
இன்றைய சூழலில் வங்கியில் கணக்கு வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் எந்த ஒரு பணபரிவர்த்தனையும் வங்கிகள் மூலமே நடைபெறுகிறது. அதேபோல் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் எப்போதும் குறைந்தபட்ச இருப்பை வங்கியில் வைத்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்படி இல்லாத பட்சத்தில் வங்கிகள் அபராதமாக குறிப்பிட்ட பணத்தை பிடித்து கொள்கிறது. அதைக் கருத்தில் கொண்டே எந்தவொரு வைப்பு தொகையும் இல்லாமல், ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை தொடங்குவதற்காக இந்திய அரசாங்கம் தொடங்கிய உன்னத திட்டமே பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டமாகும்.
அந்த வகையில் இந்தியாவில் ஏழை, எளியவர் என நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு என்பதை அடிப்படையாக கொண்டு பிரதமர் மோடியின் ‘ஜன்தன் யோஜனா’ திட்டம் கொண்டு வரப்பட்டது.
பிரதமரின் மக்கள் வங்கி கணக்கு திட்டத்தை கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதலில் இந்த திட்டத்தை 2005-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி தான் அறிமுகம் செய்தது. அதன்பிறகே சில திருத்தங்களுடன் பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா அல்லது பிரதமரின் மக்கள் வங்கித் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வீட்டு உபயோக சமையல் எரிவாயுக்கான அரசு மானியம், அரசு ஓய்வூதியம், முத்ரா திட்டம் மற்றும் மற்ற அரசுத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் அனைத்து நிதியுதவிகளும் இந்த கணக்கிற்கே நேரடியாக வரவு வைத்துக் கொள்ள முடியும். இதனால் ஜன் தன் வங்கி கணக்கு திட்டம் கிராமப்புற, ஏழை விவசாயிகள் என அனைவருக்கும் மிகவும் பயனளிக்கும் விதமாக இருந்து வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் குக்கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வங்கி சேவையை பெற்று வருகின்றனர். வங்கிகளுக்கே செல்லாதவர்கள் கூட தற்போது வங்கியின் மூலமே பணப்பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஜன் தன் வங்கி கணக்குகள் வைத்துள்ள நிலையில், இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் இதுவரை வரவு செலவுகளை மேற்கொள்ளாதவர்களின் வங்கி கணக்குகளை மூடுமாறு மத்திய நிதி அமைச்சகம் வங்கிகளை கேட்டுக்கொண்டதாக அண்மையில் தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைச்செய்தது.
இத்திட்டத்தின் கீழ் ‘ஜீரோ பேலன்ஸ்' (வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை) என்ற அடிப்படையில் வங்கி கணக்கு தொடங்க அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த சேமிப்பு கணக்கில் குறிப்பிட்ட தொகையை சேமிக்க நினைத்தால், டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டியும் வழங்கிப்படுகிறது. மேலும், கீழ் 2018-க்கு பிறகு இத்திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு தொடங்கியவர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கு விபத்து காப்பீடும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கணக்கை பொறுத்தவரை அரசு நலத்திட்டங்கள் வழங்கும் மானியங்கள் மட்டுமே இதில் வரவு வைக்கப்படும். இத்தகைய சூழலில், பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை முடக்குமாறு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியதாக வெளியான தகவல் பலரையும் அதிர்ச்சி அடையச்செய்தது.
இந்த நிலையில் ஜன் தன் வங்கி கணக்குகள் மூடப்படும் என்று பரவிய தகவலை மத்திய நிதி அமைச்சகம் மறுத்துள்ளது. பிரதமரின் மக்கள் வங்கி கணக்கு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில் இதுவரை எந்தவித வரவு, செலவு தொடர்பான பரிவர்த்தனை மேற்கொள்ளாத வங்கி கணக்குகளை முடித்து வைக்க வங்கிகளுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என மத்திய நிதி சேவைகள் துறை தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை நிதி சேவைகள் துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இத்திட்டத்தின் கீழ் வங்கி கணக்குகள் தொடங்கி எந்த பரிவர்த்தனையும் மேற்கொள்ளாதபட்சத்தில் அவர்களின் கணக்குகளை செயல்பட வைக்க கணக்கு வைத்திருப்பவர்களை தொடர்பு கொள்ள வங்கிகளை அறிவுறுத்தி உள்ளதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.