ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றங்கள்! உங்கள் பாக்கெட் முதல் பயணம் வரை...எகிறப்போகும் விலை..!

ஏப்ரல் 1, முதல், இந்தியா முழுவதும் பல முக்கிய நிதி சார்ந்த மற்றும் அன்றாட வாழ்க்கை விதிகள் மாறவுள்ளன.
april 1st changes
april 1st changes
Published on

ஏப்ரல் 1, முதல், இந்தியா முழுவதும் பல முக்கிய நிதி சார்ந்த மற்றும் அன்றாட வாழ்க்கை விதிகள் மாறவுள்ளன. LPG விலைகள், வருமான வரி விதிமுறைகள் மற்றும் ரெயில் பயண முன்பதிவு ரத்து செய்தல் ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.

குறிப்பாக, உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில், இந்த மாற்றங்களில் பல உங்கள் பொருளாதார நிலையைப் பாதிக்கக்கூடியவையாக அமையும். ஒவ்வொரு மாதத் தொடக்கத்தைப் போலவே, இந்த மாற்றங்களும் வீட்டுச் செலவுகள், வரிகள் மற்றும் பயணச் செலவுகளை நேரடியாகப் பாதிக்கக்கூடும்.

இந்த மாற்றங்கள் நிர்வாக அமைப்புகளை எளிமைப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தாலும், அவை குடும்பங்களுக்கான செலவுகளை அதிகரிக்கக்கூடும்; இதன் விளைவாக, நாடு முழுவதும் உள்ள மக்களின் அன்றாடச் செலவுகள், வங்கிச் செயல்பாடுகள் மற்றும் பயணத் திட்டமிடல் முடிவுகள் ஆகியவை பாதிக்கப்படலாம்.

LPG,CNG மற்றும் ATF விலைகள் மாறக்கூடும் :

ஏப்ரல் 1-ம்தேதி எரிபொருள் விலைகள் திருத்தி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் நெருக்கடியின் காரணமாக, LPG விநியோகம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.2,043.50-க்கும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.928க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்! சென்னையில் எகிறிய சிலிண்டர் விலை!
april 1st changes

ஏப்ரல் 1ம்தேதி, ​​மீண்டும் LPG சிலிண்டர் விலைகளில் புதிய மாற்றம் வெளியாகி சாமானிய மக்கள் அதிர்ச்சியடைய வாய்ப்புள்ளது. ATF (விமான எரிபொருள்), CNG மற்றும் PNG ஆகியவற்றின் விலைகளும் மாறக்கூடும்; இந்த மாற்றங்கள் போக்குவரத்துச் செலவை அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது.

வருமான வரிச் சட்டம், 2025 :

பழைய 1961-ம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக, புதிய 'வருமான வரிச் சட்டம், 2025' நடைமுறைக்கு வருவதன் மூலம் ஒரு முக்கிய சீர்திருத்தம் அமலுக்கு வரவுள்ளது. இதில் ஒரு முக்கிய மாற்றம் என்னவென்றால், 'படிவம் 16' (Form 16) ஒரு புதிய ஆவணம் மூலம் மாற்றீடு செய்யப்படலாம். மேலும், சம்பளம் சாராத வருமானத்திற்கான TDS விவரங்களைக் கொண்ட 'படிவம் 16A' (Form 16A) என்பது, 'படிவம் 131' (Form 131) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, காலாண்டுத் தாக்கல் நடைமுறைகள் முடிந்த 15 நாட்களுக்குள் வழங்கப்படும். இந்த மாற்றங்கள் சம்பளதாரர்கள் மட்டுமின்றி, ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வட்டி வருமானம் ஈட்டும் மூத்த குடிமக்களுக்கும் பொருந்தும்.

வருமான வரிச் சட்டத்தின் தேதி மாற்றம்:

ITR-3 மற்றும் ITR-4 படிவங்களின் கீழ் வரும், கணக்கு தணிக்கைக்கு உட்படாத வரி செலுத்துவோருக்கான வருமான வரித் தாக்கல் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வரி செலுத்துவோர் இனி ஆகஸ்ட் 31 வரை தங்கள் வருமான வரி விவரங்களைத் தாக்கல் செய்யலாம்.

திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவும் மாறுகிறது. அனைத்து வரி செலுத்துவோர் மார்ச் 31 வரை அபராதங்களுடன் திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யலாம். டிசம்பர் 31 வரை அபராதங்கள் இல்லாமல் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யலாம்.

ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ள கல்வி மற்றும் மருத்துவப் பணப் பரிமாற்றங்களுக்கான TDS 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

ஏப்ரல் 1 முதல், பணியில் இருக்கும்போது உடல் குறைபாடுகள் (Disability) காரணமாக சேவையிலிருந்து விலகிய ஆயுதப் வீரர்களுக்கு மட்டுமே வரி விலக்கு கிடைக்கும், மற்றவர்களுக்கு வரி விதிக்கப்படும்.

கல்வித் தேர்வுக்கான விலக்கு ஒரு மாணவருக்கு ரூ.3000 ஆகவும், விடுதி விலக்கு ரூ.9000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ரெயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான கட்டணம் அதிகரிக்கும்:

வரும் ஏப்ரல் 1 முதல் ரெயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் புதிய மாற்றத்தை ரெயில்வே கொண்டு வந்துள்ளது.

அதன்படி, ரெயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது. 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் 50% தொகை திருப்பித் தரப்படும். ரெயில் புறப்படுவதற்கு 24 முதல் 72 மணி நேரத்திற்கு முன்பாக ரத்து செய்தால் மட்டுமே முழு கட்டணம் திருப்பித் தரப்படும் என கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக பயணிகள் தங்களுடைய போர்டிங் பாயிண்ட்டை மாற்றிக் கொள்வதற்கான வசதி கொண்டு வரப்பட்டிருக்கிறது. ரெயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் வரை பயணிகள் தங்களுடைய போர்டிங் பாயிண்ட் அதாவது தாங்கள் ரெயில் ஏறக்கூடிய நிலையத்தை மாற்றிக் கொள்ளலாம்.

புதிய சம்பள விதிகள் :

ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிகள் (New Income Tax Rules) ஆனது, நிறுவனத்திற்கான உங்களுடைய சிடிசி-ஐ (CTC) மாற்றாது; ஆனால் உங்கள் சம்பளம் கட்டமைக்கப்படும் விதத்தை மாற்ற உள்ளது.

புதிய விதிகளின்படி, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு நிறுவனம் வீடு வழங்கினால், 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் வசிப்பவர்களுக்குச் சம்பளத்தில் 10 சதவீதமும், குறைந்த மக்கள் தொகை கொண்ட இடங்களில் 5 முதல் 7.5 சதவீதமும் வரியாகக் கணக்கில் கொள்ளப்படும். ஒருவேளை நிறுவனம் வாடகைக்கு எடுத்து வீடு வழங்கினால், உண்மையான வாடகை அல்லது சம்பளத்தில் 10 சதவீதம் இதில் எது குறைவோ அதுவே வரிக்குரிய சலுகையாகக் கருதப்படும்.

அதேபோல், நிறுவனங்கள் வழங்கும் 1.6 லிட்டர் இன்ஜின் திறனுக்கு உட்பட்ட கார்களுக்கு மாதம் 5,000 ரூபாயும், அதற்கு மேற்பட்ட திறனுள்ள கார்களுக்கு 7,000 ரூபாயும் வரிக்குரிய வருமானமாகக் கணக்கிடப்படும். ஓட்டுநர் வசதி வழங்கப்பட்டால் கூடுதலாக 3,000 ரூபாய் சேர்க்கப்படும்.

ஊழியர்களின் ஓய்வூதிய நிதிகளில் நிறுவனம் செலுத்தும் பங்களிப்பு ஆண்டுக்கு 7.5 லட்ச ரூபாயைத் தாண்டினால், அந்த கூடுதல் தொகைக்கு வரி விதிக்கப்படும்.

நிறுவனங்கள் வழங்கும் பரிசுகள் மற்றும் வவுச்சர்களுக்கான வரி விலக்கு வரம்பு 15,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் பெறப்படும் பரிசுகள் முழுமையாக வரிக்கு உட்படுத்தப்படும்.

அலுவலக நேரத்தில் வழங்கப்படும் உணவைப் பொறுத்தவரை, ஒரு வேளை உணவின் மதிப்பு ரூ.200 வரை இருந்தால் அதற்கு வரி கிடையாது. இது கேன்டீன் உணவுகள் மற்றும் உணவு வவுச்சர்களுக்கும் பொருந்தும்.

தொழில்நுட்ப ரீதியாக, இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு டிஜிட்டல் நிறுவனங்களின் வருவாய் ரூ.2 கோடியை தாண்டினாலோ அல்லது 3 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டிருந்தாலோ, அவை இந்தியாவிற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும்.

அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை உயர்வு:

ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளான பாராசிட்டமால் மற்றும் ஆண்டிபயாட்டிக் மருந்துகள் உட்பட மொத்தம் 900 மருந்துகளின் விலை உயர்த்தப்படுவதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு 0.65% இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் மருந்து தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள், பேக்கேஜிங் பொருட்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

புதிய தொழிலாளர் சட்டங்கள்:

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் ஒரு தனியார் நிறுவன ஊழியர் வேலையை விட்டு நிற்கும் போது அவருக்கான Final and Full settlement-களை இரண்டு அலுவல் நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என விதிமுறை கொண்டு வரப்பட்டிருக்கிறது.

அதேபோல் வேலையை ராஜினாமா செய்வோருக்கு 2 நாட்களிலேயே சம்பள பாக்கி , அலோவென்ஸுகள், போனஸ் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும். ஒருவேளை பணிநீக்கம் செய்யப்பட்டாலும் நிதி இழப்பீடுகள் 2 நாட்களில் கைக்கு வந்துவிடும். எனவே ஊழியர்கள் எப்போது சம்பள பாக்கி கிடைக்கும் என காத்திருந்து கவலைப்பட தேவையில்லை.

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு:

ஏப்ரல் 1 முதல் திண்டிவனம், ஆத்தூர், கணியூர், கப்பலூர், கீழ் குப்பம், கிருஷ்ணகிரி, மாத்தூர், நாங்குநேரி, ஸ்ரீபெரும்புதூர், பரனூர், திருப்பாச்சேத்தி, வானகரம் உள்ளிட்ட 66 சுங்கச்சாவடிகளில் 5% முதல் 7% வரை கட்டணம் உயருகிறது.

இதனால் தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை விட கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரையும், லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதே போல் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.300 முதல் ரூ.350 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் விலையை ரூ.3000ல் இருந்து ரூ.3075 ஆக உயர்த்தவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

முட்டைகளுக்கு காலாவதி தேதி கட்டாயம்:

உத்தரப் பிரதேச அரசின் புதிய உத்தரவின்படி, வரும் ஏப்ரல் 1 முதல் விற்கப்படும் ஒவ்வொரு முட்டைகள் மீது, முட்டையிட்ட தேதி மற்றும் காலாவதி தேதி (Expiry Date) கட்டாயம் அச்சிடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 1 முதல் பழைய முட்டைகளை விற்கும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெயிலில் இலவச உணவு, இலவச டிக்கெட் திட்டம்:

இந்தியன் ரெயில்வே, இலவச உணவு, இலவச டிக்கெட் வழங்கும் புதிய திட்டத்தை ஏப்ரல் முதல் அறிமுகம் செய்ய உள்ளது. விசுவாசத் திட்டத்தின் கீழ், அடிக்கடி ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கிலோ மீட்டர் அடிப்படையில் வெகுமதிப் புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தப் வெகுமதி புள்ளிகளை ரெயில் பயணிகள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும்போது, பெற்ற வெகுமதி புள்ளிகளின் அடிப்படையில் அடிப்படைக் கட்டணத்தில் தள்ளுபடி பெறலாம் அல்லது ஒரு முழுமையான பயணச்சீட்டை இலவசமாகப் பெறலாம். அதேபோல, பயணிகள் தங்களுக்குப் பிடித்த உணவுகளை ரெயிலில் இ-கேட்டரிங் மூலம் இலவசமாக ஆர்டர் செய்யவோ, பயணத்தின்போது ரெயில் நிலையத்தின் சொகுசு ஓய்வறைகளில் இலவச உணவை உண்டு மகிழவோ முடியும். வெகுமதி புள்ளிகளின் அடிப்படையில் டிக்கெட்டுகளை மூன்றாம் ஏசி-யிலிருந்து இரண்டாம் ஏசி-க்கும், இரண்டாம் ஏசி-யிலிருந்து முதல் ஏசி-க்கும் மாற்றிக்கொள்ளவும் முடியும்.

இந்தத் திட்டம் வந்தே பாரத் மற்றும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் பிரீமியம் ரெயில்களில் முன்னோட்டமாகச் செயல்படுத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வரும் புது மாற்றம்..!
april 1st changes

ஏசி, டிவி, வாஷிங் மிஷன் விலைகள்:

ஏப்ரல் 1 முதல், டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் போன்ற பொருட்களின் விலை உயரும் நிலை உருவாகி இருக்கிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வு, விநியோகச் சங்கிலி (Supply Chain) சிக்கல்கள், கப்பல் கட்டணம் அதிகரிப்பு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com