ஒரு தேர்தலில் ஒருவருக்கு நான் ஆலோசனை வழங்கினால் 100 கோடி தனக்கு சம்பளம் என்று பேசியிருக்கிறார் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்.
ஒரு கட்சிக்கு தேர்தலில் பிரச்சாரம் முதல் அனைத்தையும் வடிவமைத்துக் கொடுக்கும் பல்வேறு நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ளன. சமீப ஆண்டுகளாக இந்தியாவிலும் இந்த முறை இருந்து வருகிறது. அப்படி இந்த வியூகம் வகுத்துத் தருபவர்களில் அதிகம் பிரபலமானவர் பிரசாந்த் கிஷோர். பீகாரை சேர்ந்தவரான பிரசாந்த் கிஷோர் பல முன்னணி கட்சிகளுக்கு ஆலோசகராக விளங்கி கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர்.
2014ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றபோது பிரசாந்த் கிஷோரின் (Prashant Kishor) அப்போதைய I-PAC நிறுவனம்தான் வியூகம் வகுத்து கொடுத்தது. கடைசியாக 2021ஆம் ஆண்டில் இவர் அமைத்து கொடுத்த வியூகத்துடன் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும், தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலினும் ஆட்சியை கைப்பற்றினர். அதன்பின்னர், 2021 மே மாதமே அவர் I-PAC நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.
2022ஆம் ஆண்டு மே மாதம் இவர் ஜன் சுராஜ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஜன் சுராஜ் கட்சி வரும் 2025ஆம் ஆண்டு பிகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பீகாரில் நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த 4 தொகுதிகளிலும் ஜன் சுராஜ் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இது அந்த கட்சிக்கு முதல் தேர்தலாக அமைந்துள்ளது.
இதனையடுத்து பிரசாந்த் கிஷோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் பேசுகையில், “ஒரு தேர்தலுக்கு ஒருவருக்கு நான் ஆலோசனை கூறினால் எனக்கு கிடைக்கும் சம்பளம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஒரு தேர்தலில் நான் ஒருவருக்கு அறிவுரை கூறினால், எனது கட்டணம் ரூ. 100 கோடி. இதுபோன்ற ஒரே ஒரு தேர்தலுக்கு நான் ஆலோசனை கூறினால் எனது பிரச்சாரத்திற்கு செலவு செய்ய முடியும்.” என்றார்.
இப்படி வெளிப்படையாக பேசியதால் கடந்த காலங்களில் அவரை வியூக ஆலோசகராக பணியில் அமர்த்திய பாஜக, திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.