நவராத்திரியும் மூன்று பெண்களும்!

சிறுகதை!
நவராத்திரியும் மூன்று பெண்களும்!
nalam tharum Navarathiri
nalam tharum Navarathiri

ஓவியம்: தமிழ்         

     லாரம் அடித்தது. டக்கென்று வாசுகிக்கு விழிப்பு வந்தது. அடடா இன்று நவராத்திரி பூஜையின் முதல் நாள் ஆயிற்றே. அழைத்தவர்களில் எத்தனை பேர் வருவார்களோ? யாருக்கும் எந்தக் குறையும் இல்லாமல் பிரசாதம் தந்து அனுப்ப வேண்டும்.

      வருடா வருடம் நவராத்திரி வந்து விட்டால் வாசுகிக்கு கொண்டாட்டம்தான். பார்த்துப்பார்த்து பொம்மைகள் வாங்கி அதை ஜோடிப்பதிலிருந்து படிக்கட்டுகளை ஜரிகை சால்வைகளைக் கொண்டு அழகாக்கி அவற்றின் மேல் நேர்த்தியாக அடுக்குவது என்று செம பிசிதான். அதிலும் இப்போதெல்லாம் கான்சப்ட் முறையில் காட்சிகளை உருவாக்கி வருபவர்களை ஆச்சர்யத்துடன் பார்க்க வைப்பதில் உள்ள சுகமே தனிதான். சென்ற முறை கொரோனாவின் தாக்கங்களும் அவற்றைத் தடுக்கும் வழிகளும் என அருமையான கான்சப்டை உருவாக்கி அனைவரையும் வியக்க வைத்தவள் இந்த முறை நிலாவில் சந்திராயன் ராக்கெட் செட்டை வாங்கி அழகாக அமைத்து விட்டாள்.

மணி ஏழாயிற்று. முப்பது நிமிடங்கள் காலைக்கடன்களை முடித்து சூர்ய வணக்கத்துடன் தனது உடற்பயிற்சியையும் முடித்துவிட்டு காப்பியுடன் செய்தித்தாளை படிக்கத் துவங்கினாள் வாசுகி. என்னதான் அலைபேசியில் உலகம் முழுக்க நிகழும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டாலும் விலாவாரியாக ஒப்பனை வார்த்தை களுடன் வரும் செய்திகளை சுடசுட அச்சு வாசனையுடன் தாளில் படிப்பது பூமியில் சொர்க்கம் வாசுகிக்கு.  

     “அருண் விடுப்பா... ப்ளீஸ்” கிசுகிசுப்பான ரம்யாவின் குரல் காதில் விழ காதில் விழாதது போல் இன்னும் மும்முரமாக செய்தித்தாளுக்குள் முகம் பதித்தாள் வாசுகி. 

  ’’இவ்வளவு சீக்கிரம் எழுந்தாச்சா? என்ன பண்ணப்போறா?” மனது வழக்கம்போல் முணுமுணுக்க கீழே இறங்கி வந்த ரம்யாவோ, 

 “ஹாய் அத்தை குட்மார்னிங்” என்று உற்சாகத்துடன் சொல்ல வேறு வழியின்றி முகத்தில் வலிய வரவைத்த போலிப் புன்னகையுடன் தலையசைத்து சிரித்தாள் வாசுகி.    

  இனி வீடு தலைகீழாக மாறிவிடும். ரம்யா அலுவலகம் கிளம்பும் வரை. ரம்யா இந்த வீட்டின் மருமகளாகி ஒரு வருடம் ஓடியே போயிற்று. போன நவராத்திரி முடிந்து வந்த ஜாதகம். பெற்றோருக்கு ஒரே மகளாக செல்லமாக வளர்ந்தவள். படிப்பு நாட்டியம் என அனைத்திலும் பெயர் பெற்றவள். பார்க்கவும் அம்சமாக இருப்பாள் .முதல் மகன் அருணுக்கு பெண் பார்க்கத் துவங்கி ஒரு வருடமாக மனதுக்குப் பிடித்த பெண் அமையாமல் ரம்யாவைப் பார்த்ததும் பிடித்துப்போய் மருமகளாக்கி கொண்டாள். இளையவன் பரத் வெளிநாட்டில் படிக்க கணவர் எந்நேரமும் தொழிலில் மூழ்கி கிடக்க ரம்யாவைத் தன் மகளாகவே நினைத்து அத்தனை அன்பைப் பொழிந்தாள் வாசுகி.

