பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெறும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10,000 பரிசு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.277 கோடி மதிப்பில் புதிய பள்ளிக் கட்டடங்கள், ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். ரூ.94 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
அந்தவகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தனது உரையில், "பள்ளிக் கல்வித்துறைக் கட்டடங்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் இடங்களாகச் செயல்படுகின்றன. புதிதாக 2,715 பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறைக் குடும்பத்தில் இணைந்துள்ளனர். முதல்வர் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டு துறைகளையும் தமது அரசின் இரு கண்களாகக் கருதிச் செயல்படுத்துகிறார்.
6 மாதங்களில் ஆசிரியர்களான உங்களுக்கு பொதுத் தேர்வும், எங்களுக்கும் பொதுத் தேர்தலும் வர உள்ளன. நீங்களும் வெற்றி பெற வேண்டும், நாங்களும் வெற்றி பெற வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
மேலும் அரசு செயல்படுத்தி வரும் 'அன்பு கரங்கள்' திட்டத்தின் மூலம் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். புதிதாக இணைந்த ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறை குடும்பத்தில் புதிய உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர். தமிழகப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு, இந்த புதிய ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்வில் தமிழில் முழு மதிப்பெண் பெற்ற 142 மாணவர்களுக்கு ஏற்கனவே ரூ.10,000 வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த பரிசுத்தொகை மாணவர்களை ஊக்கப்படுத்துவதோடு, அவர்களின் வளர்ச்சிக்கும் வித்திடும் என்பதில் சந்தேகமில்லை.