உலகின் மிகப் பிரபலமான பழமையான வைரங்களில் ஒன்றுதான் புளோரன்டைன் வைரமாகும். தற்போது இந்த வைரம் கனடாவில் உள்ள ஒரு வங்கியில் பெட்டகத்தில் பாதுகாப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
புளோரன்டைன் வைரம் என்பது இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் கோல்கொண்டா சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்டதாகும். 138 கேரட் எடையில் மஞ்சள் நிறத்தில் 126 முகங்கள் கொண்ட ரோஜா வடிவத்தில் பட்டைதீட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க வைரமாக இந்த வைரம் கருதப்படுகிறது. கோல்கொண்டாவில் வெட்டி எடுக்கப்பட்ட போது இது கரடுமுரடாக இருந்தது. 15-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஐரோப்பிய முறைப்படி பட்டை தீட்டப்பட்ட முதல் பெரிய வைரங்களில் இதுவும் ஒன்று.
இந்த வைரமானது 15 ஆம் நூற்றாண்டில் பல ஐரோப்பிய குடும்பங்களிடம் இருந்து வந்துள்ளது.இத்தாலி நாட்டில் பிளாரன்ஸ் நகரத்தைச் சார்ந்த மெடிசி குடும்பம் மற்றும் ஆஸ்திரியாவின் ஹஸ்பார்க் வம்சத்தின் வசம் இந்த வைரம் இருந்துள்ளது. முதல் உலகப்போரின் முடிவில் ஆஸ்திரியா ஹங்கேரி பேரரசு சரிந்த போது கடைசி பேரரசர் முதலாம் சார்லஸ் மற்றும் பேரரசி ஜிட்டா தங்களுடைய ஆபரணங்களை பாதுகாக்க சுவிட்சர்லாந்திற்கு அனுப்பினார்கள்.
அதன் பின் இந்த வைரம் காணாமல் போனதாகவும் திருடப்பட்டதாகவும் பல துண்டுகளாக வெட்டப்பட்டதாகவும் ஏராளமான கட்டுக் கதைகள் சொல்லப்பட்டன. ஆனால் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் நாஜி படைகளிடமிருந்து தப்பி வட அமெரிக்க நாடான கனடாவுக்கு வந்த பேரரசி ஜிட்டா இந்த வைரத்தையும் மற்றும் சில ஆபரணங்களையும் ஒரு சிறிய சூட்கேஸில் வைத்து அதை அங்குள்ள வங்கிப் பெட்டகத்தில் ஒப்படைத்தார்.
பாதுகாப்பு கருதி இந்த ரகசியத்தை தன் இரு மகன்களிடம் மட்டும் சொல்லி பேரரசர் சார்லஸ் இறந்து 100 ஆண்டுகள் வரை வெளியில் சொல்லக்கூடாது என சத்தியம் வாங்கிக் கொண்டார். தற்போது 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஹப்ஸ்பர்க் வம்ச வாரிசுகள் இந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளனர். போர்க்காலத்தில் தங்கள் குடும்பத்திற்கு அடைக்கலம் கொடுத்த கனடா நாட்டிற்கு நன்றிக் கடனாக, இந்த வைரத்தையும் மற்ற ஆபரணங்களையும் அந்நாட்டு அருங்காட்சியகத்திலேயே வைக்க அவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த வைரத்தின் மதிப்பு 19 ஆம் நூற்றாண்டிலேயே 12 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்டதாகக் கருதப்பட்ட இந்த வைரத்தின் இன்றைய சந்தை மதிப்பு கணக்கிட முடியாத அளவிற்குப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எது எப்படியோ, கோல்கொண்டா வைரத்திற்கு எங்கு சென்றாலும் தனி மதிப்பு தான்!
இந்த வைரம் மட்டுமல்ல, உலகின் மிக விலை உயர்ந்த பல வைரங்கள் கோல்கொண்டாவிலிருந்து வந்தவைதான்:
கோஹினூர் (Koh-i-Noor): தற்போது பிரிட்டிஷ் கிரீடத்தில் உள்ளது.
ஹோப் வைரம் (Hope Diamond): நீல நிற வைரம், தற்போது அமெரிக்காவில் உள்ளது.
டாரியா-இ-நூர் (Daria-i-Noor): ஈரான் நாட்டு கருவூலத்தில் உள்ளது.