ஆனால் என்னவோ தெரியவில்லை .ரம்யாவின் முகத்தில் ஏதோவொரு குற்றவுணர்வு வாசுகி தரும் சாப்பாட்டை சாப்பிடும்போதும் மற்ற நேரங்களிலும் தெரியும்.

ஆரம்பத்தில் வாசுகிக்கு தெரியவில்லை. நாள் செல்ல செல்லத்தான் ரம்யா தன்னிடம் அவ்வளவு நெருக்கத்தை காண்பிக்காததை கவனித்தாள். அகம் மலர்ந்து சிரிப்பதற்கும் கடமைக்கு சிரிப்பதற்கும் உள்ள வித்யாசம் வாசுகி அறியாததா என்ன?

ஆனால் ஒன்று. வாசுகி இப்படி நினைப்பதை வெளியில் சொன்னால் யாருமே நம்பாமல் வாசுகியையே குறை சொல்லுமளவுக்கு ரம்யா நடந்து கொண்டாள் மாமனாரிடமும் கணவரிடமும் காட்டும் அப்பழுக்கற்ற அன்பை மாமியாரிடமும் காட்டினாலும் சற்று விலகியே இருந்ததும் தெரிந்தது. காரணம் என்னவென்று வாசுகிக்குப் புரியவே இல்லை.

இதையும் படியுங்கள்:
25000 பல்புகள்! ஜகஜோதியாக மிளிரும் மைசூர் அரண்மனை – மைசூர் தசரா திருவிழா!
நவராத்திரியும் மூன்று பெண்களும்!

இதோ காலை அவள் எழுந்ததுமே போட்டுத்தரும் காப்பி முதல்  உணவு வரை அவள் கையில் கொண்டுபோய் தருவதிலிருந்து, ரம்யா எது சொன்னாலும் ஆட்சேபிக்காமல் ஒத்துக் கொள்வது வரை வாசுகி அவளுக்கு எந்தக் குறையும் வைப்பதில்லை.      

  “அத்தை நான் குளிச்சிட்டு கிளம்பறேன் ..சாயந்திரம் வர லேட்டாகும்..அம்மா வீட்டுக்குப் போறேன். “

வாசுகியின் தலையசைப்பிற்கு காத்திருக்காமல் பறந்தாள் ரம்யா ”அடக் கடவுளே! இவ பாட்டுக்கு அம்மா வீடே கதியாய் போய் விடுகிறாள். இங்க நா ஒருத்தியே வரவங்கள கவனிக்க வேண்டியிருக்குது. என்னத்த சொல்ல?

 சுந்தரேசன் அவள் புலம்பியதை கவனித்தபடியே வந்தார்.

“என்ன வாசுகி நீ பாட்டுக்கு தனியே புலம்பிகிட்டு இருக்கே?”    

 “ ஒண்ணுமில்லீங்க, நம்ம ரம்யாவோட போக்கே சரியில்லை. நாம என்னதான் சுதந்திரம் தந்தாலும் இப்படியா நடந்துக்குவா?”     

 “ ரம்யாவா? என்ன பண்றா?..”     

 “ இன்னிக்கு நம்ம வீட்டுல முதல் வருஷம் நவராத்திரியக் கொண்டாடாம அவ அம்மா வீட்டுக்குப் போறாளாம். ரெண்டு நாள் முன்னதான் போனா. என்னதான் அவ வீட்டுக்கு ஒரே பொண்ணா இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க. நான் ஏதாவது சொன்னா மாமியார் சரியில்லைன்னு பேர் வந்துரும்னு அமைதியா இருக்கேன்.”

   என்ன வாசுகி நாம தெரிஞ்சுதானே அவளை மருமகளாக்கினோம். ரொம்ப செல்லமா வளர்ந்த பொண்ணு. கொஞ்ச நாளைக்கு விட்டுப் பிடிப்போம். நாம அவ மேல காட்டற அக்கறையும் நடந்துக்கிற விதமும் அவளைக் கண்டிப்பா ஒரு நாள் நம்மைப் புரிந்து கொள்ளச்செய்யும். கவலைப் படாம வழக்கம்போல நவராத்திரி வேலைகளைப் பார். 

