உத்திரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மகாகும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 14ம் தேதி தொடங்கிய இந்த கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை சுமார் 45 நாட்கள் நடைபெறுகிறது.
இதுவே உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக திகழ்கிறது. அங்கு திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் சுமார் ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மகா கும்பமேளாவின் 16-வது நாளான நேற்று ஒரே நாளில் 3.90 கோடி பேர் புனித நீராடினர்.
இன்று தை அமாவாசை என்பதால் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் அதிக கூட்டம் கூடியது. சுமார் 10 கோடி பேர் ஒன்று கூடினர். திடீரென திரிவேணி சங்கமத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். ஒருவர் மீது ஒருவர் விழ என சுமார் 30 பெண்களுக்கு காயம் ஏற்பட்டது,.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருவதால் அங்கு தற்காலிகமாக குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் நகருக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். புனித நீராட தடை விதிக்கப்பட்டது. பரபரப்பு அடங்கிய பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இங்கு நிறுத்திவைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் திடீரென்று தீப்பற்றி எரிந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த பணியாளர்கள் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் தீ பரவாமல் தடுத்துவிட்டனர். ஆனால், ஏற்கனவே மகா கும்பமேளாவில் இரண்டு முறை தீ விபத்து ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து மூன்றாவது முறை தீ விபத்து ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவங்கள் குறித்து ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை போன் செய்து மோடி விசாரித்தார். மேலும் நெரிசல் ஏற்பட்ட இடத்திற்கு கூடுதல் போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.