

இரு தினங்களுக்கு முன்பு திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய விஜய், தவெக, திமுக இடையே தான் போட்டி. இதற்கு இடையில் வேறு யாருக்கும் எந்த வேலையும் கிடையாது. திமுக இப்படி ஆனதற்கு என்ன காரணம் என்பதை அந்தக் குடும்பத்துக்குள்ளேயே சென்று கேளுங்கள் என்று திமுகவினர் கூறுகின்றனர். இதைப் புரிந்துகொள்ளாமல் மக்களை பற்றி தவறாக பேசுகிறார்கள் என்றெல்லாம் திமுகவை நேரடியாகவே தாக்கி பேசியிருந்தார் முதலமைச்சர் விஜய்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தவெக அரசை மிக கடுமையாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, விரைவில் தவெக அரசுக்கு முடிவுரை எழுதப்படும் என்றும் ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளும் தவெக அரசை கடுமையாக விமர்சித்தார். உதயநிதி, ஒரு மாதத்தில் தவெக அரசு எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் கொண்டு வரவில்லை என சாடினார்.
மேலும் நான் கோட் போடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் கோட் போடணுமா என முதலமைச்சர் விஜய் பேசியதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
அவர் (முதல்வர் விஜய்) கோட் சூட் போட்டது குறித்து நாம் ஒரு விமர்சனமும் செய்யவில்லை; அவர் கோட் சூட் அவரு போட்டுக் கொள்கிறார் அதற்கு புதுசா விளக்கம் ஒன்று கொடுத்தார்; கருப்பு கோட் போட்டது பெரியார் கொள்கையாம், இதைவிட மோசமான உருட்டு இருக்கா? என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இந்த புதிய அரசு, பொறுப்பேற்று 25 நாள் ஆச்சு. உருப்படியா ஏதாவது ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கீங்கன்னு சொல்ல முடியுமா? ஒரு திட்டமும் கிடையாது. எல்லா விதத்திலும் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள், அதுதான் பிரச்னை!” என்றார்.
மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின், எதைக் கேட்டாலும் திமுக செய்கின்ற சதி என்று கூறுகிறார்; இப்படிப்பட்ட முதலமைச்சரை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து விட்டார்கள், அந்த முடிவை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தூர சக்தி, ஓர சக்தி, பார சக்தி என்று திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் போல ரைமிங்காக டயலாக் பேசுகிறார்.
ஏற்கனவே இருந்த போலீஸ் வேனில் ஸ்டிக்கரை மாற்றி சிங்கப்பெண் என்ற திட்டத்தை உருவாக்கினார்கள். ஆனால் அதையும் அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. இப்படி ஒரு திட்டத்தையும் செயல்படுத்த வக்கில்லாத ஒரு சோபா மாடல் ஆட்சி தற்போதைய ஆட்சி என்று விமர்சித்தார்.
ஆனால் 2021ல் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்கும்போது, மகளிருக்கு விடியல் பயணத் திட்டத்திற்கு முதல் கையெழுத்து போட்டாரு. முதல் நாளே அதை கொண்டு வந்தாரு.
அப்போ கொரோனா இரண்டாவது அலை லாக்டவுன் வேற. மகளிர் விடியல் பயணம், கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் 4,000 ரூபாய், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு என இதெல்லாம் செய்தது நமது திராவிட மாடல் அரசு. ஆனா இன்னைக்கு இந்த 'சோபா மாடல்' அரசு ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்றிருக்காங்களா?
நாம இந்த தேர்தலில் சில லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் விரைவில் தவெக அரசின் முகத்திரையை கிழிப்பார்கள், முடிவரை எழுதுவார்கள். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு என்னென்ன விஷயங்கள் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என பேசி தவெக அரசை கடுமையாக பேசினார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
ரீல்ஸ் போட்டவர்கள் செய்தி பார்க்கிறார்கள் என முதல்வர் கூறியதற்கு அதுதான் உங்கள் வீழ்ச்சிக்கு காரணமாகப்போகிறது. மக்கள் சட்டமன்றத்தை தொடர்ந்து கவனிப்பார்கள், இந்த மாற்றமும் விழிப்புணர்வும் தான் தவெகவின் வீழ்ச்சிக்கு காரணமாகப்போகிறது.
யாரு சட்டமன்ற உறுப்பினர், யாரு அமைச்சர்ன்னு முதலமைச்சருக்கே தெரியாத ஒரு ஆட்சி நடக்குது. இன்னொரு கொடுமை என்னவென்று தெரியுமா? இப்போது அமைச்சராக பொறுப்பேற்றவர்களுக்கு அவர்களுக்கு எந்த துறை என்றே தெரியவில்லை. ஒரு அமைச்சர் சொல்கிறார் சுற்றுலாத் துறையா அல்லது சுற்றுச்சூழல் துறையா என்று. இந்த மாதிரி கேடுகெட்ட ஆட்சியை எங்காவது பார்த்து இருக்கீங்களா?
மீண்டும் நமது தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. நம்ம பெயரை சொல்லி வாக்கு கேட்டு நன்றி கூட சொல்லாம போன நன்றிகெட்ட கூட்டம் தான் காங்கிரஸ். இதை திமுகவினர் ஒருபோதும் மறக்க மாட்டார்கள், மறக்கவும் கூடாது.
எமர்ஜென்சியை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. அப்போது எங்கள் ஆட்சி போனாலும் பரவாயில்லை என்று மக்களுடன் நின்றது திமுக.
பயம் என்பது திமுகவிற்கு கிடையாது. எவ்வளவு பெரிய தோல்வி வந்தாலும் மீண்டும் எழுந்து வருவோம் என்றார்.
ஒரு பழமொழி சொல்வார்கள்.. ஒரு கோமாளி அரண்மனைக்கு போவதால் அவன் அரசன் ஆகிவிடமாட்டான்.. அந்த அரண்மனை தான் சர்க்கஸ் கூடாரமாகிவிடும் என்று.. இப்போது அது தான் நடந்துகொண்டு இருக்கிறது. ஆனால் ஒரு கோமாளி இல்லை.. 13 கோமாளிகள்.. ரம்மியில் சொல்வார்கள் இல்லையா.. 13-ம் ஜோக்கராக இருந்தால் என்னய்யா செய்யுறது என்று.. அப்படித்தான் இப்போ ஆட்சி நடக்கிறது என்று கூறினார்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்கும் கேள்விகளுக்கு எந்த ஒரு பதிலும் சொல்லாத விஜய் மேடைகளில் ஆவேசமாக பேசுகின்றார் என கூறி திமுகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அடுத்த சட்டமன்ற கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் முன் வைக்கும் கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் முதல்வர் விஜய் பதிலளிப்பாரா? இல்லை எப்போதும் போல் மௌனம் காப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.