
கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வரவேற்பு இருந்தாலும், திடீரென இவை தீப்பற்றி எரிந்த சம்பவங்கள் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும் இந்தப் பிரச்சினையை சரிசெய்து மீண்டும் எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் விற்பனையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. எலக்ட்ரிக் வாகனங்கள் பேட்டரியில் இயங்குவதால் அவ்வப்போது இவற்றை சார்ஜ் செய்ய வேண்டியது அவசியம். மின்சார இருசக்கர வாகனங்களுக்கு சிலர் வீட்டிலேயே சார்ஜ் செய்து கொள்கின்றனர்.
ஆனால் மின்சார ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு வீட்டிலேயே சார்ஜ் செய்வது சற்று கடினம். இந்நிலையில் பொதுவெளியில் சார்ஜ் சென்டர்களை அமைக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளைத் தற்போது வெளியிட்டுள்ளது.
மின்சார வாகனங்கள் பெட்ரோல் செலவை மிச்சப்படுத்துவதோடு, சுற்றுச்சூழலுக்கும் ஏற்றதாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் நாடு முழுக்க மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் சென்டர்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சார்ஜ் சென்டர்களை அமைக்க மானியம் வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
சார்ஜ் சென்டர் விதிமுறைகள் குறித்து மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பிரதம மந்திரியின் இ-டிரைவ் (PM E-Drive) திட்டத்தின் கீழ் நாடு முழுக்க 72,300 சார்ஜ் சென்டர்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் புழங்கும் இடங்களான அரசு கட்டடங்கள், போக்குவரத்து மையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் மின்சார வாகன பேட்டரி சார்ஜ் சென்டர்களை அமைக்க மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் கல்வி நிலையங்களில் சார்ஜ் சென்டர்களை அமைப்போருக்கு 100% மானியம் வழங்கப்படும். இருப்பினும் சார்ஜ் சென்டர்களை பொது பயன்பாட்டுக்கு விட்டால் மட்டுமே இந்த மானியம் கிடைக்கும்.
பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள், பொதுத் துறை துறைமுகங்கள், நகராட்சி வாகன நிறுத்துமிடங்கள், எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொநத்மான சில்லறை விற்பனை நிலையங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் இயங்கும் சுங்கச்சாவடிகளில் சார்ஜ் சென்டர்களை அமைப்போருக்கு 80% மானியம் வழங்கப்படும்.
சார்ஜ் சென்டர்களை அமைக்க வழங்கப்படும் மானியம் இரண்டு தவணைகளாக வழங்கப்பட உள்ளது. சார்ஜ் சென்டர்களின் கட்டமைப்புப் பணிகளின் போது முதல் தவணை வழங்கப்படும். பிறகு பணிகள் அனைத்தும் முடிந்து சார்ஜ் சென்டர்கள் பொது பயன்பாட்டுக்கு வரும்போது இரண்டாவது தவணை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.