மாலை வேலை. இன்னும் சிறிது நேரத்தில் கொலுவுக்காக அழைத்தவர்கள் வர ஆரம்பித்து விடுவார்கள். வாசுகி பரபரப்புடன் நைவேத்தியதுக்கு பொங்கல் மட்டும் வைத்தாள்.

திடீரென்று வாசுகிக்கு வியர்த்துத் தள்ளிற்று. ஒரு வேளை பசியா? இல்லை மருமகள் பற்றிய கவலையான எண்ணமா? இல்லை இன்னும் நவராத்திரி பிரசாதங்களை தயார் செய்ய வில்லை எனும் பரபரப்பா?  

எண்ணியவள் தடுமாற்றத்துடன் வந்து சோபாவில் படுத்தாள். சுந்தரேசன் வாசுகியின் மயக்கத்தைப் பார்த்து ஓடி வந்து ஃபேன் போட்டு தண்ணீர் தந்து தலை கோதினார். வாசலில் ஆட்டோ சப்தத்துடன்  யாரோ வரும் சப்தமும் கேட்டது.

  “அடடா என்ன ஆயிற்று இங்க பாருங்க” ஆதரவாக கன்னம் தட்டிய கைகளின் அன்பான ஸ்பரிசம் வாசுகியை கண் விழிக்க வைத்தது.

“அட நம் கன்னம் தட்டியது மருமகள் ரம்யாவா?” நம்ப முடியவில்லை வாசுகியால். ரம்யா அனைவருக்கும் காப்பி தயார் பண்ண எழுந்து உள்ளே போனாள். உடன் வந்திருந்த அவள் அம்மா பேசினாள்.   

 “என்ன அண்ணி, உடம்பக் கவனிச்சுக வேண்டாமா? நீங்களே எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்யறதால் மனசு  தாங்காம என்னிடம் சொல்லி சொல்லி புலம்புகிறாள் ரம்யா. செல்லப் பொண்ணுன்னு  வீட்டு வேலைகளில் பழக்காமல் விட்டது என் தப்புதான். கம்ப்யூட்டர் தெரிந்த அளவுக்கு கரண்டி பிடிக்கத் தெரியலன்னு அவளுக்கு குறை. அதுவும் பெரியவங்க நீங்க ஒவ்வொரு வேலையையும் இழுத்துப்போட்டு செய்யறப்ப தன்னால எதுவும் உதவ முடியலைன்னு ரம்யாவுக்குள்ள ஒரு நினைப்பு. அதுதான் உங்க கிட்ட அவளால முழு மனசா பழக முடியாம தடுத்திருக்கு.

இதையெல்லாம் என்னிடம் சொல்லி இந்த நவராத்திரி பத்து நாளைக்கும் வருபவர்களுக்குத் தரவேண்டிய பிரசாதத்தை தயாரிக்க சொன்னாள். இதோ பச்சைப்பயிறு சுண்டலும் பாயசமும் ரெடியா இருக்கு. நானும் உதவ வருகிறேன் என்று சொன்னதால் என்னையும் அழைத்துக்கொண்டு வந்தாள். இதை உங்களிடம் சொன்னால் சிரமம் எதற்கு என்று தடுத்து விடுவீர்கள் என்று சொல்ல வேண்டாம் என்று தடுத்தாள். என் பொண்ணு என்னிக்குமே நம்ம ரெண்டு பேருக்குமே பொண்ணுதான் அண்ணி. நீங்க எதையாவது மனசுல போட்டுக் குழப்பிக்காதீங்க.

 சுந்தரேசன் வாசுகியைப் பார்த்தார். வாசுகி மயக்கத்துடன் மனதும் தெளிந்தவளாக ரம்யாவிடம் சென்று “அம்மா ரம்யா வருபவர்களைக் கவனிக்க வேண்டியது உன்னோட முழுப் பொறுப்பு வேலை செய்ய முடியலங்கற கவலை எல்லாம் வேண்டாம். உன்னால் என்ன முடிகிறதோ அதை செய். அந்தக் காலம் வேறு. இந்தக் காலம் வேறு புரியுதா?”

ரம்யா அத்தையையும் அம்மாவையும் பார்த்துப் புன்னகைத்தாள். அங்கு கொலுவில் இருந்த முப்பெரும் தேவியரும் இந்த மூன்று சக்திகளையும் பார்த்துப் புன்னகையுடன் ஆசிர்வதித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com