போலந்து நாட்டின் கலீஷ் நகருக்கு அருகிலுள்ள க்ரோட்ஸ்விக் காட்டில், வேடிக்கையாகத் தொடங்கிய ஒரு வேட்டை, போலந்தின் மிக முக்கியமான தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது. "டெனர் காலிஷ்" என்ற வரலாற்று ஆர்வலர் குழு, ஒரு வேடிக்கைக்காக மட்டுமே காட்டில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் ஐந்து வாரங்களுக்குள், அவர்களின் "வேடிக்கையான" தேடுதல் உண்மையான தொல்பொருள் கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது.
அவர்களின் முதல் பெரிய கண்டுபிடிப்பு ரோமானிய காலத்தைச் சேர்ந்த ஒரு பழமையான போர் வீரனின் கல்லறை. அதில், அந்த போர்வீரனின் எலும்பு கூடு, ஈட்டி மற்றும் கேடயம் போன்றவை இருந்தன. சில நாட்களுக்குப் பிறகு, 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நாணயம் மற்றும் ஒரு சிறிய களிமண் பானையை குழுவினர் கண்டெடுத்தனர்.
கலீஷ் பல்கலைக்கழகத்தில் அந்தப் பானையைத் திறந்தபோது, அதற்குள் 631 நாணயங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியது, ஒரு சிறிய நாணயம் கூட ஒரு பெரிய புதையலுக்கு வழிவகுக்கும் என்பதை இது நிரூபித்தது. ஜூன் மாத இறுதியில், மற்றொரு களிமண் பாத்திரம், மேலும் பல நாணயங்களுடன் மண்ணிலிருந்து வெளிப்பட்டது.
ஜூலை 12 அன்று உண்மையான திருப்புமுனை ஏற்பட்டது. குழு உறுப்பினர் மேட்யூஸ் தங்க நிறத்தில் மின்னும் ஒன்றைக் கண்டார். முதலில், அவர் அதை ஒரு வளையல் என்று நினைத்தார். ஆனால் நிபுணர்கள் அதை ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தூய தங்க நெக்லஸ் என்று பின்னர் உறுதி செய்தனர். 222 கிராம் எடை கொண்ட அந்த நெக்லஸ், ஒரு பானைக்குள் மடித்து வைக்கப்பட்டிருந்தது. அதன் கொக்கி மற்றும் வளைய வடிவமைப்பு சேதமடையாமல் இருந்தது அவர்களுக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த ஆபரணம் கோதிக் மக்களுக்குச் சொந்தமானது. கோதிக் மக்கள் போலந்து நாட்டின் சில பகுதிகளில் ஸ்லாவிய மக்களுடன் இணைந்து வாழ்ந்த ஒரு ஜெர்மானிய சமூகம் ஆவர். இதுபோன்ற கோதிக் நெக்லஸ்கள் ஸ்காண்டிநேவியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், போலந்தில் இதுவே முதல் கண்டுபிடிப்பு ஆகும்.
இந்த தங்கப் புதையல் இனி கலீஷ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும். நாணயங்கள், ஆயுதங்கள் மற்றும் கல்லறை நினைவுச்சின்னங்களுடன் சேர்ந்து, இந்த நெக்லஸ் அப்பகுதியின் பழங்கால வரலாற்றை விவரிக்கிறது. ஒரு மறக்கப்பட்ட போர்வீரனின் கல்லறை முதல் ஒரு பிரகாசமான கோதிக் வம்சத்தின் ஆபரணம் வரை, க்ரோட்ஸ்விக் காடு ஒரே கோடையில் ஒரு ஆயிரத்திற்கும் மேலான வரலாற்றை வெளிப்படுத்தியுள்ளது.