
கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு , ஜூலை மாதத்தில் சீனாவின் தொழிற்சாலை உற்பத்தி குறையத் தொடங்கியுள்ளது. இதனுடன் சேர்ந்து சில்லறை விற்பனையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சீனப் பொருளாதாரம் சரிவை நோக்கி செல்கிறது. இதனால் 2025 ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.6% ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
சரியும் உள்நாட்டு பொருளாதாரத்தை மீட்டு எடுக்கவும், 19 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு வெளிநாட்டு எதிர்ப்புகளால், பாதிக்கப்படாமல் தடுக்கவும் சீன பொருளாதார நிபுணர்கள் மண்டையை பிய்த்து யோசித்து வருகின்றனர். சீனாவின் தேசிய புள்ளி விவர மையம், ஜூலை மாதத்தில் தொழில்துறை உற்பத்தி ஆண்டுக்கு 5.7% வளர்ச்சியில் இருந்ததாக தரவுகளை காட்டியுள்ளது. இது 2024 ஆம் ஆண்டு நவம்பரை விட மிகக் குறைந்த அளவாகும். மேலும் ஜூன் மாதத்தில் உற்பத்தி 6.8% ஆக இருந்து தற்போது ஒரே மாதத்தில் குறைந்துள்ளது.
ஜூலை மாதத்தில், சில்லறை விற்பனையிலும் தேசிய நுகர்வு 3.7% ஆகக் குறைந்துள்ளது. இது டிசம்பர் 2024 க்குப் பிறகு மிகக் குறைந்த வளர்ச்சியாக உள்ளது. ஜூன் மாதத்தில் 4.8% ஆக வளர்ச்சி வேகம் குறைந்து விட்டது.
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்த வர்த்தக போர் நின்றாலும், தற்காலிகமாக 90 நாட்களுக்கு சலுகைகள் நீட்டிக்கப்பட்டது. சீனப் பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பு குறைந்துள்ளது. ஆனாலும், உள்நாட்டு சரிவு மேம்படவில்லை. சீனப் பொருளாதாரம் அரசாங்கத்தையே பெருமளவில் நம்பியுள்ளது; அதுவே பிரச்சனையாக சில நேரங்களில் உள்ளது. வர்த்தக போர் நிறுத்தத்தை முன்னிறுத்தி சீனா அளவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்து விட்டது.
சீன நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகளை கட்டுவதற்குப் பதிலாக ஏற்கனவே இருக்கும் கூடங்களில் இயங்க வேண்டும் என்று சீன பொருளாதார நிபுணர் யுஹான் ஜாங் வலியுறுத்தியுள்ளார். சீன அரசாங்கம் உள்நாட்டு நுகர்வை ஊக்குவிப்பதற்கும் அதிகப்படியான விலை போட்டியைக் கட்டுப்படுத்தவும் உறுதிமொழிகளை வழங்கியுள்ளது. சீன அரசு அதிகாரிகள் 2025 ஆம் ஆண்டு இலக்கான சுமார் 5% வளர்ச்சியை நோக்கி செல்ல படாதபாடு படுகிறார்கள். டார்க்கட் டார்ச்சர் அங்கயும் உண்டு போல, பாவம் தான்!
சீன உற்பத்தியாளர்கள் தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்து விட்டு , சரக்குகளை விற்க போட்டி போட்டு விலைக் குறைப்பை செய்கின்றனர். இதனால் நுகர்வோர் மத்தியில் விலை மலிவு எதிர்பார்ப்புகள் அதிகரிப்பதாக அரசு அதிகாரிகள் கவலைப்படுகின்றனர். இதனால், மலிவான பொருட்களை மட்டுமே நுகர்வோர்கள் வாங்குவார்கள், விலை உயர்ந்த பொருட்கள் நகர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் கவலை கொள்கின்றனர்.
சீனாவில் வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளர்களும் 20 ஆண்டுகளில் முதல் முறையாக ஜூலை மாதத்தில் குறைந்துள்ளனர். இது தனியார் துறையின் தேவை பலவீனமாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. சீனர்கள் சொத்துக்கள் வாங்குவதில் தேக்கம் நிலவுகிறது. சீன ரியல் எஸ்டேட் துறையும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. ஜூன் மாதத்தில் 3.2% சரிவை கடந்து ஜூலை மாதத்தில் 2.8% அளவில் சரிந்ததுள்ளது.
சீனாவின் 2025 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டின் வளர்ச்சி 5.0% லிருந்து 4.6% ஆகக் குறையும் என்றும் , 2026 ஆம் ஆண்டில் 4.2% ஆகக் குறையும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.