சமீபத்தில் நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். ஆனால் ஒவ்வொரு தீபாவளியின்போதும் பொதுமக்கள் அலட்சியமாகவும், ஆபத்தை உணராமலும் பட்டாசுகளை வெடிப்பதால் காயமடைகிறார்கள்.இது தவிர்க்கப்பட வேண்டும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பட்டாசு வெடிப்பதால் கண்களில் காயங்கள் ஏற்படுகின்றன. அதற்கு இந்த தீபாவளியும் விதி விலக்கல்ல. இந்த தீபாவளியன்றும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த ‛கார்பைட் கன்' பற்றிய பின்னணி தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன.இவை நம்மை திடுக்கிட வைக்கின்றன.
வடமாநிலங்களில் ‛கார்பைட் கன்'அதிகமான மக்களை பாதித்துள்ளது. ‛கார்பைட் கன்' எனப்படுவது ஒரு துப்பாக்கி போன்றது. இந்த துப்பாக்கியால் சுடும் போது அதிலிருந்து தோட்டா வெளியே வருவது போல், இந்த ‛கார்பைட் கன்'னை அழுத்தும்போது ‛கால்சியம் கார்பைடும் தீக்குச்சி மருந்தும் சேர்ந்து சத்தமாக வெடித்து வெளியேறும். இது பிளாஸ்டிக் குழாய் அல்லது தகர டப்பாவை பயன்படுத்தி தயாரிக்கப்படும் வெடியாகும். அதன் உள்ளே ‛கன் பவுடர்' எனும் ‛கால்சியம் கார்பைட் பவுடர்' நிரப்பப்படுகிறது. அதன்பிறகு தீக்குச்சியின் மேற்பரப்பில் கால்சியம் கார்பைட் பவுடருடன் சேர்த்து அழுத்தும்போது அது அதிக சத்தத்துடன் வெடிக்கிறது. ஆனல் இந்த வெடி மிகவும் ஆபத்தானது என இப்போது அறியப்படுகிறது.
வெடிக்கும்போது பிளாஸ்டிக் குழாய், தகர டப்பா ஆகியவை வெடித்து பல திசைகளிலும் சிதறலாம். இது வெடியை வெடிப்பவர் கண்களிலும் முகத்திலும் காயத்தை ஏற்படுத்தலாம். இதனால் மத்திய பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் இந்த ‛கார்பைட் கன்' விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இது எல்லாக் கடைகளிலும் தீபாவளிப் பண்டிகையின் போது சுமார் ரூ.150 முதல் ரூ.200 விலைக்கு வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் குழந்தைகளும் இதனை வீட்டிலேயே செய்து பயன்படுத்தினார்கள். சிலர் தடையை மீறியும் இதை விற்பனை செய்தனர்.
இதனை பயன்படுத்தி பட்டாசு வெடித்து மத்திய பிரதேசத்தில் 122 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போபால், இந்தூர், ஜபால்பூர், குவாலியர் ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதில் 14 குழந்தைகளின் கண்பார்வை பறிப்போய் உள்ளது. விதிசா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மத்திய பிரதேசத்தை போல் பீகாரிலும் ஏராளமானவர்கள் இந்த ‛கார்பைட் கன்' வெடியை பயன்படுத்தி காயமடைந்துள்ளனர். சுமார் 75க்கும் அதிகமானவர்களின் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட 2 மாநிலங்களில் மட்டும் தீபாவளிக்கு ‛கார்பைட் கன்' பயன்படுத்தி 200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அதில் 14 பேர் கண் பார்வையை இழந்துள்ளனர். இதனால் தீபாவளி சமயத்தில் இந்த வகை ‛பட்டாசு' பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.