாலே முதலில் நம் எல்லோருக்கும் நினைவில் வருவது பெண்கள் மட்டும்தான். ஏனெனில் தமிழர்களும், தமிழ்ச் சமூகமும்,
சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய நவீன இலக்கியம்வரை பெண்களைத்தான், அவர்களின் அழகைத்தான் அதிகமாக வர்ணித்துப் பாடியிருக்கிறார்கள். ஆண்களின் அழகைப் பற்றி ‘அத்தி பூத்தார் போல்’ ஏதாவது ஒரு இலக்கியத்தில் பாடி இருப்பார்கள். அப்படி என்றால் ஆண்கள் அழகாக இருக்க விரும்புவதில்லையா? ஒரு சிலரிடம் கருத்து கேட்டோம். என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்...

கிருபாகரன்: இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் நிச்சயமாக அழகாக இருக்க விரும்புகிறார்கள். இதில் சந்தேகமே வேண்டாம். மேலும், அதில் தவறு ஏதுமில்லையே? ஒருவர் நம்மை முதல் முறையாகப் பார்க்கும்போது அவர்களுக்கு நம்முடைய தோற்றம்தான் முதலில் தெரியும்.  பெரியவர்களாக இருந்தாலும் சரி, சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அவர்கள் முதலில் பார்ப்பது நமது வெளித் தோற்றத்தைத்தான்.

அப்படி மற்றவர்கள் பார்க்கும் தனது தோற்றம் அழகாக இருக்க வேண்டும் என்று ஓர் இளைஞன் கண்டிப்பாக எண்ணுகிறான். பல பணிகளில் கூட அழகாக இருக்கும் ஆண்களுக்கு மட்டுமே அங்கீகாரம் அதிகமாகக் கிடைக்கிறது.

உடல் அழகைக் காட்டிலும் உள்ளத்தின் அழகு சிறந்தது என்று சிலர் சொல்வார்கள். ஆனால், இங்கு யாரும் நம் உள்ளம் எத்தனை அழகானது என்று முதலில் பார்ப்பதில்லை. புற தோற்றத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறோம் என்று பார்த்து, பிறகு பழகி, அதன் பின்னரே உள்ளத்து அழகினைப் பார்க்கிறார்கள்.

‘Don't judge a book by its cover’  இந்த பழமொழியை எல்லாரும் கேட்டிருப்போம். ஆனால், முதலில் ஒரு புத்தகத்தின் அட்டையைப் பார்த்துதானே அப்புத்தகத்தினுள் ஈர்க்கப்படுகிறோம்? அதன் பின்னர் தானே புத்தகத்தின் கருத்துகளுக்குள் நுழைகிறோம்!

நவீன்: ஆண்கள் அழகாக இருக்க விரும்புவதில்லை. எப்பவும் இயல்பாக இருக்கவே விரும்புகிறார்கள். பெண்களைப்போல் ஒப்பனை செய்துகொள்ளவோ அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்தவோ ஆண்கள் நிச்சயம் ஒருபோதும் விரும்புவதில்லை. இது இன்றைய இளைய தலைமுறை ஆண்களும் பொருந்தும்.

நான் பள்ளியில் பயிலும்பொழுது ஒரு பெண் ஆசிரியரிடம் நான் கேட்டதும், அதற்கு அவர் கூறிய பதிலையும் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். “ஆண்கள் கைகளில் ஏதாவது காப்பு, கயிறு கட்டினால் மட்டும் திட்டுகிறீர்களே மேடம். பெண்கள் வளையல் அணிந்து இருக்கிறார்கள், கயிறு கட்டி இருக்கிறார்கள். அவர்களை எதுவும் சொல்வதில்லையே! ஏன்?” என்று கேட்டேன். அதற்கு அந்த ஆசிரியை, “ஆண் என்பவன் இயல்பாகவே அழகானவன். அவனுக்கு எந்த ஒப்பனையும் கண்டிப்பாகத் தேவையில்லை. ஆனால், பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று காலம்காலமாக (அவளே நினைத்தாலும், அதை மாற்ற முடியாத அளவிற்கு) அவள் மனதில் திணித்துவிட்டார்கள். இதனால்தான் பெண்கள் அழகாக வேண்டுமென்று பல ஒப்பனைப் பொருட்கள் வாங்குகிறார்கள். ஆண்களிடம் இவ்வித கற்பிதம் எதுவும் திணிக்கப்படவில்லை” என்றார். அவருடைய இந்தப் பதில், ஆண் என்பவன் இயல்பாகவே அழகாக இருப்பான் என்பதை என் மனதில் பதிந்துவிட்டது.

சத்யா: பிறர் தங்களைப் பார்த்த மாத்திரத்தில் தங்கள் அழகினை வெளிப்படுத்த மிகவும் விரும்புபவர்கள் இன்றைய இளைஞர்கள். தங்கள் உடலானது சதைப்பற்றுடன் (அ) மெலிந்து காணப்பட்டால் உடனே நேர்த்தியான உடலமைப்பைப் பெற ஆவன செய்வார்கள்.

விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை தன்னுடையதாக்கி, அதில் பிறர் காணும் வகையில் தொலைதூரம் பயணம் செய்ய விரும்புவார்கள்.

தலைமுடி, தாடி போன்றவற்றை அழகு படுத்த விரும்புவார்கள். தங்களுடைய ஹேர் ஸ்டைல், தாடி, மீசை எல்லாம் ட்ரிம்மாக இருக்க வேண்டும் என்ற நினைப்பில், பெண்களுக்குப் போட்டியாக ஆண்களும் இன்று ப்யூட்டி பார்லர்களுக்குச் சென்று தங்களை அழகு படுத்திக்கொள்ளத் தவறுவதில்லை!

தன்னிடம் இருக்கும் பொருட்களை நேர்த்தியாகவும் விலை மதிப்புள்ளதாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள்.

இப்படி, எவ்விடத்தில் எல்லாம் எப்படி எல்லாம் தன்னை முதன்மைப் படுத்திக்கொள்ள  விரும்புகிறானோ, அவ்விடங்களில் எல்லாம். தான் அழகாய் இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறான் இன்றைய இளைஞன்.

ஸ்மார்ட் ஃபிட், ஸ்மார்ட் லுக், ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் பைக், ஸ்மார்ட் ஃபோன் என்று அவனிடம் எல்லாமே ஸ்மார்ட்தான்.

துர்காவதி: அழகு என்பது ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே வெளிப்படுத்தும். அகத்தோற்றத்தை வெளிப்படுத்துவதில்லை.  ஓர் ஆண் அழகானவனாக இருக்கவேண்டிய அவசியமில்லை. அவன் அதை விரும்புவதும் இல்லை. அவன், அன்பானவனாகவும், அறிவானவனாகவும், பண்பானவனாகவும் இருந்தால் மட்டும் போதுமானது.  அழகான ஆண்மகனை விட, அன்பான, பண்பான  ஆண்களையே, பெண்களுக்குப் பிடிக்கும். அவன் தோற்றமும் நடையும் இயற்கையாகவே அழகாக இருப்பதனால் கூடுதல் அழகு அவனுக்குத் தேவையில்லை.

வாசகர்களே!

உங்கள் கருத்துகளை ‘comments box’-ல் பதிவிடலாமே!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com