

கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மின்சார வாகனங்கள் பெட்ரோல் செலவை மிச்சப்படுத்துவதோடு, சுற்றுச்சூழலுக்கும் ஏற்றதாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வரவேற்பு இருந்தாலும், திடீரென இவை தீப்பற்றி எரிந்த சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இருப்பினும் இந்தப் பிரச்சினையை சரிசெய்து மீண்டும் எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் விற்பனையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. கடந்த 2014-15-ம் ஆண்டு நாடு முழுவதும் பதிவான மொத்த வாகனங்களில் 0.01 சதவீதம் மின்சார வாகனங்களாக இருந்தது. இது 2024-25-ம் ஆண்டு 7.3 சதவீதம் ஆக அதிகரித்து உள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்கள் பேட்டரியில் இயங்குவதால் அவ்வப்போது இவற்றை சார்ஜ் செய்ய வேண்டியது அவசியம்.
மின்சார இருசக்கர வாகனங்களுக்கு சிலர் வீட்டிலேயே சார்ஜ் செய்து கொள்கின்றனர். ஆனால் மின்சார ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு வீட்டிலேயே சார்ஜ் செய்வது சற்று கடினம்.
தற்போது இந்தியாவில் மின்சார வாகனங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான சார்ஜிங் நிலையங்கள் போதுமான அளவுக்கு இல்லை. கடந்த 2022-ம் ஆண்டு நாடு முழுவதும் 1,200 சார்ஜிங் நிலையங்கள் இருந்தது. இது கடந்த ஆகஸ்டு மாதம் வரையிலான நிலவரப்படி 30,000 ஆக உள்ளது. இவற்றில் 15,550 சார்ஜிங் நிலையங்கள் செயல்பாட்டில் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. சரியாக பராமரிக்காதது, செயலிகள் மூலமாக பயன்படுத்துவதில் சிரமம், கட்டண விவகாரம், சார்ஜிங் ஏற்றுவதில் சிக்கல் உள்ளிட்டவை இதற்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது.
இந்தியாவில் 14,450 சார்ஜிங் நிலையங்கள் தான் பயன்பாட்டில் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை என வாகனங்கள் அதிகம் செல்லும் இடங்களில் உள்ள அந்த நிலையங்களை சுமார் 10 சதவீத வாகனங்களே பயன்படுத்துகின்றன. 1,000 மின்சார வாகனங்களுக்கு சீனாவில் 200-ம், அமெரிக்காவில் 55-ம், நார்வேயில் 29-ம் சார்ஜிங் நிலையங்கள் இருக்கின்றன.
ஆனால் இந்தியாவில் இது மிகவும் குறைவாக இருக்கிறது. நமது நாட்டில் 1,000 மின்சார வாகனங்களுக்கு வெறும் 5 சார்ஜிங் நிலையங்களே இருக்கின்றன. இதனை அதிகப்படுத்தினால்தான் மின்சார வாகனங்களை பயன்படுத்துபவர்கள் எந்தவித சிரமமும் சீரான இடைவெளியில் சார்ஜ் ஏற்றிக்கொண்டு, அதிக தூரம் பயணிக்க முடியும். இதற்கான வசதியை செய்தால், மின்சார வாகனங்களின் பயன்பாடும் கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.