
பொதுமக்களின் அவசரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் வங்கிக் கடன்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் ரெப்போ வட்டி விகிதத்தைப் பொறுத்து தான், கடனுக்கான வட்டியை வங்கிகள் தீர்மானிக்கின்றன. அண்மையில் புதிய ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்ற சஞ்சய் மல்ஹோத்ரா, மூன்று முறை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து விட்டார். தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.50% என்ற அளவில் உள்ளது. இதனால் வீட்டுக் கடன் வாங்கியோருக்கு வட்டி விகிதம் குறைந்தது.
இதனையடுத்து தற்போது மீண்டும் ஒருமுறை ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கியோருக்கு ரெப்போ வட்டி விகிதத்தின் குறைப்பு சற்று ஆறுதலை அளிக்கும். ஏனெனில் மற்ற கடன்களைக் காட்டிலும் வீட்டுக் கடன் நீண்ட காலத்திற்கு செலுத்தும் வகையில் இருக்கும். இதனால் வீட்டுக் கடன் வட்டி விகிதம் இதில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
வீட்டுக் கடன் வாங்கியோர், வட்டி விகிதத்தில் ஃபுளோட்டிங் ரேட் என்பதைத் தேர்வு செய்திருந்தால் மட்டுமே ரெப்போ விகிதம் குறையும் போது பலன் கிடைக்கும். பிக்ஸட் ரேட்டைத் தேர்வு செய்திருந்தால், ரெப்போ விகிதம் குறைந்தாலும் பலன் கிடைக்காது. அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் கடந்த வாரம் ஜிஎஸ்டி வரி குறைப்பை அறிவித்து பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளித்தது மத்திய அரசு.
இந்நிலையில் தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் குறைக்க முடிவு செய்துள்ளது ரிசர்வ் வங்கி. இதன்படி 5.25% அல்லது 5.0% ஆக ரெப்போ விகிதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெப்போ விகிதம் குறைந்தால், வீட்டுக் கடன் வாங்கியவர்களின் வட்டி குறைவதோடு, சற்று மன நிம்மதியும் கிடைக்கும். அதோடு புதிதாக கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும். புதிதாக வங்கிக் கடன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இதுவொரு நல்வாய்ப்பாகும்.
ரெப்போ விகிதம் குறைந்தால், அதன் பலன் கடனுக்கான வட்டி விகிதத்தில் எதிரொலிக்கும். ஆனால் வாடிக்கையாளர்கள் தான் வங்கிக்குச் சென்று வட்டியைக் குறைக்கவோ அல்லது மாதத் தவணைகளின் எண்ணிக்கையை குறைக்கவோ முற்பட வேண்டும்.
இதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ரெப்போ வட்டி குறைந்து விட்டது; இதனால் நாம் வாங்கிய கடனுக்கான வட்டியும் தானாகவே குறைந்து விடும் என்று யாரும் அமைதியாக இருக்கக் கூடாது. நீங்கள் தான் வங்கிக்கு சென்று இதுகுறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒருசில வங்கிகள் மட்டும் வாடிக்கையாளர்களுக்கு ரெப்போ வட்டி குறித்த விழிப்புணர்வை அளிக்கின்றன. கடனுக்கான வட்டி குறைந்து வாடிக்கையாளர்களுக்கு மகிழ்வான செய்தி என்றாலும், தக்க சமயத்தில் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும். நடப்பாண்டில் மட்டும் 3 முறை ரெப்போ வட்டி குறைந்துள்ளதால், தீபாவளிக்குள் 4வது முறையாக வட்டி குறையவுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அரிய வாய்ப்பை வாடிக்கையாளர்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.