
நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்கும் நேரம் கடந்த சில ஆண்டுகளாக குறைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது எதிர்பாராமல் நடக்கும் பட்டாசு விபத்துகளில் இருந்து, பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை எதிர்பாராமல் பட்டாசு விபத்துகள் ஏதேனும் நிகழ்ந்தால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்காக தமிழ்நாடு முழுக்க 108 ஆம்புலன்ஸ் சேவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது தமிழ்நாடு சுகாதாரத்துறை.
இந்தியாவில் விசேஷமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி மிகவும் முக்கியமானது. இப்பண்டிகையின் முக்கிய அம்சமே பட்டாசு வெடிப்பது தான். தற்போதைய காலகட்டத்தில் பல ரகங்களில் வண்ண வண்ண பட்டாசுகள் வந்துவிட்டன. பட்டாசு வெடிக்கும் போது நாம் கவனக்குறைவாக இருந்தால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புண்டு. அப்படி ஒருவேளை விபத்து ஏற்பட்டால், தாமதிக்காமல் 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க ஆங்காங்கே 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் குறுகிய சாலை கொண்ட பகுதிகளில் பைக் மூலமும் ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து ஆம்புலன்ஸ் சேவை மாநிலத் தலைவர் எம்.செல்வகுமார் கூறுகையில், “தீபாவளி பண்டிகையின் போது மருத்துவ உதவி, பேரிடர் மீட்பு மற்றும் தீ விபத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் பொதுமக்கள் உடனடியாக 108 என்று எண்ணை அழைக்கலாம். குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை அடிப்படையில் ஆங்காங்கே 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
தேவை ஏற்படின் பொதுமக்கள் 108-ஐ அழைத்தால் அருகில் உள்ள சேவை மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும். பிறகு அடுத்த 10 நிமிடத்திற்குள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஆம்புலன்ஸ் சென்று விடும். ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்திலும் மீட்பு உபகரணங்கள், தீயணைப்பு சாதனங்கள், அவசர தேவைக்கான மருந்துப் பொருட்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவை போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
குறுகிய சாலைகள் கொண்ட இடங்களில் விரைந்து செயல்பட ‘108 பைக் ஆம்புலன்ஸ்’ வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் வாகனங்களில் தீக்காயங்களை கையாளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
108 ஆம்புலன்ஸ் சேவை உங்களின் உயிர்காக்கும் பாலமாகவும், அவசரத் தேவைக்கு உங்களின் நண்பனாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தீயணைப்புத் துறை, காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு பொது மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகள், மாவட்ட சுகாதார அதிகாரி, மருத்துவ சேவைகள் இணை இயக்குநர் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளுடன் ஒருங்கிணைந்து தமிழக சுகாதாரத் துறை 108 ஆம்புலன்ஸ் சேவையை வழங்குகிறது.