
கடல் பாசி (sea weed) என்பது கடல் நீருக்குள் வளரும் ஒரு வகை தாவரம். இது நல்ல நீர், உப்பு நீர் என்ற பாகுபாடின்றி எதிலும் வளரக்கூடியவை. கடலில் நீருக்கடியில் உருவாகும் பூஞ்சை (Fungus) ஆல்கேவாக வளரும். இவை மேலும் வளரும்போது கடல் பாசியாக இது மாறுகிறது. பச்சை, சிவப்பு, பழுப்பு என பல வகை இதில் உண்டு. கடல் பாசி பல உயிரினங்களுக்கும் நம் உடலுக்கும் பல நன்மைகளை அளிக்கக்கூடியது.
கெல்ப்ஸ் இன கடல் பாசியானது மீன் வளம் மற்றும் பிற கடல் உயிரினங்களுக்குத் தேவையான நாற்றங்கால் அமைத்து வாழ்விடத்தை வழங்குகின்றன. கார்பனை உள்ளிளுத்து, அதிகளவு ஆக்சிஜனை வெளியேறச் செய்பவை. கடல் பாசியில் அடங்கியுள்ள சத்துக்கள் மிக மிக ஏராளம். அவை: வைட்டமின் A, C, D, E, K, B-1, B-6, B-12, கால்சியம், அயன், மக்னீசியம், பொட்டாசியம், அயோடின், நார்ச்சத்து, ப்ரீபயோடிக்ஸ் போன்றவை.
நன்மைகள்: அயோடினானது தைராய்ட் சுரப்பிகளை சமநிலையில் சுரக்கச் செய்து ஹைப்போ தைராய்ட் மற்றும் ஹைப்பர் தைராய்ட் குறைபாடுகளை குணமாக்கும்.
கால்சியம்: எலும்புகளை வலுவாக்கும். அவற்றின் தேய்மானத்தை குறைக்கும். வளர்ச்சிக்கும் உதவும்.
ஆன்டி ஆக்சிடன்டஸ்: செல் தேய்மானத்தைத் தடுக்கும். ஆக்சிடேட்டிவ் சேதத்தையும் தடுக்கிறது.
வைட்டமின் B-1: இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, டைப்-2 டயாபடிக் ஆகும் நிலையை தவிர்க்க உதவுகிறது.
அதிகளவு நார்ச்சத்து: நச்சுக்களை வெளியேற்றும். ஜீரண மண்டலத்தின் முழு ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மலச்சிக்கல் தீர்க்கும். உயர் இரத்த அழுத்தம் சமப்படும். கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கிறது. இவற்றினாலெல்லாம் இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது. பசி தாங்கியாய் இருப்பதால் அடிக்கடி எதையாவது உண்ணும் உணர்வு ஏற்படாது.
ப்ரீபயோடிக்ஸ்: இரைப்பை மற்றும் குடலில் வளரும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உறுதுணை புரிகிறது.
கடல் பாசி ஜிகர்தண்டாவில் ஒரு கூட்டுப் பொருளாக சேர்க்கப்படுகிறது. இதை சமைத்தும், சாலட்களில் சேர்த்தும் உண்ணலாம். இதை நீரில் கரைத்து தோட்டத்து செடிகளுக்கு, குறிப்பிட்ட இடைவெளியில் முறைப்படி ஊற்றி வர, செடிகள் ஆரோக்கியமாய் வளரும். இதிலிருந்து உரமும் தயாரிக்கலாம். அழுகிய நிலையில் உள்ள கடல் பாசியை உணவில் உபயோகிப்பது ஆரோக்கியத்துக்கு சீர் கேடு. இதைத் தவிர்ப்பது நலம்.
அதிகளவு நன்மைகள் கொண்ட கடல் பாசியை அடிக்கடி உணவில் சேர்த்து உடல் ஆரோக்கியம் பெறுவோம்.