ஜார்கண்ட் மாநிலத்தில் காவலர் உடற்தகுதி தேர்வு நடந்துக்கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்து 11 பேர் இறந்துள்ளனர். மேலும், 100 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் ஒருசில இடங்களில் அதிக மழையும் ஒருசில இடங்களில் அதிக வெயிலும் என சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஜார்கண்டில் காவல்துறையில் சுமார் 600 கான்ஸ்டபில் பணியிடங்களை நிரப்புவதற்கான உடற்தகுதித் தேர்வு கடந்த மாதம் 22ம் தேதி முதல் 7 மையங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த உடற்தகுதித் தேர்வில் கலந்துக்கொண்டவர்கள் திடீரென்று மயக்கம்போட்டு விழுந்தனர். அதில் சிலர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்டின் பலமுவில் உள்ள மையத்தில் 4 பேர், கிரிதியில் உள்ள மையத்தில் 2 பேர், ஹஸாரிபாக்கில் உள்ள மையத்தில் 2 பேர், ராஞ்சி, மொசபானி, சாஹேப்கஞ்ச் பகுதியில் ஒருவர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர்.
அவர்கள் அனைவரும் வெயிலில் அதிக நேரம் கடும்பயிற்சியில் ஈடுபட்டதால் உயிரிழந்ததாக தெரிகிறது. இவர்கள் சுமார் 10கிமீ தூரத்தில் ஓடியதாக செய்திகள் வந்துள்ளன. மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் ஸ்டீராய்டு உள்ளிட்ட மருந்துகளை எடுத்துக்கொண்டு பயிற்சியில் ஈடுபட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த 11 பேரின் இறப்பு இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து ஜார்கண்ட் முதலமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மிகுந்த மன வேதனையை அளிப்பதாக அவர் தெரிவித்தார். கான்ஸ்டபில் பணிக்கான தேர்வை 3 நாள்களுக்கு ஒத்திவைக்கவும் அவர் உத்தரவிட்டார். மேலும், காலை 9 மணிக்கு பிறகு உடற்தகுதித் தேர்வை நடத்தக்கூடாது எனவும் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து கடுமையான வெயிலில் பயிற்சி செய்பவர்கள், விளையாடுபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.