15 லட்சம் ஜன்தன் கணக்குகள் நீக்கம்! உங்களிடம் ஜன்தன் கணக்கு இருக்கா..??
இன்றைய சூழலில் வங்கியில் கணக்கு வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் எந்த ஒரு பணபரிவர்த்தனையும் வங்கிகள் மூலமே நடைபெறுகிறது. அதேபோல் மத்திய-மாநில அரசுகளின் நலதிட்டங்களுக்கு வழங்கும் பெரும்பாலான நிதி உதவிகள் பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்குகளின் மூலமாக தான் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது.
வங்கிகளில் எந்தவொரு வைப்பு தொகையும் இல்லாமல், ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை தொடங்குவதற்காக இந்திய அரசாங்கம் தொடங்கிய உன்னத திட்டமே பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டமாகும்.
அந்த வகையில் இந்தியாவில் ஏழை, எளியவர் ஏழைகள் பலர் வங்கி கணக்கு இல்லலாமல் இருந்த நிலையில் அனைவருக்கும் வங்கி கணக்கு என்பதை அடிப்படையாக கொண்டு கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ‘ஜன்தன்' திட்டத்தைத் கொண்டு வந்தார்.
இந்த திட்டத்தின் மூலம் எந்தவொரு வைப்பு தொகையும் இல்லாமல், ஜீரோ பேலன்ஸில் வங்கி கணக்கை பராமரிக்க முடியும். இதன்மூலம், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இந்தியர்கள் முறையான நிதி அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டனர். ‘ஜன்தன்' திட்டம் தொடங்கி 11 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் இதுவரை 56 கோடியே 16 லட்சம் பேர் ‘ஜன்தன்' வங்கி கணக்கு தொடங்கியுள்ள நிலையில் இவர்களுடைய வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்து 755 கோடி பணம் இருப்பு உள்ளது.
இந்நிலையில் சுமார் 13 கோடி (23%) ஜன்தன் கணக்குகள் செயல்படாமல் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அரசு பொதுத்துறை வங்கிகளில் செயல்படாமல் இருந்த 15 லட்சம் ஜன்தன் கணக்குகளை தற்போது நீக்கி இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்யவில்லையெனில் அதனை செயல்படாத வங்கிக் கணக்காக அறிவிப்பார்கள். அந்த வகையில் தான் தற்போது அப்படி செயல்படாமல் இருந்த வங்கி கணக்குகளை நீக்கி இருக்கிறார்கள்.
ஜன் தன் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கேஒய்சி அப்டேட் செய்து கொண்டால் மட்டுமே கணக்கினை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என பல மாதங்களாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து வந்ததுடன், அதற்காக வங்கிகளிலேயே முகாம்கள் கூட நடத்தப்படுகின்றன. இருந்தாலும் மக்கள் வெளியூர்களுக்கு இடம்பெயர்வது, வேலை நிமித்தமாக சென்று பல வங்கிகளில் ஜன் தன் கணக்கு தொடங்கி இருப்பது ஆகியவையும் அதிக எண்ணிக்கையில் இந்த வகை கணக்குகள் செயல்படாமல் இருக்க காரணமாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1,77,69,122 ஜன் தன் வங்கி கணக்குகள் உள்ள நிலையில், அதில் 39,25,000 கணக்குகள் செயல்படாத கணக்குகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலேயே அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் தான் 10 கோடிக்கும் அதிகமான ஜன் தன் கணக்குகள் இருக்கின்றன.
எனவே உங்கள் ஜன்தன் கணக்கு நீக்கப்பட்டிருந்தால் உடனே வங்கிக்கு சென்று தேவையான ஆவணங்களை கொடுத்து மீண்டும் செயல்பட தொடங்க முடியும். ஆனாலும் சில கணக்குகள் மீண்டும் செயல்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது.