

காலம் மாற மாற நவீன காலத்திற்கு ஏற்றபடி அனைத்திலும் புதுமை புகுந்துவிட்டது... உணவுமுறை, உடை, கலாச்சாரம், பழக்கவழக்கம் என அனைத்திலும் புதுமையின் வருகை அதிகரித்தபடியே உள்ளது. அந்தவகையில், சம்பிரதாயப்படி நடக்கும் திருமணங்களிலும் தற்போது புதுமை வரத்தொடங்கி விட்டது. திருமண அழைப்பிதழ் அச்சடிப்பதிலும், ஆடைகளை வடிவமைப்பதிலும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமைகளை புகுத்தி வருகின்றனர். இந்தியாவை பொருத்தவரை, திருமண நிகழ்வை நடத்துவது என்பது சாதாரண காரியமல்ல. அது ஒரு சம்பிரதாயமாகவே பார்க்கப்படுகிறது.
அதுவும் நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் சுபகாரியங்களில் மொய் எழுதுவது என்பது காலம் காலமாகவே பின்பற்றப்பட்டு வரும் வழக்கமாகும். விசேஷங்களுக்கு மொய் வைப்பது என்பது சம்பிரதாயமாகவும், அன்பை வெளிப்படுத்துவதற்காகவும், வட்டியில்லா முதலீடாகவும் (திரும்ப செய்யவேண்டும் என) பார்க்கப்படுகிறது.
மொய் செய்தவர்கள் மீண்டும் அவர்களுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்பது கௌரவமாக பார்க்கப்படும். இதனால் எந்த ஒரு விசேஷத்தையும் தவறவிடமால் சென்று பதில் மொய் செய்வார்கள். இந்த மொய் நடைமுறை பணத்தின் மூலம் விசேஷங்களை நடத்துபவர்கள் குடும்பத்தினரின் பொருளாதார தேவையை நிறைவேற்ற உதவும்.
தென்னிந்தியாவில் நடத்தப்படும் திருமணம் போன்ற விசேஷ நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்கள், அவர்களால் முடிந்த தொகையை மொய் கவரில் போட்டு கொடுப்பது வழக்கம். முன்பெல்லாம் விசேஷங்கள் நடக்கும் போது மொய் எழுதுவதற்கென்றே நெருங்கிய உறவுகளை உட்கார வைத்துவிடுவார்கள்.
கடைசியில் வசூலான மொய் பணத்தை எண்ணி அவரே திருமண வீட்டாரிடம் ஒப்படைத்துவிடுவார். ஆனால் தற்போது காலம் மாற மாற திருமணத்திற்கு வருபவர்கள் மொய் பணத்தை மணப்பெண் அல்லது மணமகள் அல்லது அவர்களை சார்ந்தவர்களிடம் கொடுக்கும் வழக்கம் வந்து விட்டது.
ஆனால் அதையெல்லாம் மிஞ்சும் வகையில் ஒரு திருமணத்தில் மொய் வைப்பவர்களின் வசதிக்காக ஒருவர் QR codeஐ சட்டைப்பையிலேயே வைத்து கொண்டு சுற்றி சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அது வேறு எங்கும் இல்லைங்க. நமது அடுத்த மாநிலம் கேரளாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த வகையில், கேரளாவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் நடைபெற்ற மொய் விருந்தில் QR code மூலம் பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மணமக்களின் உறவினர் ஒருவர் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கான கியூ ஆர் கோடு பொறித்த அட்டையை தனது சட்டைப்பையில் ஒட்டி இருந்தார்.
பின்பு, திருமணத்திற்கு வந்த விருந்தினர்களை கவனித்து வந்த அவர், யாராவது மொய் வைக்க வேண்டுமென்றால், இதை ஸ்கேன் செய்து கொள்ளுமாறும் கூறியிருக்கிறார். சிலர், அப்படி QR codeஐ ஸ்கேன் செய்து தங்களது மொய்ப்பணத்தை செலுத்தி இருக்கிறார்கள். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில் கல்யாண வீட்டிலும் கியூ ஆர் கோடு? இன்னும் என்னவெல்லாம் புதுமை வரப்போகிறதோ? என்று இணையவாசிகள் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் சிலர், எல்லாம் டிஜிட்டல் மயமாகிவரும் சூழலில் மொய் செய்வதையும் டிஜிட்டல் மயமாக்கி இருப்பதும் பாராட்டுதலுக்குரியதே என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்!!!
