டேட்டிங் என்ற ஆப்பில் பெண்கள் போல பேசி பணத்தைப் பறிக்கும் கும்பலிடம் அடிமைகளாக வேலைப் பார்த்து வந்த இந்தியர்களை மீட்டுள்ளனர்.
வெளிநாட்டில் லட்சக் கணக்கில் பணம் சம்பாரிக்கலாம் என்ற ஆசையில், அதுபோன்ற விளம்பரம் ஏதாவது வந்தால், உடனே அங்கு சென்றுவிட முடிவெடுத்துவிடுவது வழக்கமாகி வருகிறது. அதேபோல், பலர் அதனை நம்பி அடிமைகளாக வேலைப் பார்த்து வருவதும் வழக்கமாகத்தான் நடந்து வருகிறது.
அந்தவகையில், விளம்பரத்தை நம்பி லாவோஸ் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற 47 இந்தியர்கள் ஆன்லைன் மோசடி கும்பலிடம் அடிமைகளாக வேலைப்பார்த்து தவித்து வந்துள்ளனர். அதாவது, அவர்களுக்கு ஒரு ஆன்லைன் அகௌன்ட் கொடுத்து, அதில் பெண்கள் போட்டோ டிபி வைத்து, இந்திய மக்களிடம் பேசவைக்கின்றனர். முதலில் நன்றாக பேசிவிட்டு, பின் வேலையைக் காட்டுகின்றனர். கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை கூறுகின்றனர். அதிக பணம் கிடைக்கும் என்று ஆசைப்படுபவர்கள் இந்த கும்பலின் மோசடியில் சிக்கி பணத்தை இழக்கின்றனர்.
இந்த மோசடியில் சிக்க வைப்பதற்கு ஒரு டார்கெட் கொடுக்கின்றனர். அந்த டார்கெட்டை குறித்த நேரத்தில் முடிக்கவில்லை என்றால், அவர்களுக்கு உணவு கொடுப்பது கிடையாது. தூங்கவிடாமல், ஓய்வும் தராமல், ஒரு அடிமைகள் போல் வேலை வாங்கிக்கொண்டிருந்தது அந்த கும்பல். அளவுக்கடந்த துன்புறுத்தலை அனுபவித்து வந்த அவர்கள், ஒரு மாதத்திற்கு முன்னர் லாவோஸில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். லாவோஸில் இருந்து கடந்த மாதத்தில் 13 பேர் மீட்கப்பட்டிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து அந்த நாட்டிற்கு விரைந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், அந்த நாட்டு அதிகாரிகளுடன் இந்த பிரச்னை குறித்து பேசியிருக்கிறார். லாவோஸ் நாட்டின் கோல்டன் டிரையாங்கில் சிறப்பு
பொருளாதார மண்டலத்தில் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அங்கு ஆன்லைன் குற்றங்களுக்கு கொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்ட 29 பேரை மீட்டு இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தனர். அதேபோல, இந்திய தூதரகத்தில் புகார் செய்திருந்த 18 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்பவர்கள் சற்று விசாரித்தே செல்ல வேண்டும். ஏனெனில், இந்தச் சம்பவம் போல, ரஷ்யாவிற்கு வேலைக்கு செல்லும் ஆட்களை, உக்ரைன் உடனான போருக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்க்கதை என்பதால், வெளிநாட்டுக்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.