பாட்டியின் பாசமும்; வியர்வை வாசமும்!

Deepavali Pakshanam
Deepavali Pakshanam

னது பக்கத்து வீட்டு பாட்டி நூறு வயது கடந்து வாழ்ந்தவர். அவருக்கு எட்டு ஆண் குழந்தைகள். வயதான காலத்திலும் எள், ராகி போன்ற சிறுதானியங்களை வாசலில் காயவைத்து இருந்தால் அவற்றை எல்லாம் குவித்து, கூட்டி வைப்பார். வீட்டில் உள்ளவர்கள் நாங்கள் செய்துகொள்கிறோம். நீங்கள் இந்த வேலையை செய்ய வேண்டாம் என்றாலும் கேட்கமாட்டார். வேலை செய்தால்தான் நைட் பசிக்கும். பசிச்சாதான் சாப்பிட முடியும். சாப்பிட்டது செரிப்பதற்காகவாவது நானும் வேலை செய்யணுமா இல்லையா என்று கேட்பார். ஒரு நிமிடம் கூட ஓய்வாக இருக்க மாட்டார். 

எந்த வேலை செய்தாலும் மிக நேர்த்தியாக செய்வார். உப்பு,  புளிச்ச கீரை போட்டு பித்தளை, வெண்கல பாத்திரங்கள் தேய்த்து கழுவி வைத்தால் ஊரார் கண்கள் அதன் மீதே. அவர் பூ கட்டும் அழகை பார்க்க வேண்டுமே. பூ வைத்துக்கொள்ள விரும்பாதவர்கள்கூட, அவர் கட்டித் தரும் பூவை வைத்துக்கொள்ள ஆவல்கொள்வார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தீபாவளி வந்துவிட்டால் தேங்காய் பர்பி செய்வதற்கு தேங்காயை துருவி தரும் வேலையை அவர்தான் செய்வார். வெள்ளை வெளேர் என்று லேசாகக் கூட மரக்கலர் வந்து விடாதபடிக்குத் துருவி தருவார். 

இதையும் படியுங்கள்:
பல்வேறு உடற்பிரச்னைகளுக்கு மருந்தாகும் கடல் பாசி!
Deepavali Pakshanam

திருவிழா நேரங்களில் வீட்டிற்கு விருந்தினர் நிறைய பேர் வந்திருப்பார்கள். அப்பொழுது எல்லாக் குழந்தைகளும் ஒன்றாக சேர்ந்து ஒரே ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு சாப்பிட கூப்பிட்டால் வரமாட்டார்கள். ஓடி பிடித்து ஒரே கலாட்டாதான். அந்த நேரத்தில் குழந்தைகள் ஓடிவரும் திசையை நோக்கி கட்டையை உருட்டி விடுவார், அது அவர்கள் காலில் படாமல் தடுத்து நிறுத்தி அவர்களை சாப்பிடத் தூண்டும். அதேபோல் தூரத்தில் யார் வந்தாலும் பேர் சொல்லிக் கூப்பிடுவார். சரியாகத்தான் கூப்பிடுகிறாரா என்று திரும்பிப் பார்த்தால் கச்சிதமாக அவர் அழைக்கும் பெயர் கொண்டவர் வருபவராக இருப்பார்.

வ்வளவும் செய்யும் பாட்டிக்கு பிறவியிலேயே கண் தெரியாது என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.  இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு ஒரு முறை பாட்டியிடம் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, “பாட்டி நீங்கள் வேலை எல்லாம் செய்வது  பழக்கதோஷத்தில் சரிதான் என்றாலும், தூரத்தில் வரும்போதே ஒருவரை பெயர் சொல்லிக் கூப்பிடுகிறீர்களே, அதை எப்படி கண்டுபிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு பாட்டி சொன்னார், “எனக்கு இந்த வீட்டில் இருக்கும் பிறந்த குழந்தையிலிருந்து, வயதானவர்கள் வரைக்கும் உள்ளவர்களின் வியர்வை வாசம் அத்துப்படி. யாராவது சிறிது நேரம் என் அருகில் வந்து அமர்ந்து பேசிவிட்டு சென்றால்கூட அந்த வியர்வை வாசம் என் மனதிற்குள் நின்றுவிடும். அடுத்த முறை வரும்பொழுது அடையாளம் கண்டுகொள்வேன்” என்று கூறியவர் அழுதார். 

பூ கட்டும் பாட்டி
பூ கட்டும் பாட்டிmelissaenderle.blogspot.com

நான் திடுக்கிட்டு, “ஏன் பாட்டி அழுகிறீர்கள்?” என்று கேட்டேன். பாட்டி “எனக்கு 60 வயதாகும்பொழுது இரண்டு பெண் குழந்தைகளை என்னிடம் விட்டு விட்டு என் மருமகள் வேலைக்குச் சென்றுவிட்டாள். என் பேரக் குழந்தைகளுக்கு அன்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நீரிழப்பு ஏற்பட்டுவிட்டது. அதை கண் தெரியாத நான் கவனிக்காமல் விட்டதால், குழந்தைகள் இருவரும் மாண்டுவிட்டனர். அதிலிருந்துதான் நான் என் நுண்ணறிவை பயன்படுத்த ஆரம்பித்தேன்” என்றதும் என் கண்கள் பனித்தன.

அப்பொழுதுதான் மாற்றுத்திறனாளி என்பதற்கான முழு அர்த்தத்தையும் நான் புரிந்துகொண்டேன். உடலில் உள்ள  ஐம்புலன்களில் ஒன்று வேலை செய்யாது போனாலும்கூட, மற்றொரு புலன் எப்படி அவற்றை சமன் செய்து ஈடுகட்டுகிறது என்றும், இப்படி மாற்றுப் புலன்களால் நுண்ணறிவை வெளிப்படுத்துவதால்தான் அவர்களுக்கு  மாற்றுத்திறனாளி என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டேன்.

மனிதர்களின் வியர்வை வாசத்தை வைத்தே அனைவரையும் பெயர் சொல்லி அழைக்கும் பாட்டியின் பாசமும் வாசமும் என்றென்றும் நெஞ்சினிலே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com